ஆட்சிமுறை மாற்றம் தொடர்பில் NFGG யினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள்
ஆட்சிமுறை மாற்றத்திற்கான பொது வேலைத்திட்டத்தில் இணைந்துள்ள பங்காளிக் கட்சிகளில் ஒன்றான நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தனது முன்மொழிவுகள் மற்றும் ஆலோசனைகளை பொது எதிரணியிடம் முன்வைத்துள்ளது. நல்லாட்சியினை மேலும் உத்தரவாதப்படுத்துதல், ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்துதல் மற்றும் சிறுபாண்மை மக்களின் நலன்களைப் பாதுகாத்தல் போன்றவை தொடர்பான பல்வேறு முன்மொழிவுகளாக அவை அமைந்துள்ளன.
முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா போன்ற சட்ட அறிஞர்களுடனும் ஆட்சிமுறை மாற்றத்திற்கென உருவாக்கப்பட்டுவரும் சட்ட வரைவுகளோடு தொடர்புபட்ட பல்வேறு தரப்பினர்களோடும் NFGG தொடர்ச்சியான கலந்துரையாடல்களை மேற்கொண்டது. அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட முன்மொழிவுகளைப் பொது வேட்பாளர் அவர்களிடமும் மற்றும் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்களிடமும் NFGG தற்போது கையளித்திருக்கின்றது.
NFGG சமர்ப்பித்துள்ள முன்மொழிவுகள் பின்வருமாறு,
1. விகிதாசார மற்றும் தொகுதிவாரி முறைகளை உள்ளடக்கியதாக முன்மொழியப்படும் புதிய தேத்தல் முறையானது, உள்ளூராட்சி, மாகாண மற்றும் பாராளுமன்ற கட்டமைப்புக்களில் சிறுபான்மை மக்களினதும் மற்றும் சிறிய அரசியல் கட்சிகளினதும் போதுமான பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
2. தகவலறியும் சட்டம் பொது எதிரணியினரின் 100 நாள் வேலைத்திட்டத்தில் உடனடி நடவடிக்கைகளில் ஒன்றாக உள்வாங்கப்பட வேண்டும்.
3. வெளிநாடுகளில் தொழில் புரியும் பல இலட்சம் இலங்கையர்கள் சகல தேர்தல்களிலும் வாக்களிப்பதற்கான வசதிகளை இலங்கையின் தூதுவராலயங்கள் மூலமாக ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
4. இலஞ்சம் உழல் தொடர்பில் விசாரணைகளை மேற் கொள்வதற்கான சுயாதீன் ஆணைக்குழுக்களுக்கும் மேலதிகமாக, இலஞ்ச ஊழல் நடவடிக்கைகளைத் தடுக்கும் முகமாக புதிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஏனைய சில நாடுகளில் காணப்படுவது போல அரசியல் பதவிகளிலும் நிர்வாகப் பதவிகளிலும் இருக்கின்வர்களின் தனிப்பட்ட சொத்து சேகரிப்பு மற்றும் செலவு விபரங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கும் புதிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
5. இனவாத மதவாத மற்றும் வெறுப்புணர்வுப் பிரச்சாரங்களை மேற் கொள்ளும் தனிநபர்கள் குழுக்களுக்கு எதிரான உடனடி நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படும் அதே வேளை இந்நாட்டின் சகல சமூகங்களும் தத்தமது மத கலாசார உரிமைகளையும் தனித்துவங்களையும் பாதுகாத்து அனுபவிக்கின்ற சூழல் உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும். அத்தோடு சமூகங்களுக்கிடையிலான நல்லினக்கங்களை கட்டியெழுப்புவதை அடிப்படைப் பணியாகக் கொண்ட நல்லிணக்க சபைக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். இது பிரதேச மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் உருவாக்கப்படுவது அவசியமாகும்.
6. மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தமது கடமைகளைச் செய்யத் தவறுகின்ற பட்சத்தில் அவர்களை மீளழைப்பு செய்வதற்காக சாத்தியமான பொறிமுறை உள்வாங்கப்பட வேண்டும். அண்மையில் பிரித்தானியாவில் இதற்கொன முன்மொழியப்பட்டள்ள புதிய சட்டங்கள் முன்னுதாரணமாக கொள்ளப்பட வேண்டும்.
7. நாட்டின் வரவு செலவுத் திட்டத்தில் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு செய்யும் போது ஒவ்வொரு மாவட்டங்களினதும் சனத்தொகையும், அவர்களின் விசேட தேவைகளும் கருத்திற் கொள்ளப்படவேண்டும். மேலும் குறித்த ஒதுக்கீடுகள் உரிய நேரத்திற்கு கிடைக்கப்படாமையினால் பாரிய நிதித் தொகைகள் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் திறை சேரிக்கே அனுப்பப் படவேண்டிய நிலைமை காணப்படுகிறது. இதனைத் தவிர்க்குமுகமாக நிதிஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட 45 நாட்களுக்குள் அவை திட்டங்கள் அமுல் செய்யும் திணைக்களங்களுக்கு கிடைப்பதனை உறுதிப்படுத்த வேண்டும்.
8. கடந்த 2009 மே மாதம் யுத்தம் நிறைவு செய்யப்பட்ட போதிலும்கூட கடந்த 5 வருடங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் காணி மற்றும் வாழ்வாதார விடயங்கள் தொடர்பில் போதுமான தீர்வுகள் காணப்படவில்லை. எனவே, இந்த விடயங்கள் பற்றி தீவிர கவனம் செலுத்தி சகல சமூகத்திற்கும் ஏற்ற தீர்வுகள் எட்டப்படவேண்டும். அத்தோடு சிவில் நிர்வாக மற்றும் மக்களின் நாளாந்த நடவடிக்கைகளில் இராணுவ தலையீடு இல்லாத நிலை ஏற்படுத்தப்பட வேண்டும்.
9. நாட்டில் பரவலாக அதிகரித்து வரும் சமூகத் தீமைகளான மது, போதைப் பொருட்கள் விபச்சாரம், சூதாட்டம் மற்றும் கெசினோக்கள் என்பவை பரவுவதைத் தடுத்து அவற்றை அகற்றுவதற்கான தேசிய வேலைத்திட்டம் ஒன்று அமைக்கப்பட வேண்டும்.
10. சமூகங்களின் குடிப் பரம்பலை பாதிக்கும் வகையிலான அரச உதவியுடனான திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகள் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் தோற்றுவிக்கும் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக அமைந்திருக்கிறது. அந்த வகையில் நாட்டின் குடிமக்கள் தான் விரும்பிய எந்தப் பகுதியிலும் குடியேறி வாழும் உரிமையினை உத்தரவாதம் செய்யும் அதே நேரம் எந்தவொரு பிரதேசங்களிலும் அங்கு பரம்பரைபரம்பரையாக வாழும் சமூகங்களின் குடிசனப் பரம்பலை மாற்றும் வகையிலான எந்தவொரு குடியேற்றத் திட்டங்களையும் அனுமதிக்கக்கூடாது.
Post a Comment