Header Ads



'மஹிந்தர்' என்ற பெரிய தீமையை, 'மைத்ரி' என்ற சிறிய தீமை வெற்றி கொண்டிருக்கிறது..!

-அஷ்ஷெய்க் எம்.ஐ அன்வர் (ஸலபி) –கிழக்குப் பல்கலைக் கழகம்-

இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் ஏழாவது அதிபருக்கான தேர்தலில் ஆளுந்தரப்பு வேற்பாளருக்கும் எதிரணிகளின் பொது வேற்பாளருக்குமிடையில் கடும் அரசியல் சமர் நடந்த நிலையில் பொது வேற்பாளர் வெற்றிவாகை சூடியுள்ளார் என்பது நாமறிந்த விடயமே! 

உண்மையில் இத்தேர்தலில் வெற்றியாளரை தீர்மானிப்பதில் பெரும்பான்மை மக்களின் வாக்குகளின் பின்னணியில் இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிகள் காத்திரமான பங்களிப்பை நல்கியுள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

ஆளுந்தரப்பு வேற்பாளர் தோல்வியடைந்த நிலையில் தனது ஆதரவாளர்கள் முன் உரையாற்றிய போது ‘என்னை இந்நாட்டு சிறுபான்மை மக்களே தோல்வியடையச் செய்துள்ளனர்’ எனக் கூறியிருந்தமை இக்கருத்தை மேலும் வலுவடையச் செய்வதாக அமைந்திருக்கிறது. 

பொதுவாக உலக நாடுகளின் தலைவர்களை மிதமிஞ்சிய வகையில் கடந்த 9 ஆண்டுகளாக கடைபிடித்துவந்த ஒரு சர்வதிகார ஆட்சி முறைக்கு சாவுமணி கட்டிவிட்டட அக மகிழ்விலேயே இந்நாட்டை நேசிக்கும் நல்லாட்சியை விரும்பும் ஜனநாயக விழுமியங்களை மதிக்கும் பெரும்பான்மை மக்கள் உற்பட சிறுபான்மை மக்கள் பெரும் மூச்சு விடுவதை காணமுடிகிறது. 

எது எவ்வாறாயினும் முன்னால் அதிபர் மஹிந்தர் தனது ஆட்சிக்காலத்தில் கடந்த மூன்று தசாப்தங்களாக இந்நாட்டின் சகல துறைகளையும் காவு கொண்டிருந்த பயங்கரவாதத்தை ஒழித்து இனங்களுக்கிடையிலான சமாதானத்தை மீள கட்டியெழுப்பியிருந்தார் என்பதை யாராலும் மறுக்க முடியாது; அதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும்.

அதற்கு செஞ்சோற்றுக் கடனாக அவரை 2005 ஆம் ஆண்டுக்கடுத்ததாக 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றியடையச் செய்து மீண்டும் அதிபராக தெரிவு செய்து அழகு பார்த்துவிட்டோம் என்பதே பெரும்பாலானோரின் கருத்தாகும். 

அதே நேரம் மஹிந்தர் தனது ஆட்சிக்காலத்தில் கொண்டுவந்த 18 ஆவது சீர் திருத்தத்தினூடாக ஒருவர் எத்தனை முறையும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம் என்ற சட்டத்தைக் அறிமுகம் செய்திருந்தார். இதனால் அடுத்த முறையிம் தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு இந்நாட்டின் ஆட்சிக்கதிரையில் அமரலாம் என தீர்மானித்திருந்தார். கடந்த முறை அதிபர் தேர்தலில் தன்னை இந்நாட்டு மக்களுக்கு யுத்த கதா நாயகனாக காட்டி மக்களின் அபிமானத்தை பெற்று ஆட்சிக்கதிரை ஏற முடிந்த அவரால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எக்கோஷத்தை மக்கள் மத்தியில் முன்வைக்கலாம் என்ற பின்னணியில் தன்னை இந்நாட்டில் வாழக்கூடிய பெரும்பான்மை இன மக்களின் காவலாளியாக காட்ட முனைவதனூடாகவே அது சாத்தியமாகும் எனக் கருதியிருந்தார்.

இவ்வாறு அவர் சிந்திப்பதற்கு காரணமும் இல்லாமலில்லை. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் மஹிந்தர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமிசிங்க அவர்களை எதிர்த்து போராடிய சந்தர்ப்பத்தில் வடக்கில் வாழும் சிறுபான்மை தமிழர்கள் விடுதலைப் புலிகளால் வாக்களிக்க தடுக்கப்பட்ட நிலையில் தமிழர்களின் வாக்குகள் இன்றியே ஆட்சிப் பீடம் வர முடிந்தது. அதே போல் 2010 ஆம் ஆண்டும் இந்நிலை நீடிக்கவே இம்முறையும் இது சாத்தியமாகும் என அவர் போட்ட கணக்கு பிழைக்கவே செய்தது.

அதன் ஒரு கட்டமாகவே தனது அரசியல் வங்கரோத்து நிலையை தனிப்பதற்காககவும் மீண்டும் இந்நாட்டின் தலைமைப் பொறுப்பை தன் வசம் வைத்திருப்பதற்காககவும் இனங்களுக்கிடையிலான பயங்கரவாதத்தை தோற்கடித்த அவர் மதங்களுக்கிடையிலான பயங்கரவாதத்தை மீள் உருவாக்கம் செய்திருந்தார் என்பது கசப்பான உண்மையாகும். 

தான் மீண்டும் இந்நாட்டின் அதிபராக வருவதற்கு பெரும்பான்மை மக்களின் வாக்குகளே போதும் எனக் கருதியதால் பொது பலசேனா போன்ற பெளத்த தீவிராவாத அமைப்புக்கள் இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குற்படுத்துகின்ற வகையில் மேற்கொண்ட அடாவடித்தனங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் அவர் மெளன அனுமதி வழங்கியதிலிருந்து நாம் இதனை மிகத் தெளிவாக தெரிந்து கொள்ளலாம். 

அதிலும் குறிப்பாக இந்நாட்டில் 1000 வருடகால வரலாற்றைக் கொண்ட ஒரு சமூகத்தின் சமய சமூக பொருளாதார கல்வி அரசியல் துறைகளின் மீதான பெரும்பான்மை மக்களின் அட்டகாசங்களை அங்கீகரித்தமையே பின்னர் தனக்கு சாபக்கேடாக வரும் என்று அவர் சிறிதளவேனும் சிந்தித்திருக்கமாட்டார். இன்னும் சொல்லப் போனால் அவரது ஜோதிடர்கள் கூட இதனை எதிர்வுகூறியிருக்கமாட்டார்கள் என்றே கூற வேண்டும். இது ஆப்பிலுத்த குரங்கின் கதையாகவே அமைந்திருக்கிறது.

உண்மையில் சொல்லப்போனால் மஹிந்தரை தமிழ் சமூகம் எதிர்ப்பதற்கு காரணிகள் பல இருந்தாலும் முஸ்லிம்கள் அவரை எதிர்ப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்களைத்தான் கூற முடியும். ஒன்று முஸ்லிம்களின் உயிர் உடமைகளில் கை வைப்பதற்கு பேரினவாதிகளுக்கு அங்கீகாரம் அளித்தமை அதிலும் முஸ்லிம்களின் உயிர்நாடியாக தொழிற்படும் மஸ்ஜித்கள் மீது கை வைத்தமை இந்நாட்டு முஸ்லிம்களின் எதிர்ப்பை அவர் சம்பாதிக்க பிரதான காரணமாக அமைந்தது. 

இரண்டாவது ஒரு குடும்பமே ஜனநாயக விழுமியங்களை பேணக்கூடிய ஒரு நாட்டின் தலைமைப் பொறுப்பில் இருந்து கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை குட்டிச் சுவராக்கிக் கொண்டமையேயாகும். முன்னையது ஒரு வகையில் சுய நல சிந்தனையாக இருந்தபோதிலும் பிந்தியது பொது நலனை முன்னிறுத்தி நாட்டு நலனை கருத்திற் கொண்டதாக அமைந்திருப்பதை அறிவுஜீவிகள் ஏற்கவே செய்வர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இத்தேர்தலில் மஹிந்தருக்கெதிராக பிரயோகிக்கப்பட்டுள்ள பெரும்பான்மையினோரின் வாக்கு வங்கிகள் அமைந்திருக்கின்றன. 

பொதுவாக ஒரு குடும்பமே இந்நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் இருந்துகொண்டு இந்நாட்டின் நிதி-பொருளாதார வளங்களை பகல் கொல்லையடித்துக் கொண்டிருப்பதை நல்லுள்ளம் கொண்ட யாராலும் ஜீரணிக்க முடியாது. தனிப்பட்ட போக்குவரத்து உல்லாச வாழ்க்கை ஆடம்பரம் என செலவீனங்களுக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை வாரி வாரி செலவழிப்பதை இந்நாட்டு மக்கள் தம் கைகளை கட்டி பார்த்துக் கொண்டிருப்பார்கள் எனக் கருதிய காலம் மலை ஏறிவிட்டது என்பதைத்தான் இம்முறை அதிபர் தேர்தலில் மஹிந்தருக்கெதிரான   தமது வாக்களிப்பின் மூலம் மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள் என்று கூற வேண்டும். 

முன்னாள் அதிபர் மஹிந்தரின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட 12 பேர் மீது லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் அரச சொத்துக்களை வீணாக பயன்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜேவிபி தெரிவித்துள்ளது. ஊழல்களில் ஈடுபட்ட பலர் குடும்பத்தினருடன் வெளிநாடு சென்றுள்ளதாகவும் ஏனையோரை வெளிநாடு செல்லாது தடுக்கும் நோக்கில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை சூரையாடி தமது சுய இலாபங்களுக்காக சுகபோகங்களுக்காக துஷ்பிரயோகம் செய்த ஒரு கூட்டமே தற்போது நாட்டை விட்டு தமது மூட்டை முடிச்சுகளுடன் பறந்துகொண்டிருக்கின்றனர். பறக்க தயாராகிவருகின்றனர். இது மஹிந்தருக்கு மாத்திரமல்ல அவருக்கு பின்னால் வரக்கூடிய அனைத்து ஆட்சியாளர்களுக்கும் ஒரு தகுந்த பாடமாகவே அமையும் என்பதில் என்ளளவும் சந்தேகமில்லை.

கடந்த அதிபர் தேர்தலில் ஆளுந்தரப்பு வேற்பாளர் மஹிந்தரை பொது வேற்பாளர் மைத்ரிபால சிறிசேன தோற்கடித்த வேளை தாம் எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் கைகூடி விட்டதாக முழு நாட்டு மக்களே மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்த வேளை இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் தமது வெற்றிக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய முறையானது அவ்வளவு பொருத்தமான வகையில் அமையவில்லை என்று முஸ்லிம்களாலேயே குற்றம் சுமத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

பட்டாசுகளை தமது பிரதேசம் முழுவதிலும் வெடிக்கவைத்து இஸ்லாம் வெறுத்த வீன்விரயத்தில் ஈடுபட்டு அல்லாஹீத்தஆலா சூரா நஸ்ரில் மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்களை நெறிப்படுத்திய அணுகுமுறையை மறந்து வெற்றியில் பேதலித்து திரிந்தமை வன்மையாக கண்டிக்கத்தக்கது.

பட்டாசு வெடில்களிலிருந்து வெளிவரும் சப்தங்களால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதோடு. அதிலும் குறிப்பாக அவற்றிலிருந்து வெளியாகும் துர் நாற்றங்கள் மனிதர்களின் சுவாசத்திற்கு பெரும் அச்சுருத்தலாக அமைவதை நாம் மறந்து செயற்பட்டோம். இது ஒரு வகையில் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பாக கூட அமைந்துவிடும். இவ்வாறு பிற சகோதர்ரகளுக்கு .இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒரு முஸ்லிம் நடந்து கொள்வது இஸ்லாத்தின் பார்வையில் தடைசெய்யப்பட்டுள்ளது.

அதே நேரம் சிங்கள வாக்கில் 50% இற்கும் மேற்பட்ட வாக்கைப் மஹிந்தருக்கு அளித்த மக்களின் மனங்கள் புண்படும் வகையில் இவர்களின் செயற்பாடு அமைந்திருந்தமை இந்த இடத்தில் பிற மனிதர்களின் உணர்வுகளை முஸ்லிம்கள் மதிப்பதில் கடைபிடித்த நெறி பிறழ்வையே பிரதிபலிப்பதாக காணப்படுகிறது.

உண்மையில் முன்னாள் அதிபர் மஹிந்தர் மீதான அளவுகடந்த விமர்சனங்கள் ஜனநாயக வழிமுறைகளை மதித்து அவருக்கு வாக்களித்த சுமார் மில்லியனுக்கும் மேற்பட்ட பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளை காயப்படுத்துமாயின் நாம் பெரியதொரு தவறினை இழைத்துக் விட்டோம் என்பதை காலம் கடந்து கைசேதப்பட வேண்டிவரலாம்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிங்கள மக்கள் இதை உணர்ந்து வாக்களித்தால் எதிர்காலத்தில் சிறுபான்மை எதிபார்க்கும் மாற்றம் என்பது கானல் நீராகத்தான் இருக்கும் என்பதை நாம் நினைவுறுத்த விரும்புகிறோம்.

தவிர இதன் பின்னணியில் முன்னாள் அரச அதிபர் மஹிந்தர் அவர்களை தேசத்தை மீட்டெடுத்த பெரும்பான்மை இனத்தின் பாதுகாவலராக அடையாளப்படுத்தவும், இன்னும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் இடம்பெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக இனவாத அலைகளை ஏற்படுத்தவும் பல முயற்சிகள் இடம் பெற்றுவதை நாம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதேவேளை, முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் பாதுகாவலராக அதிபர் மைத்ரியை காட்சிப்படுத்தவும் மஹிந்தரின் ஆதரவாளர்களால் ஏக காலத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடந்துமுடிந்த அதிபர் தேர்தலுக்காக கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தை பலிக்கடாவாக்குவதற்கான பிரயத்தனங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டனவோ இன்று அதை விடவும் மும்முரமான முனைப்புக்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்பதனை முஸ்லிம்கள் உணர்ந்து செயற்படல் வேண்டும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சிவில் சன்மார்க்க மற்றும் அரசியல் தலைமைகள் இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வூட்ட பெரிதும் கடமைப்பட்டுள்ளனர் என்பதைக் கூறிவைக்க விரும்புகிறோம்.

முஸ்லிம் சமூகத்தைப் பொருத்தவரை அடுத்த இரு சமூகங்களை விடவும் மிகவும் பொறுப்பாகவும், அவதானமாகவும், தன்னடக்கமாகவும் தேசத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு முகம் கொடுக்க வேண்டும், 

முஸ்லிம் பிரதேசங்களில் அளவுகடந்த ஆரவாரங்கள் கொண்டாட்டங்கள், பட்டாசுகள், பாற்சோறு பகிர்தல், ஊடகங்களில் வீர வசனங்கள், மார் தட்டல்கள் என முட்டாள்தனமான செயற்பாடுகளில் ஈடுபடல் சமூக வலைதளங்களில் ஆரவாரமான பதிவேற்றங்கள் இடல் என்பன விரும்பத் தகாத விளைவுகளையே கொண்டு வரும், அவை சமூகத்தினதும் தேசத்தினதும் நிகழ்ச்சி நிரலை காவு கொள்ளும் என்பதனை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பொதுவாக கடந்த அதிபர் தேர்தலின் வெற்றியை முஸ்லிம்களால் கொண்டாட முடியுமா? என்ற கேள்வி எம்மை நோக்கி எழுகிறது. மைத்ரிபால சிறிசேனவின் வெற்றியை பொருத்தமட்டில் இங்கு கொள்கை அடிப்படையில் பெருமளவில் மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் இலங்கை அதிபராக வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தமது பெரும்பான்மை இனம் மற்றும் சமயம் சார்ந்த கொள்கைகளை பிரதிபலிக்கவும் அடையாளப்படுத்தவுமே முனைவார்கள். எனவே மஹிந்தர் என்ற பெரிய தீமையை மைத்ரி என்ற சிறிய தீமை வெற்றி கொண்டிருக்கிறது என நாம் மனநிறைவு கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.