முஸ்லிம் காங்கிரஸ் அரசியற் கட்சியாக, அங்கீகாரம் பெற்று 27 வருடம் - தாருஸ்ஸலாமில் விழா
-பி. முஹாஜிரீன்-
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியற் கட்சியாக அங்கீகாரம் பெற்று 27 வருடம் பூர்த்தியடைந்து 28 வது வருடத்தில் தடம் பதிப்பதையிட்டு எதிர்வரும் புதன்கிழமை (11) கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் மாபெரும் விழாவொன்று நடைபெறவுள்ளது.
தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டு ஒரு அரசியற் கட்சியாக அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற தினமான பெப்ரவரி 11ல் கட்சியின் தேசியத் தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் மாலை 4 மணிக்கு இவ்விழா நடைபெறவுள்ளதாக விழா ஏற்பாட்டாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய செயற்குழுவின் செயலாளருமான சியாட் ஹமீட் தெரிவித்தார்.
உயர்பீட உறுப்பினரான சியாட் ஹமீட் மேலும் தெரிவிக்கையில், 1988 பெப்ரவரி 11 ம் திகதி அங்கீகாரம் பெற்ற அரசியற் கட்சியாக பதிவு செய்யப்பட்ட இக்கட்சியின் பரிணாம வளர்ச்சியில் இன்று 8 பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை அந்தஸ்துள்ள, ராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள், 15 மாகாண சபை உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், ஒரு மாநகர சபை, 5 பிரதேச சபைகளின் நிர்வாகம் அடங்கலாக 300 இற்கு மேற்பட்ட உள்ளுராட்சி மன்றப் பிரிதிநிதிகள் மட்டுமல்லாமல், ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரபின் கனவை நனவாக்கிய முஸ்லிம் முதலமைச்சர் போன்ற அடைவுகளுடனான மக்கள் சக்தியைப் பெற்று பெரும் பலம் பொருந்திய ஜனநாயக அரசியல் இயக்கமாகத் திகழ்கின்றது.
இன்று இலங்கை அரசியலில் மூன்றாவது பலம் பொருந்திய அரசியற் கட்சியாக வீறு நடைபோடுகின்ற பேரியக்கமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சி பெற்றுள்ளதை யாரும் மறுக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், கட்சி முக்கியஸ்தர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரையும் இவ் விழாவில் கலந்து கொள்ளுமாறு விழா ஏற்பாட்டாளர் சியாட் ஹமீட் அழைப்பு விடுத்துள்ளார்.
Post a Comment