'எமது பிள்ளைகளை, தயாராக்க வேண்டும்' ஜனாதிபதி மைத்திரிபால
தொழில் நுட்பத்துறையில் எமது பிள்ளைகளை உலகளாவிய ரீதியில் போட்டிபோடக் கூடியவர்களாக உருவாக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
புகழ்மிக்க நீண்ட வரலாற்றில் எமது நாடு அபிவிருத்தியிலும் பொருளாதாரத்திலும் கண்டிருந்த வளர்ச் சியை முன்னுதாரண மாக்கிக் கொண்டு நாட்டில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் எமது பிள்ளைகள் போட்டி போடத் தம்மை தயார்படுத்திக் கொள்வது முக்கியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“எடெக்ஸ்” “எக்போ- 2015” கண்காட்சி நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது. இதன் ஆரம்ப நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து உரை யாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள் அகில விராஜ் காரியவசம், ரவூப் ஹக்கீம், ரவி கருணாநாயக்க, கயந்த கருணாதிலக்க உட்பட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி:-
எமக்கு தொழில் நுட்பத்துறையோடுள்ள தொடர்பில் தொழில் நுட்பத்தில் பிள்ளைகள் உயர்வது போன்று அதற்கு வெளியிலும் சுற்றாடலோடும், இயற்கை வளங்களோடும் தொடர்புபட்டவர்களாக வேண்டியது முக்கியமாகும். இயற்கையை நேசிப்பவர்களாக உருவாக வேண்டும்.
கொழும்பு ரோயல் கல்லூரி சம்பிரதாயங்களைக் கடந்து அதற்கு வெளியிலும் சிறப்பாக செயற்பட்டு வருகிறது. பாடசாலைக் கல்வியிலும் சம்பிரதாயங்களுக்கு மேலதிகமாக சமூக ரீதியில் மக்கள் நலன் என்ற ரீதியில் செயற்பட்டு வருகின்றது. சமூக நலன்புரி விடயங்களிலும் முன்னுதாரணமாகத் திகழ்கிறது. நான் ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு வாரங்களே கழிந்துள்ள நிலையில் பாடசாலை சம்பந்தமான நிகழ்வில் கலந்து கொள்வது இதுவே முதற்தடவையாகும்.
கொழும்பு ரோயல் கல்லூரி பழைய மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த கண்காட்சியை பொலனறுவை ரோயல் கல்லூரியின் பழைய மாணவனான நான் அங்குரார்ப்பணம் செய்து வைப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
நான் ரோயல் கல்லூரியை மதிப்பவன், நேசிப்பவன், நெருங்கிய தொடர்புகளைக் கொண்டவன். தற்போது நவீன உலகம் நவீன தொழில் நுட்ப வளர்ச்சியின் காலம். இது புதிய பரம்பரைக்கு சிறந்த பிரவேசமாக அமையும். இந்தக் கண்காட்சியானது எமது பிள்ளைகள் சர்வதேச மட்டத்தில் போட்டியிடுவதற்கு ஊக்குவிக்கும்.
சில பெற்றோர்கள் தமது பிள்ளைகள் பற்றிச் சிந்திக்கும் போது தமது பிள்ளைகளுக்கு வகுப்பிலேயே போட்டி இருப்பதாகக் கருத்துகின்றனர்.
இன்னும் சில பெற்றோர்கள் நினைக்கின்றார்கள் தமது பிள்ளைகளுக்கு வீட்டிலேயே போட்டி இருப்பதாக. எனினும் அனைத்துத் துறைகளிலும் போட்டி என்று வருகையில் எமது பிள்ளைகள் உலகை வெல்லக்கூடியவர்களாக உருவாக வேண்டும்.
எமது நாட்டின் புகழ்மிக்க நீண்ட கால வரலாற்றில் பொருளாதார ரீதியில் கலாசார ரீதியில் காணப்பட்ட வளர்ச்சி பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது.
நவீன உலகம் மற்றும் நவீன தொழில் நுட்பத்தை நோக்கிய பயணத்தில் நாம் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது. முதலில் அதற்காக எமது பிள்ளைகளை தயாராக்க வேண்டும். இதில் பாடசாலை மற்றும் பெற்றோர்களின் பொறுப்புகள் முக்கியமாகும்.
கல்வித்துறை போன்றே தொழில் சந்தையில் ஏனைய சமூகங்கள் போன்று உயர்வது எமது பிள்ளைகளுக்கான அவசியமாகிறது என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். “தேசத்தின் பிள்ளைகளை சர்வதேச போட்டிகளுக்கு ஊக்கமூட்டும் இந்தத் தேசியக் கண்காட்சியை ஜனாதிபதி பார்வையிட்டதுடன் கண்காட்சியைப் பார்வையிட வருகை தந்திருந்த மாணவர்களுடனும் அளவளாவினார்.
Post a Comment