Header Ads



மகிந்த மீண்டும் எழுந்துவர, இடம் கொடுத்து விடக்கூடாது -

மகிந்த ஆட்சியை ஒழித்து இன்று நாம் பெற்றுள்ள இந்த வெற்றி ஒரு முதல் கட்ட வெற்றியாகும். நமது இந்த அரசாங்கம் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு இன்று புதன்கிழமை கொழும்பில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிங்கள, தமிழ் மொழிகளில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இது நம் அடுத்த கட்ட இலக்கு. இந்த இலக்கை நாம் அடையாவிட்டால், மகிந்த ராஜபக்ச அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பாராளுமன்றத்தில் பிரதமராக வந்து அமர்ந்து மீண்டும் ஆட்சி செய்ய தொடங்கி விடுவார்.

மகிந்த பெரும்பான்மை இன பெரும்பான்மை வாக்குகளையும், சிறுபான்மை இன சிறுபான்மை வாக்குகளையும் பெற்று தோல்வி கண்டுள்ளார். இதுதான் உண்மை.

எமது அரசு நிலைக்க வேண்டுமென்றால் பெரும்பான்மை இன பெரும்பான்மை வாக்குகளை நாம் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் பெற வேண்டும் என்பதை இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மற்றும் மைத்திரிக்கு வாக்களித்த சிங்கள மக்கள் மனதில் கொள்ள வேண்டும்.

மகிந்த ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வரலாம். அது அவர் உரிமை. ஆனால், இப்போது நாளுக்கு நாள் புதிது புதிதாக வெளிவரும் ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் நடத்திய ஊழல்கள் மற்றும் கூட்டுக்கொள்ளைகளுக்கு இவர்கள் சட்டத்தின் முன்னால் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

தம் இனத்தையும், மதத்தையும் பாதுகாக்கின்றோம் என்ற முகமூடியை போர்த்துக்கொண்டு இவர்கள் நடத்திய மெகா கொள்ளைகளை பார்த்து இவர்களுக்கு வாக்களித்த சிங்கள மக்கள் திகைத்து நிற்கிறார்கள்.

இன்னும் சில நாட்களில் இவர்களது முகத்திரை முழுதும் கிழியும். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு எதிரான எங்கள் போராட்டம், இந்த தேர்தலுக்கு சற்று முன்னர் டிசம்பர் மாதம் நாம் அமைத்த பொது எதிரணி அரசியல் கூட்டணியுடன் ஆரம்பமாகியதல்ல. எமது போராட்டத்துக்கு பத்து வருடக்கால வரலாறு இருக்கின்றது.

நண்பன் நடராஜா ரவிராஜுடன் இணைந்து, மகிந்த ராஜபக்ச ஆட்சியின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக 2006ம் ஆண்டு எமது போராட்டத்தை ஆரம்பித்தோம். அந்த போராட்டம், அதே ஆண்டு நவம்பர் மாதம் ரவிராஜ் கொல்லப்பட்டதுடன் எழுச்சி பெற்றது.

அதேபோல் 2009ம் ஆண்டு ஜனவரியில் கொல்லப்பட்ட நண்பன் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையுடன் எமது போராட்டம் புதிய வடிவங்களை அடைந்தது.

இதுவே இன்று வளர்ச்சியடைந்து மகிந்த ராஜபக்ச ஆட்சியை இன்று வீழ்த்தியுள்ளது.

மக்கள் கண்காணிப்பு குழு, சுதந்திரத்துக்கான மேடை, எதிரணி எதிர்ப்பு இயக்கம், அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் ஆகியன வழிவந்த மகிந்த ஆட்சிக்கு எதிரான அலையே தேர்தலின் போது பொது எதிரணியை உருவாக்கியது. எம் இன்றைய வெற்றிக்கு பல்லாண்டுகளுக்கு முன்னர் தம் உயிரை கொடுத்து அடித்தளம் இட்டவர்களில் நடராஜா ரவிராஜ், லசந்த விக்கிரமதுங்க ஆகியோர் முக்கியமானவர்கள் என்பது வரலாறு.

இது எவரதும் தனிப்பட்ட வெற்றி அல்ல. இந்த வெற்றி மகிந்த ராஜபக்ச ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு எதிராக தம் உயிர்களையும், உடைமைகளையும், வாழ்வையும் இழந்த லசந்த, ரவிராஜ் உள்ளிடிட்ட பல்லாயிரக்கணக்கான ஜனநாயக போராளிகளின் வெற்றியாகும்.

அமைச்சரவையில் நான் இல்லை என்பது தொடர்பில் நமது மக்கள் மத்தியில் ஆதங்கம் இருப்பது எனக்கு தெரியும். எவரையும் ஆதங்கபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.

நமது கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கட்சியில் இருந்திருந்தால் இன்று சுய மரியாதையுடன் தலைநிமிர்ந்து அமைச்சரவையில் எமது கட்சி சார்பில் அமைச்சராக இருந்திருக்க முடியும்.

இனி நாம் கடந்த காலத்துக்கு போக முடியாது. நான் பாராளுமன்றில் இல்லாததன் காரணம் கடந்த பொது தேர்தலில் கண்டி மாவட்ட நாவலப்பிட்டிய தொகுதியில் எனக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறையாகும்.

இன்று கண்டியில் அதே நாவலப்பிட்டி தொகுதியில் அதே வன்முறை அரசியல்வாதி தோற்கடிக்கப்பட்டு, எதிரணி வென்றுள்ளது. அமைச்சரவையில் நான் இடம்பெற பாராளுமன்றத்தில் ஒரு வெற்றிடம் தேசிய பட்டியலில் ஏற்படவேண்டும்.

உண்மையில் இந்த தேர்தலில் மகிந்தவை எதிர்த்து சிங்கள வாக்குகளை கொண்டுவர பாரிய பணி புரிந்த ஜெனரல் சரத் பொன்சேகா கூடத்தான் இன்று பாராளுமன்றத்தில் இல்லாததால் அமைச்சரவையில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மக்களுக்கு அதிகாரத்துடன் பணியாற்ற பதவிகள் பெறுவது ஒரு தேவைதான். அதை குறைத்து மதிப்பிட முடியாது. ஆனால், அது ஒரு தேவைதானே தவிர, இலக்கு அல்ல.

இந்த தேர்தலில் எனது முதல் இலக்கு மகிந்த ராஜபக்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவதே. எமது இலக்கில் இன்று நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

பதவிகளை நோக்கிய அரசியல் நான் எப்போதும் செய்யவில்லை என்பது மக்களுக்கு தெரியும். இந்த ஆட்சி ஒரு இடைக்கால ஆட்சிதான். அடுத்த பொது தேர்தல் மூன்று மாதங்களில் நடைபெறவுள்ளது.

மேல்மாகாணத்தில் தனித்து நின்று நாங்கள் 51, 000 வாக்குகள் பெற்றோம். பாராளுமன்ற தேர்தலில் நான் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு ஒரு இலட்சம் வாக்குகளை பெற்று பெரும் வெற்றியுடன் பாராளுமன்றம் செல்வேன்.

எமக்கு வாக்குகளிக்க மக்கள் எதிர்பார்ப்புடன் இருப்பது எனக்கு தெரியும். அந்த பெரும் மக்கள் சக்தி இன்று எங்களிடம் இருக்கின்றது. அப்போது பதவிகள் நம்மை தேடி வரும்.

எனவே எந்த காரணத்தையும் கொண்டு நாம் மகிந்தவுக்கு மீண்டும் எழுந்து வர இடம் கொடுத்து விடக்கூடாது. அவ்விதம் நடந்து விட்டால், அது இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கே பெரும் பாதகமாக அமைந்துவிடும். இதை புரிந்துக்கொள்ளும் அரசியல் முதிர்ச்சி நமக்கு இருக்கிறது என்றார்.

No comments

Powered by Blogger.