ஜனாதிபதி மைத்திரியின் அதிரடி - வெளிநாட்டவர்கள் நம்நாட்டில் மாணிக்ககல் அகழமுடியாது
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கு கீழ் உள்ள நிறுவனங்களுக்கான அதிகாரிகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் நியமன கடிதங்களை பெற்று கொண்டனர்.
இதற்கமைய, இலங்கை மகாவலி அதிகார சபையின் புதிய பணிப்பாளர் நாயகமாக காமினி ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக ஆர்.பீ.மீகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, மாணிக்கல் மற்றும் ஆபரண பயிற்சி நிலைய புதிய தலைவராக நவரத்ன பண்டார அலஹகோன் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,
இலங்கையினுள் வெளிநாட்டவர்கள் மாணிக்கல் அகழ்வினை மேற்கொள்ளவதற்கு இடமளிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறான விண்ணப்பங்கள் ஏற்கனவே கிடைக்கப் பெற்றிருக்குமாயின் அவற்றை உடனடியாக நிராகரிக்குமாறும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, எதிர்வரும் முதலாம் திகதி தொடக்கம் பொலன்னறுவை மாவட்டத்தில் மணல் அகழ்வு மற்றும் எடுத்துச் செல்லும் நடவடிக்கை முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மணல் அகழக்கூடிய மற்றும் அகழக் கூடாத இடங்கள் தொடர்பாக எதிர்வரும் 2 வாரங்களில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
Post a Comment