முஸ்லிம் சமூகத்தின் முன்னால் 2 கடமைகள் இருக்கன்றன - அப்துர் ரஹ்மான்
"இன்று நாட்டில் ஏற்பட்டிருப்பது ஒரு மாற்றம் என்பதை விடவும் ஒரு மாற்றத்திற்கான தொடக்கம் என்று கூறுவதே பொருத்தமானதாகும். இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகத்தின் முன்னால் இரண்டு கடமைகள் இருக்கன்றன. அதிலொன்று தேசியக் கடமையாகும், மற்றையது சமூகக் கடமையாகும்" என NFGGயின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் தெரிவித்தார்.
மாற்றத்திற்கு பங்களிப்புச் செய்த மக்களைப் பாராட்டுவோம் என்ற மகுடத்தில் NFGG நாடளாவிய ரீதியில் நடாத்திவரும் மக்கள் சந்திப்புத் தொடரில் மற்றுமொரு நிகழ்வு கடந்த 23.01.2015 அன்று அக்கரைப்பற்றில் நடைபெற்றது.
NFGG யின் தலைமைத்துவ சபை உறுப்பினர் சிராஜ் மஷூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் உரையாற்றும் போது அப்துர்ரஹ்மான் மேலும் தெரிவித்ததாவது..
"நடக்கவே முடியாது என நினைத்திருந்த ஒரு அரசியல் மாற்றம் இப்போது நடந்திருக்கிறது. இந்த மாற்றம் நிகழாமல் மேலும் இரண்டு வருடங்களுக்கு பழைய ஆட்சியே நீடித்திருந்தால் இந்நாட்டின் நிலை என்னவாகும் என நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.
இதனை ஒரு முழுமையான மாற்றம் என்று சொல்வதை விடவும் ஒரு மாற்றத்திற்கான தொடக்கம் என்று சொல்வதே பொருத்தமாகும். மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இந்நாட்டின் நீதித்துறை, பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு, சமூக நல்லிணக்கம் என அத்தனை விடயங்களும் சீரழிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில்தான் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் பௌத்த மதகுருமார்களும், புத்தி ஜீவிகளும் களத்தில் இறங்கினர்.
எனினும், மஹிந்தவை அனுப்பி விட்டு மைத்திரியை அதிகாரக் கதிரையில் அமர்த்துவது நோக்கமாக இருக்கவில்லை. வெறும் ஆட்சிமாற்றமாக இல்லாமல் ஒரு ஆட்சி முறை மாற்றத்திற்கான தொடக்கமாகவே, மஹிந்தவை ஜனாதிபதித் தேர்தலில் தோற்க்கடிப்பதனைப் அனைவரும் பார்த்தனர்.
அந்த வகையில், ஜனாதிபதி தேர்தலின் பின்னர் எவ்வாறு அந்த நல்லாட்சியை நோக்கிய ஆட்சி முறை மாற்றம் நிகழ வேண்டும் என்பதற்கானஒரு தெளிவான திட்டப்பாதையும் வகுக்கப்பட்டது. அதனடிப்படையிலேயே மாற்றத்திற்கான ஆணையை மக்கள்வழங்கினர்.
எனவேதான் இப்போது ஏற்பட்டிருப்பதானது ஒரு முழுமையான மாற்றமின்றி மாற்றத்திற்கான தொடக்கமேயாகும் என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.
இந்த சந்தர்ப்பத்தில் எம்முன்னே இரண்டு கடமைகள்இருக்கின்றன. அதிலொன்று தேசியக்கடமையாகும், மற்றையது நம் சமூகம் சார்ந்த கடமையாகும்.
அந்த வகையில்ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் நல்லாட்சியொன்றை நோக்கிய ஆட்சி மாற்றப் பயணப் பாதையின் இலக்குகளாக என்னவென்ன விடயங்கள் முன்வைக்கப்பட்டதோ அவை முறையாக நிறைவேற்றப் படுகின்றனவா..? என்பதனை நாம் பொறுப்புடன் அவதானிக்க வேண்டும். அதற்காக ஆட்சிமாற்றத்திற்கு காரணமாக அமைந்த அந்த மக்களின் விழிப்புணர்ச்சியினை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளவேண்டும். மக்களிடம் முன்வைக்கப்பட்ட இலக்குகள் அல்லது விடயங்கள் ஏதும் மறக்கப்பட்டால் அல்லது புறக்கனிககப்பட்டால், அதனைப் புதிய அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டி அழுத்தம்கொடுப்பதும் அவற்றை நிறைவேற்றச் செய்வதுமே எமது தேசியக் கடமையாக இருக்கிறது.
அடுத்ததாக நம் சமூகம் சார்ந்த கடமை யொன்றும்இருக்கிறது. மக்களின் உணர்வுகளை மதிக்காத சர்வதிகார தலைமைகளையும் ஊழல் மோசடிகளையும் அதிகார துஸ்பிரயோகங்களையும் ஒழித்து நாட்டில் நல்லாட் சிநிலையொன்று ஏற்படுகின்ற போது அதற்கு தொடர்ச்சியாக பங்களிப்புச்செய்து அதன் நன்மைகளில் நமது சமூகமும் பங்காளியாகமாறவேண்டும். அதற்கேற்ற வகையில் நம் சமூகத்தில் அரசியல் நிலவரங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்.
இன்று நாட்டில் ஏற்படுத்தப் பட்டிருப்பது போல் ஒரு அரசியல் மாற்றம் நம் சமூகத்திலும் ஏற்படுத்தப் பட வேண்டும். அது நல்லாட்சியை நோக்கிய ஒரு புதிய அரசியல் வழிமுறையாகவும், புதிய அரசியல் கலாசாரமாகவும் ஒரு புதிய தலைமைத்துவக் கட்மைப்பாகவும் அந்த மாற்றம் உருவாகவேண்டும். இது நம் சமூகம் சார்ந்த நமது கடமையாகஇ ருக்கிறது.
எனவே ஏற்பட்டிருக்கின்ற இந்த அரசியல் சூழ்நிலைகளை ஒரு மாற்றத்திற்கான தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டு நமதுகடமைகளைச் செய்ய எல்லோரும் முன் வரவேண்டும்."
அப்துல் ரஹ்மான்,
ReplyDeleteபொருத்தமான நேரத்தில் மிகப்பொருத்தமான கருத்துக்களைக் கூறியிருக்கின்றீர்கள்.
'வைத்தால் குடுமி அடித்தால் மொட்டை' என்று கிராமியப் பழமொழி வழக்கத்திலுள்ளது.
அது நம்மவர்களிலே கணிசமானவர்களுக்கு பொருந்தும். அதாவது ஒருவரை தூக்கிப்பிடித்தால் உச்ச அளவில் தூக்குவார்கள். தாக்கத் தொடங்கினால் ஒழித்துக்கட்டுமளவுக்கு தாக்குவார்கள்.
இப்படி இரு அந்தங்களுக்கும் செல்வதற்குப் பதிலாக அறிவுபூர்வமாகவும் யதார்த்தமாகவும் சூழ்நிலை புரிந்து நடந்து கொள்வதுதான் இன்றைய அரசியல் அவசியமாகவுள்ளது.
கடந்த தேர்தலின் இறுதிப்பிரச்சாரத்தின்போது முன்னாள் ஜனாதிபதியும் அவரது பரிவாரங்களும் பச்சைத் துவேசத்தை கக்கி சிங்கள பௌத்தர்களை உசுப்பேற்ற முயன்றதை நேரடி ஐடிஎன் ஒளிபரப்பில் பார்த்திருப்போம். அதைப் பார்த்தபோது ஒரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவளுக்கு ஏற்படக்கூடிய அச்சத்தையும் மீறி எனக்கு பெரும்பான்மை சமூகத்தின் மீது அனுதாபமே உண்டானது.
ஆம், அந்த சமூகத்தவர்களில் கணிசமானோரின் அறிவுமட்டம் அடிமட்டத்திலும் உணர்ச்சி (யால் தூண்டப்படும்) மட்டம் அதி உச்சத்திலும் இருப்பதைப் புரிந்து கொண்டுதானே இத்தகையோர் பொதுவிழுமியங்களைக் கூட அலட்சியம் செய்து விட்டு அப்படிக் கூச்சலிட்டனர். அப்படியானால் அவர்கள் தங்களது சொந்த மக்களின் சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கும் அறிவை வளரவிடாமல் இன்னும் காட்டுமிராண்டி யுகத்திலேயே வைத்துக்கொண்டிருக்கும் துரோகத்தைத்தானே செய்து கொண்டிருக்கின்றனர்.
அங்கனமே இதை நமது சமூகத்திற்குப் பொருத்திப் பார்த்தால், முன்னாள் ஜனாதிபதியும் பரிவாரங்களும் செய்த விடயத்தைத்தான் நமது அரசியல்வாதிகளும் நம்மிடையே -வேறுவகையில் சில மாற்றங்களுடன்- செய்து வருகின்றனர். இன்னும் செய்துவரலாம் என்று எதிர்பார்த்திருக்கின்றனர்.
எனவே நாம் இனிமேலும் அறிவுபூர்மாக இல்லாமல் வெறும் உணர்வுபூர்வமாக மட்டும் இருந்து கொண்டிருந்தால்....
'பட்டுவேட்டி பற்றிய கனாவிலிருந்தால் கட்டியுள்ள கோவணமும் களவாடப்படுவோம்'
(கவி வரி உபயம்: வைரமுத்து)