அதாவுல்லாவிடம், ஹரீஸ் கேட்கும் பிச்சை..!
(ஹாசிப் யாஸீன்)
மாமனிதர் அஷ்ரஃப்பின் ஒசீயத்துக்கு மாற்றமாக முஸ்லிம்களின் முகவெற்றிலையான கல்முனையை துண்டாடி சிதைக்க வேண்டாம் என அமைச்சர் அதாஉல்லாவிடம் பிச்சையாக கேட்கின்றேன் என திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் சாய்ந்தமருது மத்திய குழுவின் ஏற்பாட்டில் கட்சியின் சாய்ந்தமருது அமைப்பாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.ஐ.எம்.பிர்தௌஸ் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது கடற்கரை பௌஸி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே மிக ஆக்ரோசமான இதனைக் குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்
மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் கல்முனை மாநகரத்தினை முஸ்லிம்களின் முக வெற்றிலையாகவும் தலைநகரமாகவும் பிரகடணம் செய்தார். இதனை முஸ்லிம் காங்கிரஸின் மூலம் அரசியல் முகவரி பெற்றுள்ள அமைச்சர் அதாவுல்லா உள்ளிட்ட சகல அரசியல் தலைமைகளும் இப்பிரகடணத்தை தலைவரின் ஒசீயத்தாக ஏற்றுக்கொண்டனர்.
இனப்பிரச்சினைக்கான தீர்வாக முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்பட்ட தென்கிழக்கு மாகாண அலகு கிடைக்குமானால் அதன் தலைமைக் காரியாலயம் கல்முனையில் அமைய வேண்டும். கரையோர மாவட்டத்தின் காரியாலயமும் கல்முனையில் அமைய வேண்டும் என மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் ஒசீயத்தாக எங்களிடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார். இன்று இதற்கு மாற்றமாக மாமனிதர் அஷ்ர.ப்பின் அரசியல் அறுச்சுவட்டை பின்பற்றி தான் அரசியல் செய்வதாக கூறும் அமைச்சர் அதாவுல்லா மறைந்த தலைவரின் ஒசீயத்தை மீறி கல்முனை மக்களுக்கு காலத்தால் அழியாத துரோகத்தை செய்து அந்தப் பழியினை நீங்கள் சுமக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
அரசியலில் சாய்ந்தமருதுக்கு ஒரு முகத்தையும், மருதமுனைக்கு ஒரு முகத்தையும் நான் காட்டுபவனல்ல. சாய்ந்தமருது, மருதமுனை மக்கள் விரும்பினால் அவர்களுக்கான தனியான உள்ளுராட்சி சபையினை கொடுப்பதற்கு நானோ, கட்சியோ ஒருபோதும் தடையாக இருக்காது. அதனை நான் முன்னின்று செய்வதற்கும் தயாராக உள்ளேன். ஆனால் எமது பிராந்திய மக்கள் நேசிக்கின்ற கல்முனை பஸாரினை இரண்டாக துண்டாட அனுமதிக்க முடியாது. இந்த கைங்கரியத்தை நீங்கள் செய்யவேண்டாம். கல்முனை மண்ணைப் பாதுகாக்க நான் உங்களிடம் பிச்சை கேட்கின்றேன். வேதனையாக இருக்கின்றது மனச்சாட்சியுடன் செயற்படுங்கள்.
அக்கரைப்பற்றின் பஸார், அரச காரியாலயங்கள், பொருளாதார மையம் உள்ளிட்ட இதர பிரதேசங்கள் இரண்டாக துண்டாடப்பட்டு ஆலையடிவேம்பு பிரதேச சபையுடன் இணைக்கப்பட்டபோது அமைச்சர் அதாவுல்லாவும், அக்கரைப்பற்று மக்களும் இந்த வேதனையை அனுபவித்துள்ளீர்கள். இதற்கெதிராக நீங்கள் கிளர்ந்தெழுந்ததை மறந்துவிட்டீர்களா?
எமது பிராந்திய மக்கள் அரசியல் அறிவில்லாத நிலையில் எமக்கு அரசியல் தலைமை கொடுத்த எம்.எஸ்.காரியப்பர் அவர்கள் அரசியல் தூரநோக்கோடு சிந்தித்து கல்முனைக்கு பட்டின சபை, சாய்ந்தமருது, மருதமுனை, கல்முனை தமிழர்களுக்கென உள்ளுராட்சி சபைகளை கொடுத்து அதற்கான எல்லைகள் வரையப்பட்டு வர்த்தகமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு ஆவணமாக்கப்பட்டுள்ளது.
கல்முனையினை நான்கு சபைகளாக பிரிக்க வேண்டுமானால், அமைச்சர் அதாவுல்லா அவர்களே நீங்கள் கஷ்டப்படத் தேவையில்லை. எங்களின் அரசியல் முதிசம் எம்.எஸ்.காரியப்பரினால் வரைந்து ஆவணமாக்கப்பட்டுள்ள அந்த பழைய வர்த்தகமானி எல்லையினை கொண்டதாக நீங்கள் உருவாக்க நினைக்கும் சபைகளுக்கான எல்லைகளாக நிர்மாணியுங்கள் அதனை ஏற்றுக்கொள்கின்றோம்.
இவர்களின் கல்முனைக்கான இந்த சதிமுயற்சிகைளக் கேள்விப்பட்டு தடுப்பதற்காகவே அன்று நான் அலரிமாளிகைக்கு சென்றேன் என்பதை அமைச்சர் அதாவுல்லாவின் மூலம் இன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதனை வைத்து என்மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரங்களை ஊடகங்கள் வாயிலாக மேற்கொண்டனர். இன்று அவைகள் பொய்ப்பிக்கப்பட்டுள்ளதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் எனவும் குறிப்பிட்டார்;.
சபாஸ்... சரியான போட்டி... ஹரிஸ் உம் அறுவடை செய்கிறார் அதாவுல்லாவும் அறுவடை செய்கிறார்...!
ReplyDeleteபோராடி வெல்லும் குணம் கொண்ட கல்முனை மக்களின் ஆற்றலையும் அனுபவத்தையும் இந்த ஹரீஸ் எம்பி தனது அரசியல் இலாபத்துக்காக கொச்சை படுத்தியுள்ளார்.
ஒரு தொலைபேசி மூலம் அதாவுல்லாவிடம் காதும் காதும் வைத்து பேசி காரியம் சாதிக்க வேண்டிய விடயத்தை... இப்படி சொல்லி தனது வாக்கு வங்கியை அதிகரிக்கலாம் என்று சிறு பிள்ளை தனமாக நடந்து கொள்ளுவது ஹரிஸ் எம்பி யின் அரசியல் முதிர்ச்சி இன்மையையும் அரசியல் பிச்சைகார தனத்தையும் காட்டுகிறது.