ஒன்றுபட்டு மாணவர் சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்...!
மாணவர்களும் என்றும் சொல்லாடல் ஒரு சக்தி மிக்க சமுதாயத்தைக் குறிக்கும் ஒன்றாகவுள்ளது. உலகெங்கும் கற்றல் செயன்முறைகளுடன் தொடர்புடைய இளம் சமுதாயத்தினரை குறிப்பதற்கு இச்சொல் பொதுவாக பயன்படுத்தப்படுகின்றது. நாட்டுக்கு நாடு சமுதாயத்துக்கு சமுதாயம் இவர்களுக்கான முக்கியத்துவமும் இவர்கள் குறித்த ஒழுங்கமைப்புகளும் வேறுபட்டுக் காணப்பட்டாலும் எல்லாச் சமுதாய அலகுகளிலும் மாணவர்களுக்கான முன்னுரிமை என்பது அளவிட இயலாதவை.
பொதுவாக மாணவர்கள் என்றதும் பாடசாலை செல்லும் மாணவர்கள் எல்லோரின் நினைவுக்கு வந்தாலும் அந்த அர்த்த விரிவாக்க எல்லைகள் இன்று விரிவடைந்து இருப்பதனை உணரலாம். முன்பள்ளி தொடங்கி பாடசாலை, கல்லூரி கலாசாலை, பல்கலைக்கழகம் என்று நீண்டு, ஒருவரின் வாழ்நாளின் நீண்ட கால எல்லையை மாணவர் பருவம் அல்லது மாணவனாயிருத்தல் கொண்டுள்ளது என்பது சமூக யதார்த்தம் என்பது மட்டுமல்லாது, எல்லோரின் வாழ்விலும் இப் பருவம் தொடக்கமாய் அமைந்திருப்பதனை காண்கின்றோம்.
எழுந்துள்ள சிக்கல் நிலை
இம்மாணவர் பருவத்தில் ஒரு பிள்ளை முறையாக கற்றல் செயற்பாட்டுடன் தொடர்புராத போது அல்லது போதுமான அளவு தொடர்புறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லாதிருக்கின்ற போது அப் பிள்ளையின் வாழ்க்கையே அர்த்தமற்றுப் போவதனை அடையாளம் காண இயலும். நிகழ் காலத்தில் நிலையான இடமில்லாது போவதுடன் எதிர்காலம் குறித்த அச்சமும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மாறிவரும் சமூக பொருளாதார சூழலுக்குள் தன்னை சமூகத்திலிருந்து விலகி இருக்கச் செய்துவிடும். போதுமான கல்வியறிவு இல்லாது போகின்ற போது, சமுதாய அளவிலான சாதாரண விடயங்களைக் கூட செய்து கொள்ளக் கூட இயலாத சூழலும் தொழில் நுட்பம் சார்ந்த நடைமுறைகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பும் அற்றுப்போவதுடன் தமது அன்றாட வாழ்க்கையைக் கூட கொண்டு செல்ல இயலாத சூழல் உருவாகுவதுடன், வாழ்க்கை குறித்த விரக்தி நிலையும் உளவியல் ரீதியான பாதிப்புக்களும் அதிகளவில் ஏற்படும்.
இன்று, ஒரு குழந்தைக்கு பொருத்தமான வேளையில் கல்வி அல்லது கல்விக்கான வாய்ப்பு இல்லாது போவதற்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. வறுமையான குடும்ப, சமூகச் சூழல் என்றும் பிரதான காரணி, இன்னும் பல காரணிகளுடன் தொடர்புபடுவதனைப் பார்க்கலாம். கல்வியறிவற்ற பெற்றோர், பொறுப்பற்ற பராமரிப்பு, திட்டமிடப்படாத நடைமுறைகள், அங்கீகரிக்காத இன, மதக் கருத்துக்கள், முறைப்படுத்தப்படாத வளப் பிரயோகம், கெட்ட பழக்கவழக்கங்கள் நிறைந்த சுற்றுச் சூழல், ஆர்வக் குறைவான சகபாடிகள், ஊக்குவிப்பு இல்லாத சமூகத் தளம், அக்கறையும் கண்டிப்பும் தண்டனையுமற்ற பராமரிப்பு வழிகள் என்று எத்தனையோ இருக்கின்றன.
உண்மையில் மாணவர்களுக்கான கல்வி அடிப்படையில் கிடைக்காமல் போவதற்கு குடும்பத்தின் பொருளாதார இயலாமையும் சமூகத்தில் வளப் பற்றாக்குறையுமே பிரதானமானதாக உள்ளது. குடும்பத்தை பொறுத்த வரையில், குறை வருமானம் அல்லது வருமானம் ஈட்ட இயலாத நிலை பிள்ளையின் கற்றல் செயற்பாட்டை பாதிக்கின்றது. தமது அடிப்படையான உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் குழந்தையின் கற்றலுக்கான வாய்ப்பினை அக் குடும்பத்திடம் இருந்து எதிர்பார்க்க இயலாதுள்ளது. அல்லது அறை குறை நிலையிலும் உளவியல் சார்ந்த பாதிப்புடனும் ஏராளமான பெற்றோரும், குழந்தைகளும் கற்றல் செயன்முறைக்குள் மூழ்கி இருக்கின்ற சூழல் உள்ளது. இன, மத, கலாசார, அரசியல் காரணங்களினால் ஏற்படக் கூடிய சூழலும் குழந்தையின் கற்றல் செயன்முறையை தீர்மானிப்பதாகவும் பாதிப்பதாகவும் இருக்கக் காண்கின்றோம். ஒரு நாட்டினது சமூக, பொருளாதார, அரசியல் கொள்கைகளும் நடைமுறைகளும் ஒரு சமுதாயத்தினது இன, சமய, கலாசார வழக்கங்களும் குடும்பத்தின் வருமான மூலங்களையும், வசதி வாய்ப்புக்களையும் தீர்மானிக்கும் முக்கிய புள்ளியாக இருப்பதனை உணர வேண்டியுள்ளது மட்டுமல்லாது குடும்ப, சமூக வறுமையே இவற்றுக்கான காரணம் என்பதனையும் காணலாம்.
ஏற்படும் பாதிப்புக்கள்
ஒரு குழந்தைக்கு மாணவப் பருவ கல்வியறிவு இல்லாது போகின்ற போது பல்வேறு விதமான எதிர் விளைவுகளை சந்திக்க வேண்டி ஏற்படுகின்றது.
01. தன்னைத் தான் அடையாளம் கண்டுகொள்ள இயலாத நிலை உருவாகின்றது.
02. தனது எதிர் காலம் குறித்து திட்டமிடுவதற்கும் அதற்கான அடிப்படைகளை பூர்த்தி செய்வதற்கும் இயலாது போகின்றது.
03. நடைமுறைச் சூழல்,எதிர்கால வாழ்வு குறித்த அச்சத்துடன் எப்போதும் வாழ வேண்டிய சூழல் எப்போதும் உருவாகின்றது.
04. சமூக சூழலுக்கு பொருத்தமற்றவனாகவும் பிறழ்வானதும் தப்பானதுமான நடத்தையை வெளிப்படுத்துபவனாகவும் மாறிவிடுகின்றான்.
05. சமூகம் எதிர்பார்க்கும் தலைமைத்துவ, ஒருங்கிணைப்பு, மூளை வலு கொண்டவனாக அடையாளம் காணப்பட இயலாத சூழல் உருவாகின்றது;.
06. தனது குடும்பத்துக்கு பயன் பெறுபவனாக அன்றி சுமையாக மாறிவிடக் கூடிய சூழலும் அதிகம் ஏற்படுகின்றது.
07. உலக போக்கினை உணர்ந்து பக்குவமான நடத்தைகளை வெளிக்காட்டும் வாய்ப்புக்கான சாத்தியப்பாடு குறைந்தளவில் ஏற்படுகின்றது.
08. பொருத்தமற்ற நண்பர் குழாமுடன் இணைந்து நேர காலத்தை வீணடிப்பதுடன்,தீய நடத்தைகளிலும்,சமூக விரோத செயல்களிலும் ஈடுபடுவதற்காக உந்துதல்களும் வாய்ப்புக்களும் அதிகரிக்கின்றது.
09. பலவீனமான,விரக்தியுற்ற மனோநிலையும்,உளவியல் பாதிப்புடனான நடத்தைகளையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.
10. பொருத்தமான போதிய பொருளாதாரம் ஏற்படுத்தக் கூடிய தொழில் வாய்ப்புக்களை பெறுவதற்கான வாய்ப்பு இல்லாது போகின்றது.
இவ்வாறு எத்தனையோ விடயங்களை குறித்துக் காட்டிக் கொண்டே போகலாம்.
கவனயீர்ப்பு செய்யப்பட வேண்டியவர்கள்
உண்மையாக இளம் சந்ததியினர் குறித்த அதிக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டியவர்கள் பெற்றோர்களாகவே (குடும்பம்) உள்ளனர். ஏனெனில் ஒவ்வொரு குடும்பங்களே ஒரு வகை ஆரம்ப பள்ளிக்கூடமாகவும் நூலகமாகவும் உள்ளன. இக்குடும்பங்கள் வறுமையின் காரணமாக குழந்தைகளின் கற்றல் தேவையினை திருப்திகரமாக நிறைவேற்ற இயலாத போது, முதலில் அக்குடும்பத்திலுள்ள செல்வம் படைத்தவர்களும் அதற்கு அப்பால் சமூகத்திலுள்ள செல்வமும் உயர்ந்த உள்ளமும் கொண்டவர்களும் நிறைவேற்ற பொறுப்புள்ளவர்களாக மாறுகின்றனர். பொதுவாக சமூகத்தில் ஆங்காங்கே வறுமையான மாணவர்களுக்கு உதவி செய்யும் செயற்திட்டங்கள் நடந்து கொண்டே உள்ளன. அவை இன்றும் வலுப்பெற்று பெரியளவில் இடம் பெற வேண்டியுள்ளது.
எமது அவதானிப்பும் முயற்சியும்
ஒரு சமூக நிறுவனம் சமூக அம்சங்களை அறிவியல் பின்புலத்துடனும் சமூக உணர்வு நிலையுடனும் தொடர்பு படுத்தி ஆராயும் நிறுவனம் என்னும் அடிப்படையிலும் நல்லெண்ணம் கொண்ட ஆதரவாளர்களை உறுப்பினர்களாக கொண்டவர்கள் என்னும் அடிப்படையிலும் நீண்ட நாள் அவதானிப்புக்கு பின்னர் வறிய மாணவர்களுக்கு உதவும் செயற்பாட்டினை ஒரு முகப்படுத்தும் பணியினைச் செய்ய முன்வந்துள்ளோம்.
வறிய மாணவர்களுக்கான தரவுத்தளத்துடனும் உதவும் உள்ளங்களுடனான உதவித் தளத்துடனும் ஒரு இணைய மையமாக செயற்பட்டு, மாணவர்களின் எதிர் காலம் சிறக்க ஒரு சமூகத் தளத்தை உருவாக்கியுள்ளோம்.
எம்முடன் இணைந்து இப்பணியினை வழிப்படுத்த சமூக ஆர்வளர்களையும் தனவந்தர்களையும் பிரார்த்தனையாளர்களையும் அன்பாக அழைக்கின்றோம்.
Post a Comment