கட்டுரையாளர்கள் கருத்துக்களை, முன்வைப்பதிலுள்ள விமர்சனங்கள்
-நவாஸ் சௌபி-
சமூகத்தின் பிரதிபலிப்பினை தங்கள் எழுத்துக்களில் கொண்டுவருகின்றவர்கள்தான் எழுத்தாளர்கள், சமூக எழுத்துக்கள் இன்று பல்வேறுபட்ட வகைப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. கல்வி, அறிவியல், அரசியல், வரலாறு, ஆய்வுகள், சமயம், இலக்கியம் என்று ஒவ்வொரு துறைசார் எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். இதில் அரசியல் சார் எழுத்துக்களை எழுதுகின்றவர்கள் அதற்கான விமர்சனங்களைச் செய்கின்ற போது சமகால அரசியல் சூழ்நிலைகளை வைத்தே தங்கள் கருத்துக்களை சமூகத்திற்கு கொண்டு செல்லும் நிர்ப்பந்தம் இருக்கிறது.
இவ்வாறு அரசியல் விமர்சன எழுத்துக்களை எழுதுகின்றபோது ஒரு கட்சியோடும் அதன் தலைமையோடும் உள்ள நிலைமைகளை எழுத முற்படுவது தவிர்க்க முடியாதது. குறிப்பாக முஸ்லிம் சமூக அரசியலை எடுத்துக்கொண்டால் பல்வேறு கட்சிகள் இருந்தாலும் அதில் முஸ்லிம் சமூகத்pன் பெரும்பான்மை மக்களின் அங்கீகாரத்தைப் பெற்ற கட்சி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற சமூகப் பொறுப்பும் அமானிதமும் அக்கட்சிக்கு இருக்கிறது.
அதனால் முஸ்லிம் சமூக அரசியலை விமர்சிக்கின்ற போது அதிகமாக முஸ்லிம் காங்கிரஸினதும் அதன் தலைமையினதும் போக்குகளை தங்கள் எழுத்துக்களில் கட்டுரையாளர்கள் கொண்டுவருவது இயல்பானதே. அதே நேரம் இவ்வாறான விமர்சன எழுத்துக்களை கட்சியின் விசுவாசிகள் அல்லது தலைமை மீது தீவிர பிடிப்புக்கொண்டவர்கள் எதிர்ப்பதும் அதனோடு உடன்படாத வெறுப்புக்களைக் காட்டுவதும் மறுபக்க இயல்பாகும்.
ஆனாலும் இப்படியானவர்களின் வெறுப்புகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் அப்பால் கருத்தியல் மற்றும் ஆய்வு ரீதியான கட்டுரைகளை எழுதுகின்றவர்கள் அத்தகைய எழுத்துக்களை மக்கள் உடனே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ அதற்கான பாராட்டுக்களை உடனே பிறவேண்டும் என்றோ எழுதுவதில்லை. ஏனெனில் அந்த எழுத்துக்கள் எதிர்கால அரசியல் ஆய்வுகளுக்கும் ஆவணரீதியான ஆதாரங்களுக்கும் எழுதப்படுகின்றவைகளாகவும் இருக்கின்றன.
எனவே இத்தகைய எழுத்துக்களில் உள்ள கருத்தியல் ரீதியான எதிர்வுகூறல்கள் இப்போது பிழை என்று தூரமாக்கப்பட்டாலும் சில எழுத்துக்கள் உரிய ரேத்தில் அதற்கான தகுதியான பெறுமானத்தைப் பெற்றுக் கொள்ளும். அதற்காகத்தான் சமகால அரசியல் குறித்து எழுதினாலும் அதனையும் தூரநோக்கான பார்வையோடு கட்டுரையாளர்கள் எழுத வேண்டும் என்ற பொறுப்போடு சில எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்கான முக்கியத்துவத்தை கொடுக்கிறார்கள்.
அப்படியானவர்கள் தலைவர்களின் விசுவாசத்திற்காகவோ தொண்டர்களின் விமர்சனங்களுக்காகவோ தங்கள் எழுத்துக்களை யதார்த்தத்திற்கு முரணான கருத்தக்களால் எழுத முடியாது. அதற்காகத்தான் உண்மைகள் கசப்பானவை என்றும். யதார்த்தவாதி வெகுசன விரோதி என்றும் எழுத்தாளர்கள் சில நேரங்களின் தங்களின் நிலையினை வெளிப்படுத்த சொல்லிக் கொள்வதுண்டு.
இதிலும் குறிப்பாக வாராந்த பத்திரிகைகளுக்கான அரசியல் கட்டுரைகளை எழுதுகின்றவர்கள் நாளாந்த அரசியல் போக்குகளையும் அதன் நகர்வுகளையும் அது ஏற்படுத்தும் சமூகத் தாக்கங்களையும் பார்த்து எழுதும் நிர்ப்பந்தம் இருக்கிறது. அப்போது அரசியலில் எந்தவிடயம் பேசுபொருளாக இருக்கிறதோ அதனைப் பற்றிய கருத்தியல் ஆய்வுகளைத்தான் அவர்கள் எழுத முடியும் இதுவே ஒரு ஊடக எழுத்தின் தேவை.
இதன்படி இலங்கை அரசியலில் முஸ்லிம் கட்டுரை எழுத்தாளர்கள் இன்றுள்ள தேர்தல் சூழலில் மஹிந்தபற்றியோ,மைத்திரிபற்றியோ,சம்பந்தன்பறியோ எழுதுவதற்கு மேலாக அவர்கள் முஸ்லிம் சமூக அரசியலில் உள்ள கட்சிகளினதும் தலைமைகளினதும் அரிசியல் நடவடிக்கைகளையே அதிகம் எழுத வேண்டிய தேவை இருக்கிறது. அதிலும் குறிப்பாக முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சமூகக் கட்சி என்றால் அது எடுக்கும் தீர்மானமும் அதன் அரசியல் நகர்வுகளும் முழு முஸ்லிம் சமூகத்தையும் அரசியல் ரீதியாக பிரதிபலிப்பதனால் அதற்கான கருத்துக்களையும் விமர்சனங்களையும் கட்டுரையாளர்கள் முன்வைப்பதில் மாற்றுக்கருத்து உள்ளவர்கள் அதன் நியாயத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மாறாக, எழுதுகின்றவர்கள் எதற்கெடுத்தாலும் முஸ்லிம் காங்கிரஸினையும் அதன் தலைமையினையும்தான் விமர்சிக்கின்றார்கள் என்று குறைகாண முயல்வது ஒரு ஊடக தர்மம் அல்ல. கட்டுரையாளர்களின் கருத்துக்கள்தான் இறுதியானது என்று நான் வாதிடவில்லை அவர்களது கருத்துக்களுக்கும் மாற்றுக்கருத்துக்கள் இருக்கலாம் எனவே அத்தகைய மாற்றுக் கருத்துக்களை அந்த எழுத்துக்களில் உடன்பாடில்லாதவர்கள் உடனே முன்வைக்க முயல்வது சமூகத்திற்கு இன்னும் தெளிவுகளைக் கொடுப்பதாக அமையும். அதைவிடுத்து கட்சிமீதும் தலைவர்கள் மீதும் கொண்டுள்ள விசுவாசத்திற்காக கட்டுரையாளர்களின் எழுத்துக்களில் உள்ள யதார்த்ததை விளங்காமல் கட்டுரையாளர்களை கண்மூடித்தனமாக விமர்சிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.
02.
இதனை இங்கு நான் குறிப்பிடக் காரணம் என்னவெனில் சககாலத்தில் என்னாலும் சில அரசியல் கட்டுரைகள் கருத்தியல் ரீதியாகவும் விமர்சனரீதியாகவும் முஸ்லிம் அரசியல் குறித்து பத்திரிகைகளிலும் குறிப்பாக சமூக ஊடகமான ஜப்னா முஸ்லிம் இணையத்தளத்திலும் எழுதப்பட்டு வருகின்றன.
இன்றுள்ள நவீன வாசிப்பானது இணையத்தளத்தினை நோக்கிய சமூக ஊடகங்களில் அதிகம் உள்ளதாலும் உலக அரங்கில் தமிழ் மொழி பேசும் முஸ்லிம் சமூகத்தினால் அறியப்பட்டு பேரளவான மக்களின் வரவேற்பை பெற்றிருக்கும் ஒரு இணைய ஊடகமாக ஜப்னா முஸ்லிம் இருப்பதனாலும் அதன் மூலம் உலக நாடுகளில் உள்ள இலங்கை முஸ்லிம்களுக்கும் எமது எழுத்துக்கள் செல்ல வேண்டும் என்றும் சமகால அரசியல் போக்குகளில் உள்ள கருத்தியல்கள் அவர்களுக்கும் எட்ட வேண்டும் என்றும் எனது அதிக எழுத்துக்களை நான் ஜப்னா முஸ்லிமை மையமாகக் கொண்டு எழுதகின்றேன்.
ஏனைய சில அரசியல் கட்டுரையாளர்களுக்கு நிகழ்வதுபோல் எனக்கும் முஸ்லிம் அரசியல் பற்றி எழுதகின்ற போது முஸ்லிம் காங்கிரஸ் பற்றியும் அதன் தலைமைபற்றியும் அதிகம் எழுத வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அத்தகைய எழுத்துக்களை இன்று சில கட்சி விசுவாசிகள் நேரடியாக என்னிடம் இல்லாமல் என்னைச் சார்ந்தவர்களிடத்தில் விமர்சிப்பதாக அறிகின்றேன்.
மேலும் கருத்தியல் ரீதியாக எழுதுகின்றபோது புரியவில்லை என்போரும் விமர்சன ரீதியாக எழுதுகின்றபோது பிடிக்கவில்லை என்போரும் எம்மில் பலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதிலும் கருத்தியலை எழுதுகின்ற அதே எழுத்து முறையில் விமர்சனரீதியாக எழுத முடியாது. ஆத்திரமும் கோபமும் அடைகின்றவனின் வார்த்தைகளில் நேர்த்தி இருக்காது என்பதுபோலதான் எழுத்தாளர்களும் சமூக நோக்கோடு அமையாத அரசியல் முடிவுகளுக்காக ஆத்திரப்படுகின்ற போது அதற்கான விமர்சனத்தை அந்தப் பாணியில் எழுத வேண்டியதும் ஒரு ஊடகத் தேவையாகும்.
ஆனாலும் சமகாலத்தில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து நான் எழுதிய கட்டுரைகளில் முஸ்லிம் காங்கிரஸ் அதன் முடிவினை அறிவிக்காமல் காலத்தைக் கடத்துவது சிறந்த முடிவு என்றும் அதனை தபால் மூல வாக்களிப்பிற்கான மனச்சாட்சிப்படி வாக்களியுங்கள் என்ற அறிவிப்பு வரை ஹக்கீம் நிறைவேற்றி வந்தார் என்றும் அவரை சரிகண்டு சாணக்கியமான ஒரு தலைவராக அவருக்கான பாராட்டுக்களை அண்மைக்கால எனது எழுத்துக்களில் முன்வைத்துமுள்ளேன்.
மாத்திரமல்லாமல் மஹிந்தமீது கொண்ட எதிர்ப்பினால் முஸ்லிம் மக்கள் தங்கள் தேர்தல் முடிவினை முஸ்லிம்காங்கிரஸின் முடிவுக்கு கட்டுப்படாமல் அதன் முடிவினை அறிவிப்பதற்கு முன்பு எடுத்து, சிங்கள மக்களுக்கான ஒரு ஜனாதிபதியை வெற்றிபெறச் செய்வதற்கு நமது கட்சி அரசியலின் அடையாளத்தை பறிகொடுத்துவிட்டோம் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சமூக தேவையை உணர்ந்தும் எழுதி இருக்கின்றேன்.
(இவற்றை ஜப்னா முஸ்லிம் பதிவுகளை சற்று பின்னோக்கி வாசித்தால் அறியலாம்.)
இப்படிப் கட்சியையும் தலைமையையும் சரிகாணுகின்ற போது அல்லது பாராட்டுகின்ற போது அதனைப் பாராட்டுகின்றவர்கள் அல்லது அதில் சந்தோசப் படுகின்றவர்கள் கட்சியையும் தலைமையையும் விமர்சிக்கின்ற போது உள்ள கருத்துக்களையும் யதார்தரீதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் மாறாக அதற்கு மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் நாங்கள் கூறிய கருத்துக்களைக் கூறி அதனை மறுக்க வேண்டும்.
இதைவிடுத்து கட்சியையும் தலைமையையும் விமர்சிக்க கூடாது என்று மொட்டையாகச் சொல்வதில் அர்த்தமில்லை. ஏனென்றால் நாங்கள் கட்சியையும் தலைமையையும் கண்மூடித்தனமாக பாராட்டவுமில்லை விமர்சிக்கவுமில்லை. எங்களுக்கு சரி என்று பட்டால் பாராட்டவும். பிழையாகப் பட்டால் விமர்சிக்கவும் செய்கின்றோம்.
இதில் எங்களுக்கு சரி என்று படுவது பலருக்கு பிழை என்று படலாம், எங்களுக்குப் பிழை என்று படுவது பலருக்குச் சரி என்று படலாம். அது அவர் அவருடைய இருப்பை பொறுத்தது. இப்போது நாங்கள் சொல்வது பிழை என்றுபட்டாலும் அதுவே ஒருநாள் சரி என்றும் ஆகலாம் என்பதற்கு எனது எழுத்தில் இருந்த ஒரு உதராணத்தை இங்கு குறிப்பிடுவது சிறப்பு எனக் கருதுகின்றேன்.
'முஸ்லிம்களின் தீர்மானம் நியாயமானது முஸ்லிம் கட்சிகளின் முடிவு சரியானதா?' எனும் தலைப்பில் டிசம்பர் 07 ஆம் திகதி ஜப்னா முஸ்லிமில் பதிவான எனது கட்டுரையில் நான் ஓரிடத்தில் மிகத் தெளிவாக குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் பின்வருமாறு :
· ...... முஸ்லிம் காங்கிரஸ் கரையோர மாவட்டக் கோரிக்கையை மஹிந்தவிடம் விடாப்பிடியாகக் கேட்டு அதனை வழங்க அவர் மறுத்ததன் காரணமாக இன்று மைத்திரியோடு இணைந்திருக்கிறார்கள். எனவே மைத்திரி இந்த நாட்டைத் துண்டாடி முஸ்லிம்களுக்கு தனியான அதிகார பகிர்வினை வழங்க உடன்படிக்கை செய்திருக்கிறார். எனவே சிங்கள மக்கள் மைத்திரிக்கு அளிக்கும் வாக்குகள் ஒவ்வொன்றும் இந்த நாட்டைக் கூறுபோடும் சம்மதத்தை அளிக்கும் வாக்குகளாகும் என்று மஹிந்த தரப்பினர் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை மைத்திரிக்கு எதிராகச் செய்வார்கள்.
· அப்போது சிங்கள மக்கள் இதை ஒரு பொருட்டாகக் கூறி தங்கள் வாக்குகளை நாட்டின் சுதந்திரத்தைக் காத்து சிங்கள பௌத்த பெரும்பான்மை ஆட்சியை செய்யும் மஹிந்தவை தொடர்ந்தும் ஆட்சியில் வைத்திருக்க விரும்பி மஹிந்தவுக்கே அளித்தால், மஹிந்தவை தோற்கடித்து மைத்திரியின் ஆட்சியை உருவாக்க எதிர்பார்க்கும் பெரும்பான்மை முஸ்லிம்களின் புழப்பில் மண்ணைப் போட்ட கதையைத்தான் முஸ்லிம் காங்கிரஸ் கேட்க வேண்டும்.வழக்கம் போல மஹிந்தவுக்கு எதிரானவர்களின் பக்கம் முஸ்லிம் காங்கிரஸ் சென்று அவர்களைத் தோற்கடித்துவிடுகிறது என்ற மக்களின் சந்திக் கதைகளை மேலும் வலுப்படுத்துவதாகவே இதுவும் ஆகிவிடும்.....
அன்று இதனை குறிப்பிட்டு எழுதுகின்ற போது பலருக்கும் இதில் உடன்பாடில்லாமல் இருந்திருக்காலம். ஆனால் இன்று மைத்திரியின் பக்கம் முஸ்லிம் காங்கிரஸ் சென்றதும் மஹிந்த தொடக்கம் தயாரத்னவரைக்கும் எதைப் பேசுகின்றார்கள் என்று நான் குறிப்பிட்டு கூறத் தேவை இல்லை இப்பொது ஊடகமெல்லாம் அந்த இனவாதப் பேச்சுக்கள்தான் பிரசுரமாகின்றன. இதற்கு ஹக்கீம் பதிலளித்து வியாழக்கிழமை முதலாம் திகதி செய்தியாளர்களிடத்தில் பேசுகின்ற போது இது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் என்று அதனை ஏற்றுக்கொண்டு அதற்கான மாற்றுக்கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்.
இந்த இனவாதப் பிரச்சாரம் மஹிந்தவுக்கான வாக்குகளை சிங்கள மக்களிடத்தில் அதிகரிக்கும் என்றுதான் நாங்கள் இந்த தவறைச் செய்யாது பொறுமையாக இருக்கும்படி வேண்டினோம். இதன் நியாயத்தை இன்னும் புரியாமல் நாங்கள் கண்மூடித்தனமாகத்தான் விமர்சிக்கின்றோம் என்று யாராவது கருதினால் அதற்கும் ஒரு மேலதிக உதாரணம் இருக்கிறது.
18வது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்து அந்த சட்டத்திருத்தம் ஏற்பட காரணமாக இருந்தது தாங்கள் செய்த பெரும் அரசியல் தவறாகும் என்று பல இடங்களில் ஹக்கீம் தன்னைத் தானே நொந்துகொண்டது உண்டு. இறுதியாக மைத்திரியை ஆதரிக்கும் முடிவினை அறிவிக்கும் பத்திரிகையாளர்களிடத்தில் ஹக்கீம் இந்த தவறுக்காக மனம் நொந்து அதற்கு பிராயச்சித்தம் தேடத்தான் இந்த முடிவினை எடுத்தாக குறிப்பிடுகிறார்.
இப்படி தனது தவறை ஹக்கீம் உணர்ந்து வெளிப்டையாக அதனை ஒப்புக்கொள்ளும் பெருந்தன்மையில் அவர் இருக்கும்போது என்போன்ற கட்டுரையாளர்களின் விமர்சனங்களை அவர் சரிகாணாமலா இருப்பார்? அவரும் சமூகத்திற்காக அரசியல் செய்கிறார் நாங்களும் சமூகத்திற்காக எழுதுகிறோம். இதில் தனிப்பட்ட காழ்புணர்ச்சிகள் எதுவும் கிடையாது.
இத்தனை விமர்சனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் மீது முன்வைக்க காரணம், மஹிந்தவின் ஆட்சி மாற வேண்டும் என்ற எண்ணம் உள்மனதில் இருந்தாலும் மஹிந்த தோற்றுப்போவாரா? என்கிற உள் அச்சமும் அதன் மேல் இருப்பதனால் ஆகும். அதற்கான ஒரு அரசியல் பாதுகாப்பினை முஸ்லிம் காங்கிரஸ் மூலம் தேட முடியும் என்கின்ற நியாயத்தில் எழுதினோம்.
அதற்காகத்தான் எந்தவொரு அரசியல்வாதிக்குள்ளும் ஒரு எழுத்தாளன் இருக்க வேண்டும் என்றும் எந்தவொரு எழுத்தாளனுக்குள்ளும் ஒரு அரசியல்வாதி இருக்க வேண்டும் என்றும் சொல்ல வேண்டி இருக்கிறது. ஏனெனில் எழுத்தாளனை அவதானித்துக்கொண்டு அரசியல்வாதியும் அரிசயல்வாதியை அவதானித்துக்கொண்டு எழுத்தாளனும் இருந்துவிடுவார்கள் அல்லவா?
Post a Comment