Header Ads



மஹிந்தவா..? மைத்திரிபாலவா..?? என்பதை பார்ப்போம் - ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்த்தில் சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பதை யாரும் பாடம் நடத்தி தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. மக்கள் தெளிவான முடிவெடுப்பார்கள். என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை 11 மணிக்கு மாளிகாவத்தையில் அமைந்துள்ள ஜமாத்தின் தலைமையகத்தில் நடைபெற்றது.

தவ்ஹீத் ஜமாத்தைப் பொருத்தவரையில் ஆன்மீகப் பிரச்சாரம் செய்வதுடன், முஸ்லிம் உரிமைக்காக போராடும் ஓர் அமைப்பே தவிர அரசியல் கட்சியல்ல.

இலங்கை வாழ் சிறுபான்மை மக்களுக்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராக கடந்த காலங்களில் பலவிதமான இனவாத செயல்பாடுகளையும் முன்னெடுத்த இனவாத அமைப்புகள் தமது ஆதரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அளித்துள்ள நிலையில், இதற்கான காரணம் தவ்ஹீத் ஜமாத் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவளிப்பதுதான் என்றும் குறிப்பிட்டு வருகின்றன.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் ஜனாதிபதி தேர்தலில் தமது ஆதரவை யாருக்கு வழங்குகின்றது என்பது தொடர்பில் இதுவரை எவ்விதமான உத்தியோகபூர்வ கருத்துக்களையும் வெளியிடாத நிலையில் ஜமாத் மைத்திரிபாலவை ஆதரிப்பதாக செய்தி பரப்புவது மஹிந்தவுக்கான ஆதரவை பெரும்பான்மை மக்களிடம் அதிகரித்துக் கொள்ளும் ஓர் அரசியல் தந்திரமாகும்.

எதிர்வரும் ஜனவரி 08ம் தேதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலைப் பொருத்த வரையில் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை யாரும் பாடம் நடத்தி தெளிவு படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதனை மக்கள் என்றைக்கோ முடிவெடுத்துவிட்டார்கள்.

தற்போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் இரு வேட்பாளர்களிலும் யார் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்து, சுதந்திரமான வாழ்வுக்கு வழி செய்வார்கள் என்று மக்கள் நம்புகின்றார்களோ அவர்களுக்கே கண்டிப்பாக முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்கும் நிலையுள்ளது.

கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இலங்கை முஸ்லிம்கள் மீது பலவகையான இனவாத செயல்பாடுகளும் கட்டவிழ்த்து விடப்பட்டன.

பொது பல சேனா, இராவணா பலய, சிஹல ராவய என பல இனவாதக் குழுக்களும் முஸ்லிம்களுக்கு எதிரான தமது செயல்பாடுகளை முன்நின்று செயல்படுத்தினார்கள்.

நாடு முழுவதும் இது வரைக்கும் சுமார் 25 பள்ளிவாயல்களுக்கு மேல் இனவாத தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

04 பள்ளிகள் தொழுவதற்கு தடை விதித்து இழுத்து மூடப்பட்டுவிட்டன.

ஹிஜாப் பிரச்சினை.

மாடு அறுப்பதில் பிரச்சினை.

ஹழால் பிரச்சினை.

வியாபாரத்திற்கான தடைகள் என்று தொடர்ந்த முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரம் அளுத்கம, பேருவலைப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய இன அழிப்புக்கு வழி செய்தது.

சுமார் 1000ம் கோடிகளுக்கு மேலான சொத்துக்களை அழித்து, இரண்டு சகோதரர்களை கொலை செய்து, பல வியாபார நிலையங்களை சூரையாடி முஸ்லிம் சமுதாயத்தின் இருப்பில் கேள்வியை உண்டாக்கிய பல சம்பவங்கள் நடந்தும், இது வரை இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த அரசின் ஆட்சி நடைபெரும் போது இவ்வளவு அநியாயங்கள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றும், இவற்றுக்குக் காரணமான பொது பல சேனா இது வரை தடை செய்யப்படவில்லை. அதன் செயலாளர் ஞானசார தேரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவ்வளவு அநியாயங்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின் போதுதான் நடைபெற்றன. ஆனால் இவற்றுக்கு இது வரை இந்த அரசு எவ்வித தீர்வையும் வழங்கவில்லை.

இதே நேரம் இந்த அநியாயங்கள் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெரும் போது தற்போதைய பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேன அவர்களும் அரசாங்கத்துடன் தான் இருந்தார். ஆளும் கட்சியின் பொதுச் செயலாளராகவும், அமைச்சரவை அந்தஸ்த்துப் பெற்ற சுகாதார அமைச்சராகவும் இருந்த மைத்திரி அவர்கள் அப்போது இந்த இனவாத தாக்குதல்களுக்கு எதிராக எவ்விதமான எதிர் கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதையும் நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

அதே போல் முஸ்லிம்களுக்கு எதிரான பாரிய இனவாத கருத்துக்களை பரப்பிய பொது பல சேனா மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் அதே வேலை மற்றுமொரு இனவாத கட்சியான ஹெல உறுமய தனது ஆதரவை மைத்திரிபால சிரிசேனவுக்கு வழங்கியுள்ளது.

எப்படிப் பார்த்தாலும் இரண்டு பக்கமும் இனவாதம் பேசுவோர் இருக்கின்றார்கள் என்பது தெளிவான விஷயமாகும்.

அரசாங்கத்தின் தேர்தல் விஞ்ஞாபனம் (மஹிந்த சிந்தனை – 03) இன்னும் வெளியிடப்படாத நிலையில் பொது வேட்பாளர் வெளியிட்டுள்ள தனது அரசியல் விஞ்ஞாபனத்தில் இனவாத செயல்பாடுகள் தொடர்பில் அவர் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் பற்றி எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இதே நேரம் இதற்கு முன்பு நடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தரப்பால் வெளியிடப்பட்ட அரசியல் விஞ்ஞாபனங்கள் (மஹிந்த சிந்தனை 01 மற்றும் 02) மூலம் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பதுடன், அரசாங்கம் சார்பில் நியமித்த LLRC கூட முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பது நாடறிந்த உண்மையாகும்.

முஸ்லிம்களின் உரிமைக்கு உத்தரவாதம் வழங்குவோர்களுக்கே முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் முஸ்லிம்கள் தமது உரிமைகளை போராடிப் பெற வேண்டிய நிலையே இருப்பதினால், முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாத்து, தமது மத கடமைகளையும், வியாபாரங்களையும் சுதந்திரமாக செயல்படுத்துவதற்கு யார் உத்தரவாதம் வழங்குகின்றார்களோ அவர்களுக்கே இம்முறை கண்டிப்பாக முஸ்லிம்கள் வாக்களிப்பார்கள் என்பது தெளிவானதாகும்.

ஆகவே கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட கசப்பான நிகழ்வுகளை மறக்காமல், எதிர்காலத்திலும் நமது உரிமைகளை பரிக்காமல் பாதுகாக்கும் வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம்கள் ஆதரிப்பார்கள்.

அது மஹிந்த ராஜபக்ஷவா? அல்லது மைத்திரிபால சிரிசேனவா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.

No comments

Powered by Blogger.