Header Ads



ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக, ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் விசேட அறிக்கை

அடுத்த வாரம் நமது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. சகல தரப்பினரும் தேர்தல் வேலைகளை அதி தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வாக்காளர்களும் தாம் சார்ந்த தரப்பு வெற்றியடைய வேண்டும் என்பதில் முழு மூச்சாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இந்நாட்டு மக்கள் சகலரும் சாதி, சமய, மத வேறுபாடின்றி நிதானமாகவும் விவேகமாகவும் நடந்து கொள்ள கடமைப்படுகிறார்கள். 

வீணான தர்க்கங்களில் ஈடுபட்டுக் கொள்வதன் மூலமோ தேவையற்ற விதமாக மாற்றுக் கருத்துடையோரை சீண்டிப் பார்ப்பதன் மூலமோ நாம் எந்தவொன்றையும் சாதித்து விட முடியாது. ஒவ்வொருவரும் நேரகாலத்தோடு வாக்குச்சாவடிக்குச் சென்று தமது வாக்கை தாம் விரும்பியவருக்கு வாக்களித்துவிட்டு தம் இடம் திரும்பி அமைதியாக இருப்பதே தேவையற்ற பிரச்சினைகளில் இருந்து தவிர்ந்து கொள்ள வழியாகும். வதந்திகளில் சம்பந்தப்படாமலும் உணர்ச்சிவசப்படாமலும் இருப்பதன் மூலம் வீண் பிரச்சினைகளில் இருந்து விடுபடமுடியும். 

பொதுவாகவே தேர்தல் காலங்களில் தீய சக்திகள் மக்கள் மத்தியில் குழப்பங்கள் ஏற்படுத்த முனைவதுண்டு. அச்சந்தர்ப்பங்களில் எல்லாம் விவேகமாகவும் நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும். தேர்தலின் பெயரால் சாதி, மத குரோதங்கள் வளரவும் பிரச்சினைகள் தோன்றவும் இடமளிக்கக் கூடாது. பள்ளி நிர்வாகங்கள், உலமாக்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு  தேவையான வழிகாட்டல்களை வழங்க வேண்டும்.

எனவே எதிர்வரும் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் வாக்குரிமை பெற்ற அனைவரும் தமது உரிமையை முறையோடு பயன்படுத்திவிட்டு தொடர்ந்தும் அமைதிக்காகவும் நாட்டில் சமாதானம் நிலவவும் சகல சமூகங்களோடும் ஐக்கியமாக வாழவும் பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சகல முஸ்லிம்களையும் அன்பாக கேட்டுக் கொள்கிறது. 

அஷ்-ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


1 comment:

  1. Thank you. Hope, next year there will be no issues for Halal certificates. Insha Allah

    ReplyDelete

Powered by Blogger.