ரவூப் ஹக்கீமும், றிசாத் பதியுதீனும் அரசாங்கத்திலிருந்து விலகியதால் தேசத்துரோகியாகி விட்டனர்
பிரிவினைவாதத்திற்கு எந்த வகையிலும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜே.வி.பி கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதத்தை இல்லாமல் செய்வதற்கு ஜே.வி.பி கட்சி உயிர்த் தியாகத்துடன் தொடர்ச்சியாக போராடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சி அரச ஊடகங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது கடுமையான சேறு பூசல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சியை விட்டு விலகுவோர் தேசத் துரோகிகளாக மாற்றமடைகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் இதுவரை காலமும் அரசாங்கத்தில் அங்கம் வகித்த போது, தேசத்துரோகியாகவில்லை எனவும். தற்போது தேசத் துரோகியாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மிக முக்கியமான பதவியொன்று ரவூப் ஹக்கீமிற்கு வழங்கப்பட்டதுடன், சில பிரதி அமைச்சர் பதவிகளும் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
ரவூப் ஹக்கீமை தக்க வைத்துக்கொள்ள பெசில் ராஜபக்ஸ இறுதித் தருணம் வரையில் முயற்சி மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
ரிசாட் பதியூதின் அரசாங்கத்துடன் நீண்ட காலம் இணைந்திருந்தார் எனவும் தற்போது எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டதன் பின்னர் தற்போது தேசத் துரோகியாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவடையச் செய்வதாக போலிப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது ஓர் அரசியல் கட்சியாகும் எனவும், அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் புலிக் குட்டிகளை செல்லம் கொஞ்சிக் கொண்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது புலி முத்திரை குத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
போலியான தேசப்பற்றைக் காண்பித்து மக்களை பிழையாக வழிநடத்த அரசாங்கம் முயற்சிப்பதாகவும், அரசாங்கத்தின் குடும்ப அரசியலை தோற்கடிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment