நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக, அரசியல்வாதிகளுக்கான விசேட ஒழுக்கக் கோவை
புதிய அரசாங்கம் அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கக் கோவை ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ம் திகதி இந்த ஒழுக்கக் கோவை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
பிரதேச சபை உறுப்பினர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரையில் அரசியல்வாதிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் இந்த ஒழுக்கக் கோவையில் உள்ளடக்கப்பட உள்ளது.
நாட்டின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக இவ்வாறு அரசியல்வாதிகளுக்கான விசேட ஒழுக்கக் கோவையொன்று அறிமுகம் செய்யப்படுவதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
தேசிய நிறைவேற்றுப் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய இந்த ஒழுக்கக் கோவை அமுல்படுத்தப்பட உள்ளது. நேற்று முன்தினம் தேசிய நிறைவேற்றுப் பேரவை கூடிய போது இந்த ஒழுக்கக் கோவை குறித்த சட்ட வரைவினை உருவாக்கும் பொறுப்பு ஜே.வி.பி தலைவர் அனுரகுமாரவிடம் ஒப்படைக்கப்பட்டது.
மந்திரி என அழைக்கப்படும் நபர் இந்த ஒழுக்கக் கோவை அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் முற்று முழுதாக மக்கள் சேவகனாக மாற்றமடைந்துவிடுவார்.
கட்சிகளில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் போது ஒரு தடவைக்கு பத்து தடவை சிந்தித்து சந்தர்ப்பம் வழங்கும் வகையில் ஒழுக்கக் கோவை அமையும் என ராஜித சேனராட்ன தெரிவித்துள்ளார்.
Post a Comment