Header Ads



கிழக்கு மாகாண சபை, பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு


(அஸ்லம் எஸ்.மௌலானா)

கிழக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வு பெப்ரவரி 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை தவிசாளர் ஆரியபதி கலப்பதி தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) காலை 9.30 மணியளவில் கிழக்கு மாகாண சபை அமர்வு ஆரம்பமானது.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குழுத் தலைவர் ஏ.எம்.ஜெமீல் விசேட கூற்று ஒன்றை வெளியிட்டார்.

அதாவது ஆளும் தரப்புக்கு பெரும்பான்மை இல்லாத போதிலும் மக்கள் நலன் கருதி இன்று 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிப்பது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருந்தது.

எனினும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது உள்ளிட்ட நிதி விவகாரத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால கிழக்கு மாகாண சபை நிர்வாகத்திற்கு ஒரு மாத காலம் விசேட அனுமதி வழங்கி- அதற்கான பணிப்புரையை விடுத்திருப்பதால் இன்றைய அமர்வில் குறித்த வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை எனக்கருதி இந்த அமர்வை ஒத்திவைக்குமாறு கோருகின்றேன் என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து சபை அமர்வை பெப்ரவரி 10ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக தவிசாளர் அறிவித்தார்.

இதன்படி கிழக்கு மாகாண சபையின் அமர்வொன்று மூன்றாவது தடவை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை வரலாற்றில் இது முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த டிசம்பர் மாதம் ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வின்போது முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டிருந்த நிலையில் அந்த அமர்வு இம்மாதம் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

எனினும் அன்றைய தினம் ஆரம்பமான சபை அமர்வு நேற்று 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜானதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்கும் தீர்மானத்தை மேற்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையிலும் ஆதரவை விலக்கிக் கொண்டதைத் தொடர்ந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கிழக்கு மாகாண சபையில் பலம் இழந்துள்ளதையடுத்து ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை காரணமாகவே சபை அமர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்து கிழக்கு மாகாண சபையில் மாற்று ஆட்சியை நிறுவுவதற்கான பேச்சுவார்த்தைகளிலும் இழுபறி காணப்பாடு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இந்த அதிகார இழுபறி காரணமாக கிழக்கு மாகாண சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்படாததால் கிழக்கு மாகாண அரச சேவை ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளம் வழங்குவதிலும் பிரச்சினை ஏற்பட்டிருந்தது. 

எனினும் ஜனாதிபதி விடுத்துள்ள விசேட பணிப்புரையின் பேரில் சம்பளம் வழங்குவதற்கான மாற்று ஏற்பாடுகளை மாகாண ஆளுநர் மேற்கொண்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.