ஏர்ஏசியா விமானம் கடலில் இறக்கப்பட்டதா..? நிபுணர்கள் அறிக்கை
கடலில் விழுந்து விபத்துக்குள்ளான ஏர் ஏசியா விமானத்தை, அதன் விமானி இரியாண்டோ, வானிலை மோசமானதால் வேறு வழியே இல்லை என்ற நிலையில், கடற்பரப்பில் விமானத்தை பத்திரமாக இறக்கியிருக்கிறார். எனினும், மோசமான கடல் அலைகளே விமானத்தை சேதப்படுத்தியிருக்கலாம் என்று நிபுணர்கள் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியிருந்தால் அவசர காலத்தில் இருப்பிடத்தைத் தெரிவிக்கும் டிரான்ஸ்மிட்டர் செயல்பட்டிருக்கும். ஆனால், விமானம் விழுந்து நொறுங்கவோ, வெடித்துச் சிதறவோ இல்லை.
மோசமான வானிலையின் காரணமாக இனி செய்வதற்கு ஒன்றுமே இல்லை என்ற நிலையில், 162 பயணிகளையும் காப்பாற்ற தனியொரு விமானியால் எதுவுமே செய்ய முடியாது என்ற நிலையில்தான், அவர் அவசர காலத்தில் கடற்பரப்பில் விமானத்தை இறக்கியுள்ளார். விமானம் கடலில் இறக்கப்படும் போது எந்த அதிர்வும் விமானத்துக்கு ஏற்படவில்லை. அதனால்தான் டிரான்ஸ்மிட்டர் செயல்படவில்லை.
ஆனால், கடற்பரப்பில் இருந்த மோசமான அலையின் சீற்றம் காரணமாகவே விமானம் சேதமடைந்து விபத்து நேரிட்டது என்று விமானப் போக்குவரத்துத் துறை நிபுணர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்தின் பின்னணி :
ஏர் ஏசியா நிறுவனத்துக்குச் சொந்தமான ஏர்பஸ் விமானம், இந்தோனேசியாவின் சுரபாயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புறப்பட்டது.
இதில் 155 பயணிகள், விமானிகள் உள்பட 7 ஊழியர்கள் என மொத்தம் 162 பேர் இருந்தனர்.
இந்த விமானம் புறப்பட்ட 42 நிமிடங்களில் விமானத்திலிருந்து தகவல் துண்டிக்கப்பட்டு, அது மாயமானது.
அதனைத் தொடர்ந்து மூன்று நாள்களாக நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில், அந்த விமானத்தின் நொறுங்கிய பாகங்களும், அதிலிருந்தவர்களின் உடல்களும் மிதந்த நிலையில் இந்தோனேசியாவையொட்டிய ஜாவா கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டன.
சீரூடை அணிந்த நிலையில் விமானப் பணிப் பெண் ஒருவர் உள்பட விபத்தில் பலியான 7 பேரது உடல்கள் மீட்கப்பட்டன.
மற்ற உடல்களையும், விமானத்தின் கருப்புப் பெட்டி உள்ளிட்ட பிற பாகங்களையும் மீட்க ஏராளமான மீட்புக் குழுவினர் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், அந்தப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை, சூறைக் காற்று, மேகமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தேசிய தேடுதல், மீட்புத் துறைத் தலைவர் பம்பாங் சோயெலிஸ்ட்யோ கூறினார்.
Post a Comment