Header Ads



சிங்கவர்கள் மத்தியிலும் ஆட்சி மாற்றம் பற்றி, பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது - ரவூப் ஹக்கீம்

(எம்.ஏ.றமீஸ்)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூறு போடப்படாமலும் எந்தவொரு உறுப்பினர்களையும் பலி கொடுக்காமலும் இருப்பதற்காக தருணம் பார்த்துக் கொண்டிருந்ததனாலேயே ஜனாதிபதித் தேர்தல் சம்பந்தமாக எமது முடிவு தாமதமாகியது என முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரபால சிறிசேனவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் அக்கரைப்பற்றில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில், எமது முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்பட்ட அநியாயங்களுக்கும் அட்டூழியங்களுக்கும் அரசாங்கத்திற்கு பாடம் புகட்டும் வகையில் சந்தர்ப்பத்ததைப் பார்த்துக் கொண்டிருந்த நாம் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளித்தோம்.

இந்த முடிவினை நாங்கள் ஏற்கனவே எடுத்திருக்க முடியும். இருப்பினும் கடந்த காலங்களில் எமது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கூறுபோடப்பட்டதனைக் கருத்திற்கொண்டு எமது கட்சியில் சேதாரம் எதுவும் ஏற்படாமல் மக்கள் விருப்பிற்கு ஏற்ப ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எமது முடிவை அறிவிக்க தருணம் பார்த்திருந்தோம். அதனாலேயே முடிவை அறிவிக்கும் விடயத்தில் தாமதம் ஏற்பட்டது.

எமது நாட்டின் நாலா பாகங்களிலும் வாழ்கின்ற மக்கள் ஆட்சி மாற்றம் ஒன்றை எதிர்பார்த்த வண்ணமே உள்ளனர். ஆட்சி மாற்றம் நாட்டில் ஏற்பட வேண்டும் என நாம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே கருதியிருந்தோம். இருந்தாலும் ஆட்சி மாற்றத்திற்கு தலைமை தாங்குவது யார் என்ற கேள்வி இருந்தமையாலேயே நாம் மௌனமாக இருக்க வேண்டி ஏற்பட்டது.

நாட்டில் வாழும் சிறுபான்மைச் சமூகம் முற்று முழுதாக தீர்மானித்து விட்டதைப் போல் சிங்கவர்கள் மத்தியிலும் ஆட்சி மாற்றம் பற்றி பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நமது முஸ்லிம் தலைமைகள் நிதானமாகவும் பக்குவமாகவும் தமது கருத்துக்களை வெளியிடவேண்டும். சிங்கள மக்களின் அபரிமதமான ஆதரவு எக்கிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கும் அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களையும் ஆவேசப்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதில் தவிர்க்க வேண்டும். அப்போதுதான் மிகக் கூடுதலான வாக்குகளை மைத்திரபால சிறிசேனவிற்காக பெற்றுக் கொடுக்க முடியும்.

அரசியலில் சரியான வேலையை சரியான சந்தர்ப்பத்தில் செய்ய வேண்டும். அந்த வகையில் கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி செய்த தவறை இனியும் செய்யாதவாறு நாம் நடந்திருக்கின்றோம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறக்கும் வரை ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற நம்பாசை மனதில் எழுந்தபோது 17வது திருத்தச் சட்டத்திற்கு கொஞ்சம் கையை தூக்குங்கள் என்று அரச தரப்பு எம்மை வேண்டியது. போனால் போகட்டும் என்று நாம் கையைத் தூக்கினோம். 17 வது திருத்தச் சட்டத்தின் மூலம் மேலும் பல விடயங்கள் நீக்குவதற்கு நாம் அறியாமலேயே காரணமாகி விட்டோம். இதனை நாடு தழுவிய ரீதியில் மக்களால் விமர்சிக்கப்பட்டு வந்த போதிலும் அதற்கு பிராயச்சித்தமாக நாம் தற்போது எமது முடிவினை அறிவித்திருக்கின்றோம்.

கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தல் கிழக்கு மாகாண ஆட்சியில் மாற்றத்தைக் கொண்டுவர முஸ்லிம் காங்கிரஸிற்கு சந்தர்ப்பம் இருந்தும் அதனையும் இந்த அரசாங்கத்திற்கு தாரை வார்த்துக் கொடுத்தோம். இரண்டு அமைச்சுப் பதவிக்காக முஸ்லிம் காங்கிரஸ் சோரம் போய்விட்டதென்று மக்கள் பேசினார்கள். இவ்வாறாக மக்கள் பல சந்தர்ப்பங்களில் பேசி வந்த போதிலும் உச்சகட்ட சகிப்புத் தன்மையுடம் நாம் இருந்து நமது மக்கள் சக்தியை அரசாங்கம் கௌரவமாக நடத்தும், மக்கள் நலனில் அக்கறை கொள்ளும் என எதிர்பார்த்திருந்தும் அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் அரசாங்கம் எம்மை ஓரம் கட்டும் முயற்சியிலேயே ஈடுபட்டது.

அரசாங்கத்தின் பக்கம் எமது ஆதரவு இருக்க வேண்டும் என்பதற்காக அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் மேலதிக அரசாங்க அதிபர் ஒருவரை நியமித்துத் தருகின்றோம் என அரச தரப்புச் சொல்லியது. எந்தவித அதிகாரமுமில்லாத அரசாங்க அதிபர் நியமனத்ததை விட்டு எமக்காக கரையோர மாவட்டத்தினைப் பெற்றுத் தருமாறு கோரியிருந்தோம். கரையோரப் பிரதேசத்திலுள்ள 96 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் இதன்மூலம் நன்மை பெறுவார்கள் என வலியுறுத்தினோம். அந்த விடயம் தற்போது பௌத்த மக்கள் மத்தியில் நாட்டை நாம் கூறு போட முயற்சிப்பதாக தவறான முறையில் பேசப்பட்டு வருகின்றது. அதுமட்டுமல்;லாமல் இந்த விடயத்தினை வைத்துக் கொண்டு அரச ஊடகங்கள் அலறுவதையும் நாம் காணமுடிகின்றது என்றார்.

No comments

Powered by Blogger.