Header Ads



முஸ்லிம்களுக்கு இழைத்த அநியாயங்களுக்கான பிரதிபலனை, ஜனாதிபதி இன்று அனுபவிக்கிறார் - நிஸாம் காரியப்பர்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

நாட்டில் சட்டமும் ஒழுங்கும் நிலை நாட்டப்பட்டு, நீதித்துறை சுயாதீனமாக செயற்படும் போதே முஸ்லிம்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முதல்வருமான சட்ட முதுமாணி எம்.நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது மத்திய குழுவின் ஏற்பாட்டில் கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது கடற்கரை பௌஸி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பிரசாரப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

முதல்வர் நிஸாம் காரியப்பர் அங்கு மேலும் பேசுகையில் கூறியதாவது;

"மாவட்ட ரீதியிலும் தேசிய ரீதியிலும் முஸ்லிம்களுக்கு பல பிரச்சினைகள் இருந்து வருகின்றன. அவற்றுக்கு தீர்வு கண்டு- எமது சமூகத்தின் ஒட்டு மொத்த அபிலாஷைகளையும் வென்றெடுக்க வேண்டிய தேவை எமக்கிருக்கிறது.

கடந்த சில வருடங்களாக இந்நாட்டு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. உயிர், உடைமைகள் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசல்கள் குறி வைக்கப்படுகின்றன. மார்க்க உரிமைகள் பறிக்கப்படுகின்றன. பொருளாதார வளங்களை தாக்கியழிக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந்த வன்முறைகள் அனைத்தும் பொது பல சேனா போன்ற பேரின தீவிரவாத இயக்கங்களினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. அதற்கு இந்த அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது.

நாட்டில் சட்டமும் ஒழுங்கும் சீரழிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுயாதீனம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது. இவை சரியாக இயங்குமானால் முஸ்லிம்கள் மீதான வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

ஜாதிக ஹெல உறுமய கூட தமிழ், முஸ்லிம்களுக்கு எதிராக தீவிர பிரசாரத்தை மேற்கொண்டிருந்தன. ஆனால் பொது பல சேனா போன்று வன்முறைகளில் ஈடுபடவில்லை. ஜனநாயக ரீதியில்யே ஹெல உறுமயவின் பிரசாரங்கள் அமைந்திருந்தன.

சட்டம். ஒழுங்கு, நீதி என்பன நிலைநாட்டப்ப்படுமானால் நாட்டின் அனைத்து பிரஜைகளினதும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும். அவ்வாறான் ஒரு சூழல் ஏற்பட்டால் தான் முஸ்லிம்களின் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படும்.

இந்த அரசாங்கத்தினால் 18 ஆவது திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டு- 17 ஆவது திருத்த சட்டம் இல்லாதொழிக்கப்பட்டதன் ஊடாக சுயாதீன பொலிஸ், நீதி, லஞ்ச ஊழல் ஆணைக்குழுக்கள் அனைத்தும் குழி தோண்டிப் புதைக்கப்பட்டு- அவற்றின் அதிகாரங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் கைகளுக்கு மாற்றப்பட்டதன் விளைவையே நாம் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

சில வாரங்களுக்கு முன்னர் எமது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தலைமையில் நாங்கள் ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது இவ்விடயத்தை நான் நேரடியாக ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறினேன்.  

இன்று மைத்திரிபாலவின் கூட்டத்திற்கு கல்வீசி தாக்குதல் நடத்தப்படுகின்ற அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. தான் வெல்ல வேண்டும் என்பதற்காக எதையும் செய்வதற்கு ஜனாதிபதி துணிந்து விட்டார்.

ஆனால் மக்கள் ஒன்று திரண்டால் ஜனாதிபதியின் சர்வதிகாரம் அதற்கு ஈடுகொடுக்காது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றேன். மக்கள் புரட்சி குறித்து அவருக்கு இன்று பீதி ஏற்பட்டுள்ளது. 

ஜனாதிபதி இன்று நிதானம் இழந்து பேசுகிறார். தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசை நம்பி ஆதரியுங்கள் என்று கூறும் அளவுக்கு அவரது நிலைமை மோசமடைந்துள்ளது.

நாடாளுமன்றத்தின் மீதும் அவர் இன்று நம்பிக்கை இழந்துள்ளார். அதனால் 8 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கும் அவர் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.

தான் தேர்தலில் தோல்வியுற்றால் தற்போதைய நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியாக வெற்றி பெறுகின்ற மைத்திரியின் பின்னால் சென்று விடும் என்றும் அதனால் சுதந்திரக் கட்சியைக் கூட பறி கொடுக்க நேரிடும் என்றும் 24 மணித்தியாலங்களுக்குள் 18 ஆவது திருத்த சட்டம் ரத்து செய்யப்பட்டு தான் இனி ஒருபோதும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படும் என்றும் அவர் கடுமையாக அஞ்சுகின்றார். ஆகவே நாடாளுமன்றத்தை கலைப்பதைத் தவிர ஜனாதிபதிக்கு வேறு வலி கிடையாது.

முஸ்லிம்களுக்கு இழைத்த அநியாயம், அட்டூளியங்களுக்கான பிரதிபலனையே ஜனாதிபதி இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறார்.

இப்ராஹிம் (அலை) அவர்களின் காலத்தில் நம்ரூத் எனும் அரசன் நானே கடவுள் என்று மார்தட்டினான். அது போலவே ஜனாதிபதி மகிந்தவும் தன்னிடம் அனைத்து அதிகாரங்களும் உண்டு என்ற இறுமாப்பில் செயற்பட்டு வந்தார். ஆனால் இன்று அவரது நிலைமை தலைகீழாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அவரது தோல்வி நிச்சயிக்கப்பட்டு விட்டது.

ஜனாதிபதி அவர்களே! உங்களுடைய தோல்வி கிழக்கில் இருந்துதான் உதிக்கப் போகிறது. முடிந்தால் தடுத்துப் பாருங்கள்" என்று முதல்வர் நிஸாம் காரியப்பர் குறிப்பிட்டார்.  

3 comments:

  1. திரு. நிசாம் அவர்களே, யதார்த்தமான பேச்சு, நீங்களும், உங்கள் கருத்துக்களும் மக்கள் மயபடுத்தபட வேண்டும். அதற்கான உழைப்பையும் வேலைத்திட்டத்தையும் எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  2. As a senior Lawyer first and foremost speech dear Nizam, but be careful with your security in future.

    ReplyDelete
  3. Allah is blog security son t very Allah akbar

    ReplyDelete

Powered by Blogger.