Header Ads



ஊடகவியலாளர்கள் படுகொலையில் ஈராக் முதலிடம்

உலகம் முழுவதும், பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலைமை உள்ளது. பத்திரிகையாளர்கள் படுகொலையில், ஈராக் முதலிடத்திலும்; இந்தியா, 6வது இடத்திலும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சர்ச்சைக்குரிய பகுதிகளுக்கும், உள்நாட்டுப் போர் நடைபெறும் ஆபத்தான இடங்களுக்கும் துணிச்சலாக சென்று, செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவது, சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. கடந்த 1993ம் ஆண்டுக்குப் பின், இதுவரை, 1,056 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

அதிலும், 2004ம் ஆண்டுக்குப் பின், இந்த படுகொலைகள் அதிகரித்துள்ளன.குறிப்பாக, உள்நாட்டுப் போர் நடக்கும் ஈராக், அல் குவைதா மற்றும் அதன் ஆதரவு அமைப்புகளின் ஆதிக்கம் நிறைந்த, மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்ரிக்க நாடுகளில் தான், இந்த படுகொலைகள் அதிகம் நிகழ்ந்துள்ளன.கடந்த 1993 முதல் 2014 வரையிலான, 22 ஆண்டுகளில், ஈராக்கில் அதிகபட்சமாக, 166; சிரியாவில் 79; பிலிப்பைன்சில், 75; பாகிஸ்தானில், 56; சோமாலியாவில், 56; இந்தியாவில், 32 பேர் என்றளவில், பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த பட்டியலில், உலக நாடுகளில், இந்தியா ஆறாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் நிகழ்ந்த, 32 படுகொலைகளில், 10 கொலைகள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும்; ஏழு கொலைகள் ஆந்திர மாநிலத்திலும் நிகழ்ந்துள்ளன. 1997 நவ., 19ல், ஆந்திர மாநிலத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில், ஒரே தொலைக்காட்சி நிறுவனத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தது, மிகப்பெரிய சம்பவமாக கருதப்படுகிறது.

உறுதி செய்யப்பட்ட படுகொலைகள், 32 ஆக இருந்தாலும், உறுதி செய்யப்படாத கொலைகளில், மேலும் 20 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கொல்லப்படும் பத்திரிகையாளர்களில் மூன்றில் இருவர், திட்டமிட்டு படுகொலை செய்யப்படுகின்றனர். இல்லையெனில், போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் இருபிரிவினர் இடையேயான மோதல், கும்பல் தாக்குதல் போன்ற ஆபத்தான செய்திகள் சேகரிப்பின் போது உயிரிழக்கின்றனர்.

இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்குச் சென்று படுகொலையானவர்கள் பட்டியலில், ஒரே ஒரு இந்தியர் மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவரின் பெயர் தாரா சிங் ஹேயர். கனடாவில் நீண்ட நாட்களாக வசித்து, பத்திரிகைகளுக்கு செய்தி அளித்து வந்த இவர், காலிஸ்தான் பிரிவினைவாதிகள் பற்றி பெரிய அளவில் விமர்சித்ததற்காக, 1998ம் ஆண்டில் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.