வடகொரியாவில் பலூன் மூலம், 1 லட்சம் டி.வி.டி.க்களை கொட்டுவதற்கு திட்டம்
சர்ச்சைக்குரிய, 'இன்டர்வியூ' படத்தின், 1 லட்சம் டி.வி.டி.,க்களை, பலுான் மூலம், வடகொரியாவில் கொட்டப் போவதாக, தென்கொரியாவில் வசிக்கும் பார்க் சங்யக் என்ற, அதிருப்தியாளர் தெரிவித்துள்ளார்.இது, இப்படம் குறித்து ஏற்கனவே கடுப்பில் உள்ள வடகொரியாவிற்கு, மேலும் ஆத்திரத்தை மூட்டியுள்ளது.வடகொரிய சர்வாதிகாரி, கிம் ஜங் உன் மீதான இரு பத்திரிகையாளர்களின் கொலை முயற்சியை சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தின், 'இன்டர்வியூ' படம் விவரிக்கிறது.இதனால் ஆத்திரமடைந்த வடகொரியா, இன்டர்வியூ படம் வெளியாகும் திரையரங்குகளில் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்தது.இதனால், படவெளியீட்டை நிறுத்திய சோனி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை திருப்தி படுத்த, கிறிஸ்துமசுக்கு, 200 திரையரங்குகளில் மட்டும் படத்தை வெளியிட்டது.
இது, சராசரி படம் என்ற விமர்சனத்துடன், அமெரிக்காவில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதை, எப்படியாவது வடகொரிய மக்களிடம் சேர்க்க, வரிந்து கட்டி களமிறங்கியிருக்கிறார் பார்க் சங்யக். கொரிய மொழி சப் டைட்டில் உடன், 1 லட்சம் டி.வி.டி., மற்றும் 'பென் டிரைவ்'களை, பலுான் மூலம் போட உள்ளார். மார்ச்சில் பருவக் காற்று, வடகொரியாவுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அப்போது, பலுானை பறக்க விட திட்டமிட்டுள்ளார்.கடந்த ஆண்டு அக்டோபரில், வடகொரியாவிற்கு எதிரான பிரசுரங்கள், பலுானில் பறக்க விடப்பட்டன. அவற்றை, ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
அதே கதி, 'இன்டர்வியூ' படத்திற்கும் நேரலாம் என, தெரிகிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், வடகொரியாவில், கம்ப்யூட்டர் வைத்திருக்கும் வீடுகளின் எண்ணிக்கை மிக மிக குறைவு.அதை வாங்க, ஒருவர் தன் மூன்று மாத சம்பளத்தை தியாகம் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி, அதற்கு அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்.இதனால், 'இன்டர்வியூ' டி.வி.டி., திட்டம் வெற்றி பெறுமா அல்லது புஸ்வாணம் ஆகுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
putting the fingers into others matter, is a common practice of US allies
ReplyDelete