Header Ads



அந்த ஒரு காட்சி, அந்த ஒரு வேளை, கதாநாயகன் நீங்கள்தான்...!!!

ஒவ்வொரு மனிதனும் சந்திக்கக்கூடிய அந்த வேளையைப் படம் பிடித்துக் காட்டுகிறது திருக்குர்ஆன்.. ஆம், அதுதான் பிறந்தது முதலே உங்கள் உடலோடு ஒட்டி உறவாடிக் கொண்டு இருந்த உங்கள் உயிர்.... ஆருயிர்... இன்னுயிர்.... என்றெல்லாம் அழைப்பீர்களே அது உங்களை விட்டுப் பிரியும் வேளை.....

அக்காட்சியில் கதாநாயகன் வேறு யாருமல்ல... நீங்கள்தான்!.

அக்காட்சியை உங்களைச்சுற்றி பலரும் கண்டு கொண்டு நிற்கிறார்கள். ஆனாலும் உங்கள் கவனம் அவர்களின்மீது இல்லை. ஏனெனில் அவர்கள் காணாத ஒன்றையல்லவா நீங்கள் காண்கிறீர்கள்! அவ்வேளையில் உங்களுக்கு மட்டுமே புலப்படும் சில காட்சிகள் அவர்களுக்குப் புலப்படுவதில்லை.

உயிர் பறிக்க வந்துள்ள வானவர் அல்லவா உங்கள்முன் நிற்கிறார்! உங்கள் முகம் நீங்கள் அனுபவித்துக்கொண்டு இருக்கும் வேதனைகளை வெளிப்படுத்துகிறது...... உங்கள் கால்கள் ஒன்றோடு ஒன்று பின்னிக் கொள்கின்றன.....

உங்கள் தாய் தந்தை, மனைவி, மக்கள்,சகோதரி, சகோதரர்கள், நண்பர்கள். கைவிரித்து விட்ட மருத்துவர்கள், என பெரும் பட்டாளமே அங்கு திரண்டுள்ளது...... ஆனால் யாராலும் எதையும் செய்ய முடியாத ஒரு சூழ்நிலை! அனைவருக்கும் உங்கள் மேல் அன்பும் உண்டு, அனுதாபமும் உண்டு....இருந்தும் என்ன செய்ய? யாருக்கும் கட்டுப்படாத ஒன்றல்லவா உயிர் என்பது. அதுவல்லவா அங்கு பறிக்கப் படுகிறது!

அக்காட்சியை இன்னொருவனும் கண்டுகொண்டு நிற்கிறான். ஆம், உங்களைப் படைத்தவனும் இதுகாறும் பரிபாலித்து வந்தவனும் ஆன உங்கள் இறைவன்.... அக்காட்சியின் இயக்குனரும் அவன்தான்! இதோ அவனே அதை வர்ணிப்பதைப் பாருங்கள்!

56:83 .மரணத் தறுவாயில் ஒருவனின்(உயிர்) தொண்டைக் குழியை அடையும் போது -

56:84. அந்நேரம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

56:85 .ஆயினும், நாமோ அவனுக்கு உங்களை விட சமீபமாக இருக்கிறோம். எனினும் நீங்கள் பார்க்கிறீர்களில்லை.
அவ்வளவு அருகாமையில் அக்காட்சியை இயக்கிக்கொண்டிருக்கும் அவன் உங்களைப் பார்த்துக் கேட்கிறான் சற்றே செவிமடுத்துக் கேளுங்கள், இதோ உங்களுக்கு ஒரு சவால் விடுக்கிறான் முடிந்தால் எதிர்கொள்ளுங்கள்:

56:86 எனவே, (மறுமையில் உங்கள் செயல்களுக்கு) கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள் என்று இருந்தால் -

56:87 நீங்கள் உண்மையாளராக இருப்பின், (அவ்வுயிரை)மீளவைத்திருக்கலாமே!

படைத்தவன் விடுக்கும் சவாலின் விவரம் இதுதான்:

ஆம், நான்தான் உங்களுக்கு உயிரைக் கொடுத்தேன். எதற்காக? இந்தத் தற்காலிக உலகில் உங்களைப் பரீட்சிப்பதற்காக. அந்தப் பரீட்சை இன்றோடு முடிந்துவிட்டது. இனி மீதமிருப்பது பரீட்சையில் வென்றவர்களுக்கும் தோற்றவர்களுக்கும் கூலி கொடுப்பதுதான். இது எனது ஏற்பாடு. இதைத்தான் எனது தூதர்கள் மூலமும் வேதங்கள் மூலமும் உங்களுக்கு எடுத்துரைத்தேன். எனது ஏற்பாட்டில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அப்படியென்றால் உங்கள் நம்பிக்கை எவ்வளவு சரியானது என்பதைப் பரீட்சித்துப் பார்க்கலாமே! நீங்கள்தான் சரி என்றால்......

இதோ சென்று கொண்டிருக்கிறதே ஓர் உயிர்... அதைக் கொஞ்சம் தடுத்து நிறுத்த முடிகிறதா பாருங்கள் அல்லது அதோ, சென்று விட்டதே அந்த உயிர்!.... அதை மீள வையுங்கள் பாப்போம்.சற்றுமுன்னர் வரை இருந்த எல்லாமே இப்போதும் உங்கள் முன்னர் தானே உள்ளது. இதயம்,நுரையீரல், மூளை, சிறுநீரகங்கள், ஜீரண அமைப்பு, கை கால்கள் என முழுமையான உடல், நவீன விஞ்ஞானம் கண்டுபிடித்துத் தந்த மாற்று அவையவங்கள்,விஞ்ஞான வளர்ச்சியில் நீங்கள் கண்டுபிடித்து நிர்மாணித்த இயந்திரங்களும் உபகரணங்களும் தலைசிறந்த அறிவாளிகளின் பட்டாளமும் உச்சாணிக்கொம்பில் நின்றுகொண்டு இருக்கும் தொழில்நுட்பமும் என அனைத்துமே உங்கள் கைவசம்! எங்கே அந்த பறிக்கப் பட்ட உயிரை மட்டும் சற்று மீட்டு வாருங்கள் பாப்போம்!

பழுதடைந்த இதயத்தை, அல்லது சிறுநீரகத்தை அல்லது வேறு உறுப்புக்களை மாற்று அறுவைசிகிச்சைகள் மூலம் மாற்றினீர்கள். இருந்தும் அந்த உயிரை மட்டும் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லையே! ஏன்? இன்னும் இதோ இன்னொருவர்... இவருக்கு எந்த உறுப்புப் பழுதடையாமலே இருக்கிறதே. இருந்தும் என்ன தயக்கம்.... உயிர் மட்டும் தானே மிஸ்ஸிங்.... அதை மீட்டுக்கொண்டு வந்து விட்டால் மீண்டும் எழுந்து நடமாடுவார் அல்லவா? அதை மீட்டுவர ஏன் முடிவதில்லை?

உயிர் என்பது வாஸ்தவமான ஒன்றுதானே, இல்லாத ஒரு பொருள் அல்லவே! சற்றுமுன் அந்த உடலுக்குள் இருந்ததற்கு நீங்களே சாட்சி! சுற்றி நிற்கும் உங்கள் அனைவரின் கண் முன்பாகவே எங்கே அது தப்பித்து ஓடியது? உங்கள் அதிநவீன நுண்ணோக்கிகளுக்கும் தொலைநோக்கிகளுக்கும் ஏன் அது மட்டும் தட்டுப்படாமல் போயிற்று?

கடவுள் இல்லை, இல்லவே இல்லை... கடவுளைக் கற்பித்தவன் முட்டாள், கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று ஒரு அதிபுத்திசாலிகளின் கூட்டம் முழங்கிக் கொண்டு திரிந்ததே .... இன்னும் திரிந்துகொண்டு இருக்கிறதே அவர்களையாவது உதவிக்கு அழைத்துப் பாருங்கள், அவர்களிடம் ஏதாவது சூத்திரம் இருந்தால் பிரயோகித்துப் பார்க்கட்டுமே! விஞ்ஞானமே எல்லாம் என்று பீற்றிக்கொள்ளும் ஜாம்பவான்கள் எங்கே ஓடி ஒளிந்தார்கள்? அணுவாயதங்களைத் திரட்டி தங்களது விரல் நுனியில்தான் உலகம் என்று மிரட்டிக் கொண்டிருக்கும் வல்லரசுகளின்'வல்லமை" இவ்விடயத்தில் எங்கே போனது?

இவ்வாறு மனிதனின் இயலாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறான் வல்ல இறைவன்!

இனி,பிரிக்கப்பட்ட உயிருக்கு உரியவரின் கதி என்ன? இதோ தொடர்கிறான்.....

56:88 .(இறந்தவர் இறைவனுக்கு)நெருக்கமானவர்களில் நின்றும் இருப்பாராயின்.

56:89 .அவருக்குச் சுகமும், நல்லுணவும் இன்னும் பாக்கியமுள்ள சுவர்க்கமும் உண்டு.

56:90. அன்றியும், அவர் வலப்புறத்துத் தோழராக இருந்தால்,

56:91 .''வலப்புறத்தோரே! உங்களுக்கு ''சாந்தி உண்டாவதாக'' (என்று கூறப்படும்).

அதாவது இவ்வுலகில் தனது நற்செயல்கள் மூலம் இறைவனுக்கு நெருக்கமாகி விட்டவராகவோ இறைவனின் திருப்தியைப் பெற்றுவிட்டவராகவோ அவர் இருந்தால் அவருக்கு கவலை இல்லை.ஆனால் அந்த பிரியும் உயிருக்கு உரியவர் இறைவன் வழங்கிய வாழ்க்கை நெறியையும் அவன் வேதத்தையும் தூதர்களையும் புறக்கணித்தவராக இருந்தால் அவரின் நிலை மிகவும் கவலைக்குரியதே!

56:92 .ஆனால் அவன் வழிகெட்டுப் பொய்யாக்குவோரில் (ஒருவனாக) இருந்தால்

56:93 .கொதிக்கும் நீரே, அவனுக்கு விருந்தாகும்.

56:94. நரக நெருப்பில் தள்ளப்படுவது(விருந்தாகும்).

மேற்கூறப்பட்டவை கட்டுகதைகளோ கற்பனைக் காவியங்களோ அல்ல, நாளை நடக்க இருக்கும் உண்மைகளாகும். இவை நடந்தே தீரும்! ஏனெனில் இவை இவ்வுலகின் உரிமையாளனின் வார்த்தைகளாகும்!

56:95 .நிச்சயமாக இதுதான் உறுதியான உண்மையாகும்.

56:96 .எனவே (நபியே!) மகத்தான உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு துதி செய்வீராக.

quranmalar

No comments

Powered by Blogger.