தன் உயிரை காப்பாற்றிய மனிதரை, கட்டிப்பிடித்து நட்பு பாராட்டும் பெண் சிங்கம் (வீடியோ)
தென் ஆப்பிரிக்க காடுகளில் சுற்றித்திரியும் வன விலங்கு ஆர்வலரான வேலண்டின் க்ரூனர் மூன்று வருடங்களுக்கு முன் தன் குடும்பத்தை பிரிந்த சிங்கக்குட்டி ஒன்றை கண்டெடுத்தார். வேட்டையாட தெரியாததால் நீண்ட நாட்களாக பட்டினி கிடந்த அந்த குட்டி சிங்கத்திற்கு உணவளித்து அதை தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் உள்ள மோடிசா வனவிலங்கு பராமரிப்பு அமைப்பிடம் ஒப்படைத்தார்.
அன்றிலிருந்து, சிர்கா என்ற பெயர் கொண்ட அந்த பெண் சிங்கம் வேலண்டின் மீது பாசம் கொண்டது. ஒவ்வொரு முறை அவர் அந்த சிங்கத்தின் கூண்டை திறக்கும் போதும் அது ஓடிவந்து அவரை கட்டிப்பிடிக்கும். தற்போது மூன்று வயதை சிர்சா எட்டியுள்ள போதும் தன்னை காப்பாற்றிய வேலண்டின் மீதான அதன் பாசம் மட்டும் குறையவே இல்லை.
140 கிலோ எடையுள்ள சிர்கா இப்போதும் வேலண்டினை பார்த்தால் பின்னங்கால்களால் எழுந்து நின்று கட்டிப்பிடித்து நட்பு பாராட்டுகிறது. அப்படி கட்டிப்பிடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் சிர்காவின் முகம் ஒரு குழந்தையை போல் பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருக்கிறது. இது மூன்று நிமிட வீடியோவாக யூ-டியூபிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 மில்லியன் பேர் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.
2014 இல் கூகுள் வலைதள தேடுதலில் அதிகம் தேடப்பட்ட நபர்களின் பட்டியலில் வேலண்டின் க்ரூனரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. மேலும் இவருக்கும் சிர்காவுக்கும் இடையேயான நட்பு தற்போது ஆறு பாகங்கள் கொண்ட ஆவணப்படமாக எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment