நாட்டின் உள்ளேயும், வெளியேயும் மதப் பயங்கரவாத அச்சுறுத்தல் - பிரான்ஸ் ஜனாதிபதி
பயங்கரவாதத்துக்கு பிரான்ஸ் ஒருபோதும் அடிபணியாது என, அந்த நாட்டு அதிபர் ஃபிரான்சுவா ஹொலாந்த் செவ்வாய்க்கிழமை கூறினார்.
அந்த நாட்டில் கடந்த வாரம் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 3 போலீஸார் உள்பட 17 பேர் பலியாகினர்.
இந்நிலையில், உயிரிழந்த போலீஸாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஹொலாந்த் உணர்ச்சி பொங்கப் பேசியதாவது,
நமது மகத்தான, எழில் மிக்க பிரான்ஸ் ஒருபோதும் உடைந்து போகாது. நாட்டின் உள்ளேயும், வெளியேயும் மதப் பயங்கரவாத அச்சுறுத்தல் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
இருந்தாலும் இந்த அச்சுறுத்தல்களுக்கு பிரான்ஸ் ஒருபோதும் அடி பணியாது; தலை வணங்காது என்றார் அவர்.
யூதர்களின் உடல்கள் அடக்கம்: இதற்கிடையே, பயங்கரவாதத் தாக்குதலில் பலியான நான்கு யூதர்களின் உடல்கள் இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டு, செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்யப்பட்டன.
சார்லி ஹெப்டோ: 30 லட்சம் பிரதிகள்!
மதப் பயங்கரவாதிகளின் தாக்குதலில், ஆசிரியர் குழு, ஊழியர்களை பறிகொடுத்த "சார்லி ஹெப்டோ' இதழின் அடுத்த பதிப்பு தயாராகிவிட்டது.
வழக்கமாக 60,000 பிரதிகள் அச்சாகி, 30,000 பிரதிகள் வரை விற்பனையாகும் அந்தப் பத்திரிகை, தாக்குதலுக்குப் பின்பு 30 லட்சம் பிரதிகளை அச்சிட்டு வெளியிடவுள்ளது.
தாக்குதலைத் தொடர்ந்து 10 லட்சம் பிரதிகள் அச்சடிக்க இதன் விநியோகஸ்தரான எம்.எல்.பி. நிறுவனம் முடிவு செய்திருந்தது.
ஆனால், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்த வாரப் பதிப்புக்கான தேவை வேகமாக அதிகரித்ததால் இந்த எண்ணிக்கையை 30 லட்சம் பிரதிகளாக உயர்த்த எம்.எல்.பி. முடிவு செய்துள்ளது.
Post a Comment