புதிய நிர்வாக மாவட்ட உருவாக்கமும், அதற்கான நாடாளுமன்றப் பலமும்
நமது நாட்டில் இன்று நடைமுறையில் இருந்துவருகின்ற இருபத்துஐந்து நிர்வாக மாவட்டங்களுக்குப் புறம்பாக இன்னுமொரு புதிய நிர்வாக மாவட்டத்தை பாராளுமன்றத்தின் சாதாரணப் பெரும்பான்மைப் பலத்துடன் உருவாக்க முடியும் என்றும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தான் விரும்பும் போது புதிய நிர்வாக மாவட்டத்தை தனது தத்துணிவின் அடிப்படையில் உருவாக்க முடியும் என்றும் சிலர் நம்புகின்றனர். இச்சிலரில் முக்கியமானவர்களாக அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள்,அரசியல் விமர்சகர்கள் எனப்படுவோரும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான எண்ணப்பாடுகள் மேற்கிளம்புவதற்கு ஏற்றவகையான நிகழ்வுகள் எமது நாட்டு அரசியல் களத்தில் நடந்திருக்கின்றது. இதற்கு பின்வரும் இரண்டு சம்பவங்களும் போதுமான உதாரணங்களாகின்றன.
1. இன்றைய அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை இழந்திருக்கும் நிலையில் கல்முனை-கரையோர நிர்வாக மாவட்ட உருவாக்க கதையாடலை அண்மைய (23.12.2014) அமைச்சரவை வரை முன்னெடுத்தமை (நன்றி.விடிவெள்ளி 24.12.2014)
2. கடந்த 2001 இல் மூன்றில் இரண்டு பலமில்லாத நிலையில் கல்முனை-கரையோர மாவட்டம், மஹியங்கணை மாவட்டம் என இரு நிர்வாக மாவட்டங்கள் உருவாக்குவது தொடர்பில் அன்றைய பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் றிச்சட் பத்திரன முன்வைத்தமை. (தினகரன் 14.05.2001)
கல்முனை-கரையோர மாவட்டம் மற்றும் மஹியங்கணை மாவட்டம் என நிர்வாக மாவட்டத் தேவைகள் இருந்தாலும் கல்முனை-கரையோர மாவட்டம் பேச்சு மட்டும்தான் பெரும் அரசியல் பிரச்சினையாக மாறிவிடுவதையும் அது ஒரு அரசியல் பொறிமுறை அடையாளமாகவும் விமர்சனத்துக்குள்ளாகிவரும் அவலத்தைப் பெறுகின்றது. இருந்தாலும் அதுபற்றிய ஒரு விமர்சனப் பதிவாக இக்கட்டுரை முன்னிறுத்தப்படவில்லை.
மாறாக இலங்கையில் ஒரு புதிய நிர்வாக மாவட்டத்தை உருவாக்குவதில் இருக்கின்ற அரசியலமைப்புச் சட்டங்களையும் அதற்கான பாராளுமன்றப் பலத்தையும் ஆராய்வதே இப்பதிவின் முதல் நிலை நோக்காகும். இதனூடாக நிர்வாக மாவட்டம் ஒன்றை எப்படி? எப்போது? சாத்தியப்படுத்திக் கொள்ளலாம் என்பதை சிரமமின்றிப் புரிந்துகொள்ள இக்கட்டுரை வழி ஏற்படுத்தும்.
நமது நாட்டில் தற்போதுஇருபத்துஐந்து நிர்வாக மாவட்டங்களும், இருபத்திரெண்டு தேர்தல் மாவட்டங்களும் உள்ளன. இவற்றுள் நிர்வாக மாவட்டம் ஒன்றின் புதிய உருவாக்கம் பற்றியே இங்கு ஆராயப்படுகின்றது.
கடந்த 1833 இல் இருந்து நிர்வாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இருப்பினும் 1955ஆம் ஆண்டின் 22ஆம் இலக்க நிர்வாக மாவட்டச் சட்டம் தோற்றுவிக்கப்பட்டு முதலில் 20 நிர்வாக மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இவை ஒவ்வொன்றும் ஒரு அரசாங்க அதிபரின் பொறுப்பில் விடப்பட்டது. இந்த இருபது மாவட்டங்களுக்குப் புறம்பாக 1959இல் மொனராகாலை, 1961 இல் அம்பாறை, 1976 இல் முல்லைத் தீவு, 1978 இல் கம்பஹா ஆகிய நான்கு நிர்வாக மாவட்டங்களும் அமுலுக்கு வந்தன.
நமது இன்றைய நடைமுறை அரசியல் அமைப்பு (1978) அத்தியாயம் ஒன்றில் ஐந்தாவது உறுப்புரிமை 'குடியரசின் ஆள்புலம்' என்ற சிறிய தலைப்பில் பின்வருமாறு எடுத்துக்காட்டுகின்றது.
'இலங்கைக் குடியரசின் ஆள்புலமானது இருபத்துநான்கு நிர்வாக மாவட்டங்களையும் (அவற்றின் பெயர்கள் முதலாம் அட்டவணையில் தரப்பட்டுள்ளன) அதன் ஆள்புல நீர்பரப்புகளையும் கொண்டிருக்கும்'என்கின்றது.
முதலாம் அட்டவணையில் இருபத்துநான்கு நிர்வாக மாவட்டங்களும் பின்வரும் எண் வரிசையில் தரப்பட்டுள்ளது. 1.கொழும்பு 2.கம்பஹா 3.களுத்துறை 4.கண்டி 5.மாத்தளை 6.நுவரெலியா 7.காலி 8.மாத்தறை 9.ஹம்பாந்தோட்டை 10.யாழ்ப்பாணம் 11.மன்னார் 12.வவுனியா 13.முல்லைத்தீவு 14.மட்டக்களப்பு 15.அம்பாறை 16.திருகோணமலை 17.குருநாகல் 18. புத்தளம் 19. அனுராதபுரம் 20. பொலனறுவை 21.பதுளை 22.மொனராகாலை 23. இரத்தினபுரி 24.கேகாலை.
ஆகவே நமது அரசியலமைப்பின் நிர்வாக மாவட்டங்களின் எண்ணிக்கையையும் அதன் பெயர்களையும் உட்படுத்துவதும் குறிப்பிடுவதும் யாப்பின் ஓர் அங்கமாக நிரூபிக்கின்றது. இதனை மேலும் அத்தாட்சிப்படுத்தும் வகையில் 1984 இல் உருவான கிளிநொச்சி மாவட்டம் இலங்கை அரசியலமைப்பின் ஏழாவது திருத்தமாக அமையப் பெற்றிருப்பதைக் காணலாம்.
அதாவது இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பில் அத்தியாயம் ஒன்றில் ஐந்தாம் உறுப்புரைக்கு 1983.10.04 ஆந் திகதி ஊர்ஜிதம் செய்யப்பட்ட ஏழாவது திருத்தத்தின்படி பின்வரும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றது.
(அ) இருபத்துநான்கு எனும் சொற்களுக்குப் பதிலாக இருபத்தைந்து எனும் சொற்களை இடுவதன் மூலம்.அத்துடன் (ஆ) ஆள்புல நீர் பரப்புக்களையும் கொண்டிருக்கும் எனும் சொற்களுக்குப் பதிலாக பின்வருவதனை இடுக :- ஆள்புல நீர்பரப்புக்களையும் கொண்டிருக்கும் ஆயின் பாராளுமன்றம் தீர்மானத்தினால் தீர்மானிக்க கூடியவாறாக வௌ;வேறான நிர்வாக மாவட்டங்களை அமைக்கும் வகையில் அத்தகைய நிர்வாக மாவட்டங்கள் உட்பிரிவாக பிரிக்கப்படலாம் அல்லது ஒன்றிணைக்கப்படலாம்.
அரசியலமைப்பின் முதலாம் அட்டவணையானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படுகின்றது. (அ) அவ்வட்டவணையில் 10-யாழ்ப்பாணம் என்னும் விடயத்தை உடனடுத்து 11.கிளிநொச்சி என்னும் விடயத்தை உட்புகுத்துவதன் மூலம்: அத்துடன் (ஆ) அவ்வட்டவணையில் 1-24 என்னும் விடயங்களை அவ்வட்டணையின் முறையே 12-25என்னும் விடயங்களாக மீள் இலக்கமிடுவதன் மூலம்.
ஆகவே நாடாளுமன்றத்தின் தீர்மானத்தினால் தீர்மானிப்பதன் ஊடாக ஒரு புதிய நிர்வாக மாவட்டத்தை தோற்றுவிக்க முடியும் என்பதை எடுத்துக்காட்டுவதுடன் இருபத்தைந்து நிர்வாக மாவட்டங்களுக்குப் புறம்பாக உருவாக்கப்படும் இன்னுமொரு நிர்வாக மாவட்டத்தின் தொகையையும்,பெயரையும் அரசியலமைப்புக்கு கொண்டுவரும் புதிய திருத்தத்தின் மூலம் உறுதிப்படுத்தி அத்தாட்சிப்படுத்திக் கொள்ளும் தேவை இருப்பதையும் நமக்கு இது சுட்டிக்காட்டுகின்றது.
நமது நடைமுறை அரசியலமைப்புக்கு திருத்தம் கொண்டுவருவதற்கு இரண்டுவிதமான முறைமைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இது தொடர்பாக அரசியலமைப்பின் பனிரெண்டாம் அத்தியாயத்தின் 82ஆம்,83ஆம் உறுப்புரைகள் பேசுகின்றது. அவைகள் பின்வருமாறு காணப்படுகின்றது.
82: (5) அரசியலமைப்பின் ஏதேனும் ஏற்பாட்டைத் திருத்துவதற்கான அல்லது அரசியலமைப்பை நீக்குவதற்கும் மாற்றீடு செய்வதற்குமான ஒரு சட்டமூலம், அதற்கு சாதகமாக அளிக்கப்படும் வாக்குகளின் எண்ணிக்கை, உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் (சமூகமளிக்காதோர் உட்பட) மூன்றில் இரண்டுக்கு குறையாததாக இருப்பதுடன்...
82: (7) இந்த அத்தியாயத்தில் திருத்தம் என்பது நீக்கம்,மாற்றம் அத்துடன் சேர்ப்பு ஆகியவற்றையும் உள்ளடக்கும்.
இதன்படி புதிய கல்முனை-கரையோர மாவட்டமாகினும் மஹியங்கனை மாவட்டமாகினும் அவற்றை உருவாக்கி அரசியலமைப்பில் சேர்ப்பதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் வேண்டும் என்பதை மேற்படி உறுப்புரைகள் மிகவும் தெளிவாக முன்வைக்கின்றது.
ஆயின் புதிய நிர்வாக மாவட்டங்களை பாராளுமன்றத்தின் தீர்மானத்தின் ஊடாக கொண்டுவருவதற்கு மூன்றில் இரண்டு பலமுள்ள அரசாங்கத்தினால்தான் சாத்தியமாக்கக் கூடிய ஒரு செயற்பாடாகவும் இது அமைந்துள்ளது. மாறாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியின் தத்துணிவின் அடிப்படையில் புதிய நிர்வாக மாவட்டம் எதனையும் கொண்டுவர முடியாது என்பது திட்டவட்டமானது.
அரசியலமைப்பில் காணப்படும் 1ஆம்,2ஆம்,3ஆம்,6ஆம்,7ஆம்,8ஆம்,9ஆம்,10ஆம்,11ஆம்உறுப்புரைகளும் 30ஆம் உறுப்புரையின் இரண்டாம் பிரிவும் 62ஆம் உறுப்புரையின் 2ஆம் பிரிவுகளினதும் ஏற்பாடுகளைத் திருத்துவதற்கு மூன்றில் இரண்டு நாடாளுமன்றப் பலத்துடன் சர்வஜன வாக்கெடுப்பு – மக்கள் தீர்ப்பினாலும் அங்கீகரிக்கப்படல் வேண்டும் என்பதை அரசியலமைப்பின் 83ஆம் உறுப்புரையின் அ,ஆ பிரிவுகள் இன்னும் உறுதிபடத் தெரிவிக்கின்றது.
இதுவரை நடைமுறை அரசியலமைப்புக்கு 18 திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இவற்றில் 16 வரையான திருத்தங்கள் 1977 நவம்பர் 20ஆம் திகதி தொடக்கம் 1988 டிசம்பர் 17ஆம் திகதி வரைஅத்தாட்சிப்படுத்தப்பட்டவைகளாகும். இக்காலத்துக்குரிய பாராளுமன்றத்தின் அரசாங்கத்தின் பலம் என்பது ஆறில் ஐந்தாகும். இது 168 மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் 140 ஆசனங்களை கைப்பற்றியே ஆட்சியாகும். இதில் மூன்றில் இரண்டு பலம் உள்ளடங்கி இருப்பது வெளிப்படையானது.
17வது அரசியலமைப்புத் திருத்தம் 2001.10.03ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டதாகும். இக்காலப் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியின் பாராளுமன்றப் பலம் என்பது 114 ஆகும். இது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லாதது. இதனால் 17வது திருத்தம் நாடாளுமன்றத்தில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டது. இதற்குள் மூன்றில் இரண்டு பலம் உள்ளடங்கிவிடுகிறது என்பதும் தெளிவாகிறது. இச்சட்டம் பல்வேறு காரணிகளினால் நடைமுறைக்கு வராது இருந்ததும் ஆகும்.
18வது அரசியலமைப்புத்திருத்தம் 2010.09.09 ஆம் திகதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது. இப்பாராளுமன்றத்திற்குரிய அரசாங்கத்திடம் 144 ஆசனங்களே இருந்ன. இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் அரசாங்கத்துடன் இணைத்து எடுக்கப்பட்டுத்தான் 18வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. ஆகவே மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் இன்றி நமது இன்றைய அரசியலமைப்பில் எந்தத் திருத்தத்தையும் கொண்டுவர முடியாது என்பதை இவைகள் இன்னும் உறுதியாக வலுப்படுத்துகின்றது.
இதன்படி மூன்றில் இரண்டு பலம் இல்லாத ஓர் அரசாங்கத்தினால் புதிதாக எந்த நிர்வாக மாவட்டங்களையும் உருவாக்கவே முடியாது.ஏனெனில் புதிதாகத் தோற்றுவிக்கப்படும் நிர்வாக மாவட்டத்தின் எண்ணிக்கை பெயர் என்பவைகள் அரசியல் அமைப்பில் சேர்க்கப்பட வேண்டிய தேவையுடைய விடயமாகும். இதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினாலேயே நிறைவேற்ற முடியும்.
Post a Comment