பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை, மஹிந்தவின் அரசியல் சவப்பெட்டிக்கு காரணமாகியது - முன்னாள் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா
கடும்போக்குடைய சிங்கள பௌத்த கொள்கைகளே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் தோல்விக்கான காரணம் என முன்னாள் பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸ மூன்றாம் தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் கடும்போக்குடைய சிங்கள பௌத்த அமைப்புக்களினால் தமக்கு அநீதி இழைக்கப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக, சிறுபான்மை மக்கள் மஹிந்தவிற்கு எதிராக வாக்களித்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனா இயக்கம் போன்ற கடும்போக்குடைய இயக்கங்களின் நடவடிக்கைகளே மஹிந்தவின் தேர்தல் தோல்விக்கான பிரதான ஏதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள கடும்போக்குடைய அமைப்புக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த மஹிந்த ராஜபக்ஸ நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுபான்மை மக்கள் சமாதான விரும்பிகள் எனவும், அமைதியான முறையில் வாழ்வதற்கே விரும்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தத்தின் பின்னர் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கே விரும்பியதாகவும், பொதுபல சேனா போன்ற இயக்கங்கள் இந்து ஆலயங்கள், கிறிஸ்தவ வழிபாட்டுத் தளங்கள் மற்றும் முஸ்லிம்; பள்ளிகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கருத்துச் சுதந்திரம், சுதந்திரமாக ஒன்றுகூடும் உரிமை போன்றவற்றை மக்கள் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். பொதுபல சேனாவின் குண்டர் கூட்டங்கள் சட்டத்தை கையில் எடுத்து தாக்குதல்களை நடத்திய போது அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அலுத்கம சம்பவம், முஸ்லிம் மதவழிபாட்டுத் தளங்கள் மற்றும் வர்த்தக மையங்கள் தாக்கப்பட்டமையே மஹிந்தவின் அரசியல் எதிர்காலத்தை சவப்பெட்டிக்குள் போட்ட இறுதிச் சம்பவங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஸவிற்கு மிகவும் நெருக்கமான அதி உயர் பதவி வகிக்கும் நபர்களே பொதுபல சேனாவை வழிநடத்தி வருகின்றார்கள் என்பதனை சிறுபான்மை மக்கள் அறிந்திருந்தார்கள் என அவர் தெரிவித்துள்ளார். புத்தளத்தில் முஸ்லிம் மக்கள் பொதுபல சேனாவினால் துன்புறுத்தப்பட்டமையை தாம் தனிப்பட்ட ரீதியில் அறிந்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். gtn
..எங்கப்பா இவ்வளவு நாளும் இருந்தீங்க !!!!!!!
ReplyDeleteஉங்கள போல உள்ளவங்கட்ட இருந்துதான் சிலவற்றை எதிர்பார்க்கின்றோம்.