மைத்திரிபாலவுடன் மிகவிரைவில், பேச்சுவார்த்தை நடத்துவோம் - அமீர் அலி
-பேட்டி கண்டவர் ஏ. எச்.சித்தீக் காரியப்பர்-
நாங்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள தீர்மானமானது அனைத்து தரப்புகளுக்கும் அதிர்ச்சி அளிக்க கூடியதாகவும் இருக்கலாம். எங்கள் சமூகத்தினது கௌரவம் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு துன்பங்கள் ஏற்படுத்தப்படும் போது அரசாங்கத்துக்கு பூச்சொரிந்து ஆராத்தி எடுக்கும் தேவை எமக்கு இல்லை எல்லை என அமைசச்ர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில் இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டடியல் எம்.பியும் கட்சியின் தவிசாளருமான அமீர் அலி தெரிவித்தார். அவர் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வி வருமாறு
கேள்வி : – தேசியப்பட்டியல் எம். பியாக உங்களை நியமிப்பது என்ற விடயம் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னரே வாக்குறுதியளிக்கப்பட்ட ஒன்றாகும். ஜனாதிபதி தேர்தல் நடைபெறக் கூடிய இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அதனை அரசு வழங்கியிருக்கிறது. இதனை ஒரு தேர்தல் தந்திரம் என்று அல்லது அரசின் வளைந்து பிடிக்கும் நடவடிக்கை என கூற முடியாதா?
பதில் : – இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற தேர்தலில் எமது கட்சிக்கு தேசியப் பட்டியல் எம்..பி மற்றும் பிரதியமைச்சர் பொறுப்பினையும் தருவதாக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அது வழங்கப்படவில்லை. பின்னர் மாகாண சபைத் தேர்தல் காலத்தில் எனக்கு முதலமைச்சர் பதவியைத் தருவதாக அரசாங்கம் கூறியிருந்தது. அதிலும் அரசாங்கம் எம்மை ஏமாற்றி, இழுத்தடித்தது. இவையனைத்திலும் நாங்கள் நம்பிக்கை இழந்திருந்த நிலையே அவர்கள் இன்று தேசியப் பட்டியல் எம்.பி பதவிளை மட்டும் தந்துள்ளனர். இருப்பினும் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவதில் நான் தயக்கம் காட்டியதுடன் வெட்கமும் அடைந்தேன். நியமன எம். பிக்கான ஆவணத்தில் கையொப்பமிடுமாறு என்னை அரச தரப்பினர் நிர்ப்பந்தித்தனர். அதனை நிராகரித்த நான் எனது கல்குடா தொகுதி மக்களின் ஆணையைப் பெற வேண்டும் என்று கூறினேன். அதன்படி அந்த மக்களைச் சந்தித்து அவர்களது விருப்பத்தின் பேரிலேயே இந்தப் பதவியை பொறுப்பேற்றேன். இதனை நான் மனம் விரும்பி பெற்றுக் கொள்ளவில்லை. என்மீது திணிக்கப்பட்ட ஒரு விடயமாகவே பார்க்கிறேன்.
கேள்வி: – அப்படி என்றால் நீங்கள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவைச் சந்தித்து எம்.பி பதவி வழங்குமாறு கோரவில்லையா?
பதில் : – அவரின் அழைப்பில்தான் நான் சந்தித்தேன். ஆனால், எம்.பி பதவியை நான் கோரவில்லை. அவரை நான் சந்தித்த போது பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினேன். அப்போது கடந்த காலங்களில் அரசு தரப்பினால் விடப்பட்ட பல தவறுகளை அவர் ஏற்றுக் கொண்டார். அதற்காக அவரை நான் பாராட்டினேன். எனது கல்குடா தொகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியை இதுவரை காலமும் நிறைவேற்றாமல் அரசாங்கம் துரோகமிழைத்தமை தொடர்பிலும் அவருக்கு எடுத்துக் கூறினேன்.
கேள்வி பதில் : – மீண்டும் உங்களை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சந்தித்த போது எம்.பி பதவி வழங்குவதாக உறுதி வழங்கினாரா?
பதில் : – ஆம், என்னை அழைத்து பேசிய போது என்னுடன் எமது கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன், மற்றும் அமைச்சர்களான சுசில் பிரேம் ஜயந்த், பௌஸி ஆகியோரும் இருந்தனர். அதன் போதுதான் எனக்கு தேசியப் பட்டியல் எம்.பி தருவதாக கூறப்பட்டது.
கேள்வி : – உங்களுக்கு பிரதியமைச்சர் பதவி தர மறுக்கப்பட்டுள்ளதே?
பதில்: – பிரதியமைச்சர் பதவியை நான் பெற்றுக் கொள்ள வேண்டு என்பது எனதும் எனது கல்குடா தொகுதி மக்களினதும் எதிர்பார்ப்பாக இருந்ததுதான். ஆனால் இன்றைய கால கட்டத்தில் அதனை பெற்றுக் கொள்வதென்பது ஓர் அருவருப்பான விடயமாகவே தோன்றுகிறது.
கேள்வி: – ஆனால் பெரும்பாலான மக்கள் கூறுகிறார்கள்... ஜனாதிபதித் தேர்தலை கருத்தில் கொண்டு அரசாங்கம் தந்திரத்தோடு தந்த எம். பி பதவியைத்தான் நீங்கள் ஏற்றுள்ளீர்கள் என்று?
பதில்: – மக்கள் கருத்துக் கூறுகிறார்கள் என்றால் அவைகள் அனைத்தும் சரியாக இருக்கும் என்பதாக கருத முடியாதே? அதே போன்று நாங்கள் கருத்துக் கூறுகிறோம் என்பதற்காக மக்கள் அவை அனைத்தையும் ஏற்றுக் கொள்வோராகவும் இல்லைதானே! இந்தப் பதவியை நான் எடுத்துக் கொண்ட நேர, காலம்தான் பிழையானது. அதனால் தான் இவ்வாறான மன நிலையில் மக்கள் உள்ளனர். இருப்பினும் எனக்கு வாக்களித்த மக்கள் அதனைப் பிழையாக பார்ப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் எதிர்த்திருந்தால் இந்தப் பதவியை நான் ஏற்றிருக்கவே மாட்டேன்.
கேள்வி: – வெறும் எம்.பி பதவியை தந்துள்ள அரசாங்கம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் உங்களையும் உங்களது கட்சியையும் பிரசாரப் பொருட்களாகப் பயன்படுத்தலாம் அல்லவா?
பதில்: – அவர்கள் எதனை நினைத்து தந்தார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அப்படி நினைத்தும் தந்திருக்கலாம்தான். கடந்த காலங்களில் அவர்களுக்காக நான் செயற்பட்ட விதத்தை அவர்கள் கருத்தில் கொண்டிருக்கவும் கூடும். எனது கட்சித் தலைமையை மீறி நான் செயற்படத் தயாராக இல்லை. கட்சியின் தீர்மானம் எதுவாக இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே நான் செல்வேன்.
கேள்வி : – ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை ஆதரிப்பதற்காக உங்கள் கட்சியால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் தேசியப் பட்டியல் எம். பி விடயமும் உள்ளடக்கப்பட்டதா?
பதில்: – இல்லவே .. இல்லை. இது ஏற்கனவே வழங்கப்பட்ட வாக்குறுதியே எம்.பி பதவி. ஆனால், நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் வலுக் கட்டாயமாக எங்கள் மீது அது இன்று திணிக்கப்பட்டுள்ளது.
கேள்வி: – உங்களது 20 அம்சக் கோரிக்கையில் தனி நபர்களதும் தங்களது கட்சி நலன் தொடர்பானதுமான எத்தனை விடயங்கள. அடங்குகின்றன?
பதில்: – ஒன்றுமே இல்லை... அனைத்தும் முஸ்லிம் சமூகம் சார்ந்தவைகளே. வடக்கு, கிழக்கு அதற்கு வெளியே வாழக் கூடிய எமது மக்களின் நலன்களே அவற்றில் முற்றாக உள்ளடக்கப்பட்டுள்ளன. உதாரணமாக கொலன்னாவையிலும் கண்டியிலும் ஆண்கள் முஸ்லிம் பாடசாலைகளை உருவாக்குதல், வடக்கு, கிழக்கு முஸ்லிம்களின் அடிப்படை, அத்தியாவசிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணல், மௌலவிகளாகப் பட்டம் பெற்றவர்களில் ஆசிரியர்களாக நியமிக்கப்படாத ஏனையோருக்கும் நியமனங்களை வழங்குதல் போன்ற தேசிய ரீதியாக எமது மக்களின் பிரச்சிகளுக்கான தீர்வுகளை வழங்குமாறே எமது கோரிக்கைகள் குறிப்பிடுகின்றன.
கேள்வி : – இதே கோரிக்கைகளையே நீங்கள் எதிரணி பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிடமும் முன்வைத்துள்ளீர்கள். ஆனால், இந்த விடயத்தை ஏன் இரகசியமாக பேணுகிறீர்கள்?
பதில்: – ஜனாதிபதித் தேர்தலில் அனைவருடனும் பேச வேண்டும் என்ற கோரிக்கையை நான் எனது கட்சியிடம் முன்வைத்தேன். இரு பிரதான கட்சிகளுடனும் பேசி எந்தக் கட்சியின் ஊடாக நாங்கள் எதிர்பார்த்த எமது சமூகம் சார்ந்த விடயங்கைளை அதிகம் சாதிக்க முடியுமோ அதனைக் கருத்தில் கொண்டே நாங்கள் தீர்மானத்தை எடுக்க வேண்டுமென்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸான எனது கட்சியின் அரசியல் உயர்பீடத்தில் முன்வைத்தேன். பலரும் இதனை எதிர்த்தாலும் இந்த விடயத்தில் இப்போது பொதுவான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
கேள்வி : – நீங்கள் எதிரணி பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை நடத்துவீர்களா?
பதில் : – ஆம், மிக விரைவில் பேசுவோம். அத்துடன் நாங்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளவுள்ள தீர்மானமானது அனைத்து தரப்புகளுக்கும் அதிர்ச்சி அளிக்க கூடியதாகவும் இருக்கலாம். எங்கள் சமூகத்தினது கௌரவம் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு துன்பங்கள் ஏற்படுத்தப்படும் போது அரசாங்கத்துக்கு பூச்சொரிந்து ஆராத்தி எடுக்கும் தேவை எமக்கு இல்லை. இதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். எமது கட்சியின் தலைவர் ரிஷாத் பதியுதீன் சமூகப் பற்றுமிக்கவர், துணிச்சலானவர். சமூகத்தை அடகு வைப்பதற்கு யாரையும் அனுமதிக்காதவர். இன்றைய ஜனாதிபதியை கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை கட்சி என்ற வகையில் முதலில் ஆதரித்தவர்கள் நாங்களே. ஆனால் எமது சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநியாயங்கள் எம்மை வேதனையடையவும் மனதை வருடவும் செய்துள்ளன என்பதனையும் இங்கு நான் கூற வேண்டும்.
கேள்வி : – தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையே உங்கள் கட்சி ஆதரிக்கும் என்ற நம்பிக்கைதான் கடந்த ஓரிரு வாரங்களாக மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது. ஆனால், உங்கள் தீர்மானத்தை வெளியிடுவதில் தற்போது திடீரென ஏற்பட்டுள்ள தாமதம் மக்களின் முன்னைய நம்பிக்கையில் தளர்வை ஏற்படுத்தி மகிழ்ச்சியான புதியதொரு நம்பிக்கையையும் தெம்பையும் கொடுத்துள்ளதாக உணர்கிறேன். அப்படித்தானே?
பதில் : – ( நீண்ட மௌனம்) மக்கள் விருப்பத்துக்கு நாங்கள் சலூட் அடிக்கிறோம். கடந்த காலங்களில் அரசியல் தலைவர்கள்தான் தீர்மானங்களை எடுத்து மக்களிடம் கூறுவார்கள். அதனை ஏற்றுக் கொண்டே மக்களும் செயற்பட்டார்கள். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது. மக்களின் தீர்மானங்களுக்கு தலைவர்கள் அழைத்துச் செல்லப்படும் நிலை உருவாகி விட்டது அல்லவா? எனவே, மக்களது தீர்மானத்துக்கு எங்களது கட்சி சலூட் அடித்து அவர்கள் பிடிக்கும் பஸ்ஸில் நாங்களும் ஏறலாம் என்றே நான் நினைக்கிறேன். ஒரு விடயத்தை நாங்கள் தெளிவாகக் சொல்கிறோம். மஹிந்த ராஜபக்ஷவையுடனேயே இவ்வளவு காலமும் இருக்கிறோம்தான். அதற்காக எமது சமூகத்தின் பிரச்சினைகளுக்கு உடன்பாடில்லை என்றால் அவரை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் நாங்கள் பின்னடிக்க வேண்டியே உள்ளது. நாங்கள் அரசாங்கத்திடம் கையளித்த கோரிக்கைகள் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்டுகின்றன. சரியான சமிக்ஞையை அரசு இன்னும் தரவில்லை.
கேள்வி – உங்களால் முன்வைக்கப்பட்ட 20 அம்சக் கோரிக்கைளில் தேர்தலுக்கு மன்னர் நிறைவேற்றுவதாக இணக்க்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டுள்ளதா?
பதில் – அனைத்தும் இழுத்தடிக்கப்படுகின்றன.
Post a Comment