சிறுபான்மை மக்களை இந்நாட்டின் உண்மையான, நாட்டுப்பற்றுள்ள பிரஜைகளாக வாழ இடம்கொடுப்போம் - ராஜித
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்காததன் காரணத்தினாலேயே கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ் பிரதிநிதிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க விரும்பாமல் பிரிவினையினை அரசாங்கம் தூண்டி விடுகின்றது என தெரிவிக்கும் பொது எதிரணியினர், எமது தேசிய அரசாங்கத்தில் தமிழ் மக்கள் ஒதுக்கப்படமாட்டார்கள். அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்படுமெனவும் குறிப்பிட்டது.
பொது எதிரணியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணங்கி செயற்படுவது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு கிடைக்கும் தீர்வுக்கான சந்தர்ப்பத்தினை இழக்கும் செயலென அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ள நிலையில் இது தொடர்பில் பொது எதிரணி உறுப்பினர் ராஜித சேனாரட்ன எம்.பி.யிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
கடந்த முப்பது வருடங்கள் நாட்டில் யுத்தம் நிலவிய சூழ்நிலையில் பாதிப்புக்கள் மூவின மக்களையும் சார்ந்திருந்தது. எனினும் யுத்தம் முடிவடைந்து இன்று நாட்டில் சிங்கள முஸ்லிம் மக்கள் சுதந்திரமாக செயற்பட்டாலும் தமிழ் மக்கள் இன்றும் அச்சுறுத்தலான சூழலிலேயே வாழ்ந்து வருகின்றனர். வடக்கு கிழக்கில் இன்றும் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். தமது காணிகள் சொத்துக்கள் இன்னமும் உரிய நபர்களுக்கு சென்றடையவில்லை. யுத்த காலகட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் குடியமர்த்தப்படவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பில் பல தடவைகள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியும் பலனேதும் கிடைக்கவில்லை என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதில் உண்மையிலேயே அக்கறை காட்டவில்லை. ஒரு சிலர் அரசில் இருந்து கொண்டு பேச்சுவார்த்தைக்கு தயாராகிய போதிலும் குடும்ப ஆட்சியாளர்களின் அழுத்தங்கள் அவை அனைத்தையும் தடுத்து விட்டது. எனினும் தற்போது பொது எதிரணியொன்று உருவாகியிருப்பது சிறுபான்மை மக்களுக்கு மிகப் பெரிய நம்பிக்கையாக மாறிவிட்டது. தமிழ் முஸ்லிம் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுக்கவும் சுதந்திரமாக வாழவும் நல்லதொரு சந்தர்ப்பம் ஏற்பட்டு விட்டது.
அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது எடுத்துள்ள தீர்மானம் வரவேற்கத்தக்கதுடன் தமிழ் மக்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டு நல்லதொரு தீர்மானத்தினை எடுத்துள்ளனர். எனவே தற்போது எம்முடன் சிங்கள தமிழ் முஸ்லிம் தலைமைகள் அனைத்தும் ஒன்றிணைந்து விட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட மலையக தமிழ் கட்சிகள் மற்றும் ரிசாத் பதியுதீன், பைசர் முஸ்தபா போன்றோர் பலர் எம்முடன் கைகோர்த்து சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கும; ஒரே நோக்கில் அதற்கான நம்பிக்கையில் கைகோர்த்துள்ளனர்.
எனவே இன்னும் ஒரு வார காலத்தில் உருவாகவிருக்கும் தேசிய அரசாங்கத்தில் தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வு எட்டப்படும். சிறுபான்மை மக்களையும் இந்த நாட்டின் உண்மையான நாட்டுப் பற்றுள்ள பிரஜைகளாக வாழ இடம் ஏற்படுத்திக் கொடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment