Header Ads



IS ஸில் சேர்வதற்காக வங்கிக் கடன் பெற்றவர்கள் - அதிர்ச்சித் தகவல்

சிரியா, இராக்கில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) இயக்கத்தில் சேர்ந்து சண்டையிட மலேசியாவிலிருந்து செல்லும் சிலர் அதற்காக வங்கிக் கடன் பெற்றுள்ளனர் என்று அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்தனர்.

இராக், சிரியா செல்லத் திட்டமிட்ட, ஐ.எஸ். அமைப்பின் அனுதாபிகள் எனக் கூறப்படும் ஐந்து நபர்களை மலேசிய காவல் துறையினர் சமீபத்தில் கைது செய்தனர்.

கைதான நபர்கள் அளித்த தகவல்களிலிருந்து, இராக், சிரியா செல்வதற்கு வங்கிக் கடன் பெற்ற விவகாரம் தெரியவந்துள்ளதாக மலேசிய காவல் துறையின் சிறப்பு புலனாய்வு அமைப்பின் துணை இயக்குநர் அயூப் கான் மைதீன் பிச்சை கூறினார்.

ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்து சண்டையிடச் செல்லத் திட்டமிட்டவர்கள் தங்களது சொத்துகளை விற்றுப் பணம் திரட்டுவது அல்லது பிறர் அளிக்கும் பணத்தைப் பயன்படுத்திப் பயணம் மேற்கொள்வது போன்ற வழிகளைப் பின்பற்றி வந்தனர்.

எனினும் இராக், சிரியா செல்லத் திட்டமிட்ட சிலர், வங்கிக் கடன் பெற்றிருப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த வழியைப் பின்பற்றுவது தற்போது அதிகரித்து வருவதாகவும் தெரிகிறது.

அண்மையில் பிடிபட்ட ஐந்து பேரும் தங்களது எல்லா சொத்துகளையும் விற்றுவிட்டனர். மேலும், அவர்கள் வங்கிக் கடன் பெறவும் விண்ணப்பித்திருந்தனர். ஒருவர் ரூ. 20 லட்சத்துக்கும் அதிகமான தொகையைக் கடனாகப் பெற விண்ணப்பித்திருந்தார்.

கோலாலம்பூர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 30 வயது மதிக்கத்தக்க நபர், தனது வேலையை ராஜிநாமா செய்துவிட்டு, வங்கிக் கடன் பெற்றிருந்தார். புருணை, இந்தியா ஆகிய இடங்களுக்கும் அவர் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார் எனத் தெரிய வந்தது.

திருப்பிக் கொடுக்கும் உத்தேசமின்றி வங்கிக் கடன் பெற்று ஏற்கெனவே சிலர் இராக், சிரியா சென்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

அந்த நபர்கள் மலேசியா திரும்பினாலும், அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. அந்த நிலையில், வங்கிக் கடன் ஒரு முக்கியப் பிரச்னையாக இருக்காது என்ற எண்ணம் உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து வங்கிகளும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், கடன் பெற விண்ணப்பம் செய்பவர்கள் குறித்து தீவிர விசாரிப்பு நடத்திய பிறகே கடன் அளிக்க வேண்டும் எனவும் சிறப்புப் புலனாய்வு அமைப்பின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது என்றார் அவர்.

No comments

Powered by Blogger.