Header Ads



பள்ளிவாசல்களில் கை வைத்தமையே, மஹிந்த சாம்ராஜ்ஜியம் சிதறுண்டமைக்கு காரணம் - தமிழரசு கட்சி செயலாளர் துரைராஜசிங்கம்

-Tm-

தமிழ் - முஸ்லிம் ஐக்கியம் வளர்வதற்கும் இதனூடாக தமது சகவாழ்வும் உரிமைகளும் தனித்துவமும் நிலைநாட்டப்படுவதற்கும் ஏற்ற சூழல் இப்பொழுது கனிந்துள்ளது.   இந்த அரிய வாய்ப்பை அரசியல்வாதிகளும் பொதுமக்களும் தகுந்த முறையில் பயன்படுத்தவேண்டும்; என்று  தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கே.துரைராஜசிங்கம் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் அமீரலி வித்தியாலத்தில் பாடசாலை மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு, பாடசாலைக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு, பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும்  நிகழ்வு அப்பாடசாலையில் திங்கட்கிழமை (19) நடைபெற்றன.  இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 

'வடக்கு, கிழக்கில் வாழ்கின்ற தமிழர்களும் முஸ்லிம்களும் தாய்மொழியாக தமிழ்மொழியை பேசுகின்றனர். 1960களில் அரசியல் பிரசாரக் கூட்டங்கள் நடைபெற்றபோது, அப்போது ஏறாவூரில் தமிழ் பேசும் பெருங்குடி மக்களே என்றவாறு விழித்துப் பேசினார்கள். அந்த அரசியல் பிரசார மேடைகளில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒன்றாகவே இருந்தார்கள். மசூர் மௌலானா தமிழரசுக் கட்சிப் பாசறையில் வளர்ந்தவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவரான மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்  கூட, தமிழர் விடுதலைக் கூட்டணியை நாங்கள் ஆரம்பித்தபோது அதில் இணைந்துகொண்டு சிறுபான்மையினரின் அரசியல் உரிமைப் போராட்டப்பாதையில்  பயணித்தவர். 

தமிழ் பேசும் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்களும் சேர்ந்து இந்த நாட்டில் சிறப்பான சமூக சக வாழ்வையும் அரசியல் கலாசாரத்தையும் கட்டிக்காத்து வளர்த்தவர்கள். யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை. பின் நாட்களில் தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசல் ஏற்பட்டு அது மாறாத வடுவாகவுள்ளது. ஆனால், தமிழ் - முஸ்லிம் ஐக்கியம் வளர்வதற்கும் இதனூடாக எமது சகவாழ்வும் உரிமைகளும் தனித்துவமும் நிலைநாட்டப்படுவதற்கும் ஏற்ற சூழல் இப்பொழுது கனிந்துள்ளது.   

இந்த அரிய வாய்ப்பை அரசியல்வாதிகளும் பொதுமக்களும் தகுந்த முறையில் பயன்படுத்தவேண்டும். தமிழ்  - முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் ஒற்றுமை ஏற்படவேண்டுமாயின், பரஸ்பர விட்டுக்கொடுப்பு அவசியம். விட்டுக்கொடுப்பு என்பது எமது அடிப்படைகளையும் தனித்துவத்தையும் விட்டுக்கொடுப்பது அல்ல. பொதுவான விடயங்களில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை பரஸ்பர புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து இணக்கத்துக்கு வருவதால், எமது தனித்துவங்களை காத்துக்கொள்ளலாம். 

முஸ்லிம்களின் அடிப்படை அம்சமான பள்ளிவாசல்களில் கை வைத்தமையே முன்னாள் ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்ஷவின் சாம்ராஜ்ஜியம் வீழ்ச்சி அடைந்து சிதறுண்டமைக்கு காரணமாகும். 1956இல் தமிழ் மக்களின் மொழி உரிமையான அடிப்படையில் கை வைத்ததன் காரணமாக தமிழ் மக்கள் தங்களது தனித்துவத்தை காத்துக்கொள்ள வேறு வழிகளை நாடவேண்டி ஏற்பட்டது. இவையெல்லாம் எமக்கு உணர்த்தும் பாடங்கள். எந்தவொரு சமூகத்தினதும் அடிப்படை அம்சங்களில் முரண்டாக எவரும் கை  வைக்கக்கூடாது என்பதேயாகும். மனிதத்துவத்தின் அடிப்படையில், மானுடம் வாழவேண்டும் என்ற அடிப்படையில் நாம் இணைந்து செயற்பட முன்வந்து இழந்து போன எமது தமிழ் முஸ்லிம் உறவை மீளக் கட்டியெழுப்புவதற்கு பாடுபடுவோம் என்றார்'

1 comment:

  1. விடுதலைப்புலிகள் அழிந்துபோவதட்கு காரணமாக அமைந்ததும் முஸ்லிம்களின் பள்ளிவாயல்களில் கைவைத்ததுதான் .

    ReplyDelete

Powered by Blogger.