முஸ்லிம் காங்கிரஸுக்கு அமைச்சு பதவிகள்: இவ்வளவும் போதுமா..? இன்னும் கொஞ்சம் வேணுமா..??
ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
புதிய அரசு அமைந்த பின்னர் எங்களுக்கு எவ்வித அமைச்சு பொறுப்புகளும் வேண்டாம் என்ற பிடிவாத போக்குடன் காணப்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தங்களது மக்கள் நலன்சார்ந்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தி, அவற்றுக்கு விரைவான தீர்வுகளை அரசு தந்தாலே போதுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்தல், படையினரால் சுவீகரிக்கப்பட்டுள்ள தனியார் காணிகள், குடியிருப்புகளிலிருந்து அவர்களை வெளியேற்றுதல், தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் உட்படலான பல விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து பலவற்றில் முன்னேற்றகரமான அறுவடையையும் எட்டியுள்ளது.
இதற்கு மேலாக கிழக்கு மாகாண சபையின் ஆட்சி அதிகாரம் ஒரு தமிழரைச் சென்றடைய வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி என்ற நிலைப்பாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளது. ஆனால் முஸ்லிம் காங்கிரஸோ மாகாண முதல்வர் தங்களது கட்சியாக இருக்க வேண்டுமென்பதற்கு மேலாக யாரை நியமிப்பது என்ற விடயத்தில் தொடர்ந்தும் இழுபறி பட்டுக் கொண்டிருக்கிறது.
இது ஒரு புறமிருக்க புதிய அரசில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அமைச்சரவை அமைச்சு, தலா ஒரு ராஜாங்க அமைச்சு, பிரதியமைச்சு பொறுப்புகளைப் பெற்றுக் கொண்டு உயர் அந்தஸ்தில் தன்னை அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.
புதிய அரசாங்கம் பதவியேற்ற கையோடு கிழக்கு மாகாணத்தின் திருமலை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களிலிருந்து பெட்டியும் படுக்கையுமாக கொழும்பை வந்தடைந்த முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் தொடர்ந்தும் அங்கேயே முகாமிட்டுள்ளனர். சிலவேளைகளில் அரசின் நூறு நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் தங்களது காரியங்களைக் கச்சிதமாக சாதித்து விட்டே தங்களது பிரதேசங்களுக்குச் செல்வார்களோ தெரியாது. அண்மையில் இவர்கள் அனைவரும் கூட்டாகச் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் சந்தித்து பேசியுள்ளனர். வழக்கமாக இவ்வாறான சந்திப்புகள் இடம்பெற்றால் அமைச்சர் ஹக்கீமின் ஊடகப் பிரிவு இது தொடர்பில் பெரிதாக அறிக்கை விடுவது உண்டு. ஆனால், மைத்திரிபால சிறிசேனவுடனான இந்தச் சந்திப்பு குறித்த படத்தை மட்டும் அனுப்பி விட்டு மௌனம் சாதித்து விட்டது.
ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குமிடையிலான சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்பது தெரியாது. ஆனால், அந்தச் சந்திப்பு இடம்பெற்ற சில மணித்தியாலத்துள் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவரான கட்சியின் செயலாளர் நாயகம் எம்.ரீ. ஹஸன் அலி மற்றும் தௌபீக் ஆகியோருக்கு ராஜாங்க, பிரதியமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்ட விடயம் பிரபல்யபடுத்தப்பட்டு விட்டது.
அதேவேளை, பிரதியமைச்சர்களாக இருவரை சிபார்சு செய்வது என முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்தாலும் எவரெவரை நியமிப்பது என்பதிலும் அக்கட்சிக்குள் இழுபறி நிலைமைகள் எழாமல் இல்லை. இந்த விடயம் அனைவரது இணக்கப்பாட்டுடன்தான் முடிவு செய்யப்பட்டது என்று அவர்கள் இப்போது கூறினாலும் அமைச்சு பொறுப்பு தொடர்பில் சில பிணக்குகள் கட்சிக்குள் தோன்றியுள்ளதனை எவரும் பூசி, மெழுகி விட முடியாது.
பிரதியமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் இறுதி நேரத்தில் சில முரண்பாடுகள் தோன்றியதனை நிச்சயமாக எவராலும் மறைத்து விட முடியாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமான எம்.ரீ ஹஸன் அலி அமைச்சு பதவிகளில் விருப்பமில்லாது காணப்பட்ட நிலையில், நீங்கள் ராஜாங்க அமைச்சராகிறீர்கள் என அவருக்கு கூறப்பட்ட போது அவரே ஆச்சரியமடைந்துள்ளார். முன்னர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த இருவரில் ஒருவர் நீக்கப்பட்டே ஹஸன் அலி உள்வாங்கப்பட்டார். இந்த விடயம் ஒரு வித்தியாசமான முறையிவேயே நகர்த்தப்பட்டிருந்தது. ஹஸன் அலிக்கு ராஜாங்க அமைச்சு பதவி வழங்க வேண்டுமென்று எவராலும் நிர்ப்பந்தங்களோ அழுத்தங்களோ பிரயோகிக்கப்படவில்லை. ஆனால், முன்னர் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தவர்களில் ஒருவருக்கு அமைச்சு பொறுப்பு வழங்காமல் வேறு யாருக்கு வழங்கினாலும் ஆட்சேபனை இல்லையென இறுதி நேரத்தில் சிலர் பிடிவாதத்துடன் காணப்பட்டதன் காரணமாகவே அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஹஸன் அலி திடீரென ராஜாங்க அமைச்சராக்கப்பட்டார்.
இந்த விடயம் தொடர்பில் ஹஸன் அலி ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். தனக்கு சுகாதார ராஜாங்க அமைச்சு கிடைக்கப் போகும் விடயம் ஜனாதிபதி முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்வதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்புதான் தெரிய வந்தது என்று கூறியுள்ளார். இதன் மூலம் என்ன இடம்பெற்றுள்ளது என்பது தெளிவாகிறது.
எது எப்படியிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசுக்கு வழங்கிய ஆதரவுக்கான நன்றிக் கடனாகவே இந்த அமைச்சு பதவிகள் கிடைத்திருந்தாலும் அதன் முழுமையான உரிமம் அந்தக் கட்சிக்கு உரித்துடையன அல்ல.. வாக்களித்த முஸ்லிம் மக்களுக்கே சொந்தம். எனவே முஸ்லிம் காங்கிரஸ் மக்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். தாங்கள் அமைச்சு பொறுப்புகளை எற்றுக் கொண்டமை மக்களுக்கு சேவை செய்வதற்கே என அந்தக் கட்சி வழமை போன்று தெரிவித்தாலும் அதனை மக்கள் நம்பவும் தயாரில்லை. மர்ஹும் அஷ்ரஃபின் மறைவுக்குப் பின்னர் இந்தக் கட்சி எத்தனையோ தடவைகள் அமைச்சுகளைப் பெற்றிருந்தது. ஆனால் அவர்களால் மக்களுக்கு எதனைத்தான் செய்ய முடிந்தது என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
கடந்த காலங்கள் வேறு, நடந்து கொண்டிருக்கும் காலங்கள் வித்தியாசமானவை. மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் தீர்மானத்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேறு வழியின்றி இறுதியாகவே எடுத்திருந்தது. ஆனால் முஸ்லிம் மக்கள் அதே தீர்மானத்தை எப்போது எடுத்திருந்தனர்.
எனவே, முஸ்லிம் காங்கிரஸ் மக்களின் பிரதிநிதிகள் என்பதனை விட, மக்களே முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகள் என்பதே உண்மை. அரசின் நூறு நாள் வேலைத் திட்ட காலப்பகுதிக்குள் முஸ்லிம் காங்கிரஸின் செயற்பாடுகள் தொடர்பில் முஸ்லிம் மக்கள் மிகுந்த கரிசனையுடனும் கழுகுக் கண்களுடனுடமே இருந்து கொண்டுள்ளனர்.
சமூகம் சார்ந்த விடயங்களில் அவர்கள் காட்டக் கூடிய மெத்தன போக்குகள் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு வினையாகவே முடியும். மாற்றம் ஒன்றுக்காக ஜனாதிபதி தேர்தலில் வாக்களித்து வெற்றி பெற்ற அதே முஸ்லிம் மக்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸின் வழமையான நம்பிக்கைகளையே மாற்றியமைக்கும் சக்தியைக் கொண்டுள்ளனர்.
வெறும் வார்த்தை அலங்காரல்,உணர்வுகளை உசிப்பு விடுதல், ஆவேசப் பேச்சுகள் போன்றனவற்றை இனி அந்த மக்கள் ஏற்கப் போவதில்லை, தங்களது கையாலாகத் தனம், சூழ்நிலைக் கைதி என்றெல்லாம் கூறி அனுதாபத்தை மக்களிடம் பெறலாம் என்றும் அவர்கள் இனி நம்பக் கூடாது.
இன்று அந்தக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சு பதவிகள் மிக சக்திவாய்ந்தவை. அதிகாரங்களும் அதிகம். இவைகளை வைத்துக் கொண்டு படைசூழ பவனி வருவதும் அமைச்சு அலுவலகத்திலேயே இருந்து கொள்வதும் மக்களை நெருங்காமலும் மக்கள் நெருங்க விடாமல் தடுப்பதுமான நிலைமைகள் தவிர்க்கப்பட வேண்டும். மக்களின் பிரச்சினைகளைகளை காலடிக்குச் சென்று கேட்டறிந்து தீர்க்க வேண்டும்.
தமிழ் மக்கள் போன்று முஸ்லிம் மக்களுக்கு நிறையவே பிரச்சினைகள் உள்ளன. அவர்களது வாழ்வதாரம் முதல் காணி, பாதுகாப்பு அச்சுறுத்தல் போன்ற பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும். இந்த விடயங்களில் முஸ்லிம் காங்கிரஸ் தனது கவனத்தைச் செலுத்த வேண்டும். இப்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை அவர்கள் அவர்கள் சமூக நலனுக்காக பயன்படுத்த வேண்டும். சில உள்ளுர் குட்டித் தலைமைகளின் தலையாட்டல்களுக்கு கட்சியின் தலைமை இடம்கொடுக்காமல் செயற்படல் வேண்டும். அதன் கூலமே மக்கள் மனங்களை வெல்ல முடியும்.
நீ குற்றம் செய்யும் போது இறைவன் உன்னைப் பார்க்கிறான். நீ தண்டனை பெறும் போது இறைவனை நீ பார்க்கிறாய் என்பது போல்.. நீங்கள் விடும் தவறுகளை மக்கள் அவதானித்துக் கொண்டே உள்ளார்கள். அவர்களே உங்களுக்கு தங்களது வாக்குப் பலத்தின் மூலம் தண்டனையையும் வழங்குவார்கள். அப்போது நீங்கள் மக்களைப் பார்ப்பதில் வேலையில்லை இல்லாமல் போய் விடும்.
Very good these are the real game of muslim congress
ReplyDeleteI hope they will learn from general election in April.till that they going play the same game.we should teach them a good lesson in shaa Allah
ReplyDelete