Header Ads



10 பில்லியன் ரூபா கடன்பெற்ற கோதாபய, அதை செலுத்தும் பொறுப்பை மின்சார சபையிடம் ஒப்படைத்தார்

கொத்தலாவல தனியார் மருத்துவ பீடத்தை அமைப்பதற்காக தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து கடனைப் பெற்றுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ  அந்தக் கடனைச் செலுத்தும் பொறுப்பை மின்சார சபை மீது  சுமத்தியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார். அமைச்சர் அங்கு மேலும் தெரிவிக்கையில்;

கொத்தலாவல பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான வைத்தியசாலையை அமைப்பதற்காக கோதாபய ராஜபக்ஷ தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்தே தேவையான  கடனைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

 இந்நிலையில் அந்தக் கடனைச் செலுத்த வேண்டிய பொறுப்பு மின்சார சபை மீது சுமத்தப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு வங்கியிடமிருந்து அதிக வட்டிக்கு 10 பில்லியன் ரூபாவைப் பெறுமாறு மின்சார சபைக்குப் பணிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மானிய வட்டிக்கு கோதாபயவின் தனியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட அதிக வட்டிக்குரிய தொகையை மின்சார பாவனையாளர்கள்  செலுத்த வேண்டியுள்ளது. இந்த நிலைமையை மாற்றியமைக்க நடவடிக்கையெடுத்துள்ளோம் என்றார்.

No comments

Powered by Blogger.