Header Ads



சமூகம் சஞ்சலப்படுகையில், நான் சுகபோகங்களை அனுபவிக்க மனச்சாட்சி இடம்தரவில்லை - ஆரிப் சம்சுடீன்

(எம்.ஏ.றமீஸ்)

முஸ்லிம் மக்களை தொடர்ச்சியாக வஞ்சித்து பல ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் அரசாங்கத்திற்கு தக்க பாடம் புகட்டும் வகையிலேயே நான் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கம் சென்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று(03) அட்டாளைச்சேனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்த மாகாண சபை உறுப்பினர் தை;திரிபால சிறிசேனவின் வெற்றிக்காக செயற்படுவதற்காக மாறிக்கொண்டதாக தெரிவிக்கும் அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், அரசாங்கத்தின் பக்கம் இருந்த நான் நமது சமூகத்தின் நன்மைக்காகவே இந்த முடிவை எடுத்தேன். முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது முஸ்லிம் சமூகம் சார்ந்த முடிவுகளையே எடுக்க வேண்டும். நமது மக்கள் நலன் சார்ந்த விடயங்களையே செய்ய வேண்டும். அந்த வகையில்தான் எனது இந்த முடிவு அமைந்தது.

சமூகம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கையில் நான் மட்டும் சுகபோகங்களை அனுபவிப்பதற்கு எனது மனச்சாட்சி இடம்தரவில்லை. எமது முஸ்லிம் மக்கள் நிம்மதியாக தமது மதக் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள முடியாமலும் பள்ளிவாசல்களில் வணக்கங்களை மேற்கொள்ள முடியாமலும் இருக்கும் சந்தர்ப்பத்தில் நான் எவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிக்க மக்களிடம் சொல்ல முடியும்.

நமது மக்கள் அல்லல் பட்டுக் கொண்டிருக்கம் போது அரசின் பக்கம் இருப்பதுதான என என்மனதில் தினமும் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்த போதிலும் சந்தர்ப்பம் சரியாக அமையவில்லை. இருன்த போதிலும் தக்க தருணம் வந்ததால் நான் மைத்திரபால சிறிசேனவின் வெற்றிக்காக களம் இறங்க வேண்டி ஏற்பட்டது. நீண்ட நாளாக சமயத்திற்கும் அரசியலுக்குமிடையில் எனது மனசாட்சியுடன் நடந்த போராட்டத்தில் சமயத்தை முன்னிலைப்படுத்தி தீர்மானம் எடுக்க வேண்டி ஏற்பட்டது.

நமது மக்களுக்கு நல்ல முறையில் அரசியல் செய்வதுடன் நமது மக்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் சமயக் கடமைகளில் ஈடுபடவேண்டும் என்று நான் நினைக்கின்றேன். அதற்காக ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரபால சிறிசேனவின் வெற்றிக்காக நான் செயற்படவுள்ளேன். நாட்டின் நாலா பாகங்களிலும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் மைத்திரிபால சிறிசேனவின் அணிதிரளும் மக்கள் வெள்ளத்தினைப் பார்க்கின்றபோது அவர் வெற்றி பெறுவது நிச்சயமாகி விட்டது. நமது மக்களையும் அவருக்கு வாக்களிக்கச் செய்ய அனைவரும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.