Header Ads



'ஜனாதிபதி மக்கள் சந்திப்பு' நிகழ்ச்சியை நிறுத்தக்கோரி, தேர்தல் ஆணையாளருக்குக் கடிதம் (கடிதம் இணைப்பு)

ஜனாதிபதி வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி கலந்துகொள்ளும் ஜனாதிபதி மக்கள் சந்திப்பு  எனும் நிகழ்ச்சி 2015 ஜனவரி 5 ஆம் திகதி அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒரே நேரத்தில் ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு செயற்படுகின்றமை தேர்தல்கள் ஆணையாளரினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக நெறிமுறைகளை மீறுவதாகும் என்று புதிய ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சட்டத்தரணி கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அவர் கடிதம் மூலமாக தேர்தல்கள் ஆணையாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்ச்சிகளை இலங்கை ஒளிபரப்புக் கூட்டுத்தாபனம் ஒளிப்பதிவு செய்துள்ளதாகவும் அதை 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5 ஆம் திகதி இரவு அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் நிலைப்பாடுகள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட ஊடக நெறிமுறைகளை மீறுகின்ற செயற்பாடு இது எனவும் அந்தக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அன்றைய தினமோ அல்லது அண்மித்த தினமொன்றிலோ ஒளிபரப்பு செய்தால் அதற்கு இணையான ஒரு நிகழ்ச்சியை மற்றும் சமமான நேரப் பெறுதியில் எதிரணி பொதுவேட்பாளரின் நிகழ்ச்சியை ஒளிபரப்புச் செய்வது நடைமுறை சாத்தியமற்ற விடயம் என்றும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த வேலைத்திட்டமோ அல்லது அதை ஒளிப்பதிவு செய்த அடிப்படையிலோ தற்போதைய ஜனாதிபதியை மாத்திரம் ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் ஒளி/ஒலிபரப்பு செய்வதை நிறுத்துவதற்கு உத்தரவிடுமாறும் தேர்தல்கள் ஆணையாளரை சட்டத்தரணி கலாநிதி விஜேதாஸ ராஜபக்ஸ கோரியுள்ளார்.


No comments

Powered by Blogger.