Header Ads



'குழந்தை நீரில் மூழ்கி வபாத்தானமை' நிந்தவூர் பிரதேச வைத்தியசாலையின் விளக்கம்


(Aqil ahmad sharifuddeen)

இன்று (20) நிந்தவூரில் இடம்பெற்ற ஒரு குழந்தையின் நீரில் மூழ்கிய அகால மரணத்தையும் நிந்தவூர் பிரதேச வைத்தியசாலையையும் தொடர்புபடுத்தி ஊடகங்களில் பலவாறான செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன.

நிந்தவூர் வைத்தியசாலையின் நிறுவனத் தலைவர் என்கின்ற வகையில் இந்த விடயம் தொடர்பாக மக்களுக்குத் தெளிவு படுத்தவேண்டிய கடமை எனக்கிருக்கின்றமையால் இதனை எழுதுகின்றேன்.

குறித்த குழந்தை இன்று காலை சுமார் 11.30 மணியளவில் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்படிருக்கின்றது. குழந்தை அதன் வீட்டுக்குப் பக்கத்தில் தேங்கியிருந்த வெள்ள நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டதாகவும், அது மூர்ச்சையடைந்துவிட்டதாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது. அவ்வேளை இரு வைத்தியர்கள் குழந்தையை பொறுப்பேற்று பரிசோதித்திருக்கின்றார்கள்.

அவர்களது பரிசோதனையின் பின்னர் குழந்தை மரணித்த நிலையிலேயே வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டது எனக் கண்டறியப்பட்டது. இந்தத் தகவல் காலை 11.45 மணிக்கு எனக்கு எத்திவைக்கப்பட்டது. அவ்வமயம் வைத்தயிசாலை அபிவிருத்திக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருந்தேன்.

தகவல் தந்த வைத்தியரிடம் குழந்தையின் நிலைமையை கேட்டறிந்தேன். குழந்தைக்கு சுவாசமோ, நாடித்துடிப்போ இருக்கவில்லை, குழந்தையின் இருதயம் நின்றுபோயிருந்தது, சிரசுநாடி தொழிற்படவில்லை, குழந்தையின் கண்மணி விரிந்து நிலைத்திருந்தது என்று வைத்தியரினால் எனக்குச் சொல்லப்பட்டது. குழந்தையின் மரணம் உறுதிசெய்யப்பட்டதை உறவினர்களுக்குத் தெரியப்படுத்துமாறு நான் அந்த வைத்தியருக்கு அறிவுறுத்தினேன். அதற்கு அமைவாக மரணச் செய்தியை அறிந்துகொண்ட உறவினர்கள் தாமதிக்காமல் குழந்தையின் உடலை தூக்கி எடுத்துக்கொண்டு சென்றிருக்கின்றார்கள். குழந்தையை முறையாக வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கோ, மேற்கொண்டு சட்ட மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வதையோ அவர்கள் விரும்பவில்லை.

நண்பகல் 12.11 மணிக்கு கடமையில் இருந்த வைத்தியரினால் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த எனக்கு மீண்டும் அழைப்பு ஏற்படுத்தப்பட்டது. எடுத்துச் சென்ற குழந்தையின் உடலை மீண்டும் வைத்தியசாலைக்குக் கொண்டு வந்திருப்பதாகவும், குழந்தைக்கு உயிர் இருப்பதாகவும் உறவினர்களும் அயலவரும் கூச்சல் போட்டு குழப்பம் விழைவிப்பதாகவும் எனக்குச் சொல்லப்பட்டது. உடனே கூட்டத்தை இடைநடுவில் கைவிட்டுவிட்டு நான் வைத்தியசாலைக்குச் சென்றேன்.

வைத்தியசாலையில் குழந்தையின் உடலைப் பரிசோதித்தேன். குழந்தை மரணைமாகி சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு. அங்கிருந்த குழந்தையின் தாயையும், தந்தையையும் விசாரித்தேன். வீட்டில் நடந்த விடயங்களை கேட்டறிந்தேன்.

தனது முதுகு வலிக்கு மாத்திரை எடுத்துக் கொண்ட தாய் தனது குழந்தையை தனது வீட்டிலிருந்த மூதாட்டியிடம் கவனித்துக் கொள்ளுமாறு கூறிவிட்டு உறங்கியிருக்கின்றார். மூதாட்டியோ தனது வீட்டுவேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்திருக்கின்றார். குழந்தையின் ஞாபகம் வரவே குழந்தையைக் காணாது தேடியிருக்கின்றார்கள். வீட்டுக்கு அருகில் தேங்கியிருந்த வெள்ள நீரில் மூழ்கிய குழந்தையை மூர்ச்சையடைந்த நிலையில் கண்டெடுத்திருக்கின்றார்கள். வைத்தியசாலைக்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள். பிள்ளையின் வீட்டுக்கும் வைத்தியசாலைக்கும் இடையில் குறைந்தபட்ஷம் 15 நிமிட பயணத் தூரம் இருக்கும்.

நீரினுள் மூழ்கிய ஒரு ஒன்றரை வயதுக் குழந்தையினால் கூக்குரல் இட்டு உதவிக்கு அழைக்க முடியுமா என்பதனை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். குழந்தை எவ்வளவு நேரம் நீரில் மூழ்கியிருந்தது என்பது பற்றி எவருக்கும் தெரியவில்லை என்பதுவும் இங்கு குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாகும்.

முதல் தடவை வைத்தியசாலையிலிருந்து குழந்தையின் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றவர்கள் அதன் இறுதிக் கடமைகளுக்காகத் தயாரானபோது குழந்தையின் பிரிவை ஏற்றுக் கொள்ள முடியாத தாய் அதற்கு செயற்கைச் சுவாசம் கொடுப்பதற்கு முயற்சித்திருக்கின்றார். அவர் தனது வாயினால் குழந்தையின் வாயில் ஊதியிருக்கின்றார். அப்போது குழந்தையின் மூக்கிலிருந்து நீரும், நுரையும் வெளிவந்திருக்கின்றது. குழந்தையின் நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதியில் அசைவும் ஏற்பட்டிருக்கின்றது.

தாய் குழந்தையின் வாயினுள் ஊதியதும் குழந்தையின் சுவாசப்பை மற்றும் இரைப்பை ஆகியவற்றுக்குள் நிறைந்திருந்த வெள்ள நீர் குழந்தையின் வாயினூடாக வெளியே வந்திருக்கின்றது. மேலும் தாயினால் ஊதப்பட்ட காற்றின் காரணமாக குழந்தையின் வயிற்றிலும், நெஞ்சிலும் அசைவு ஏற்பட்டிருக்கின்றது. தாய் ஊதிய உயர் அழுத்தக் காற்று குழந்தையின் வாயினூடாக மீண்டும் வெளியே வந்திருக்கின்றது. இதனை அறியாத தாயும் உறவினர்களும் குழந்தையின் உடலில் உயிர் இருப்பதாகவும் குழந்தை சுவாசிப்பதாகவும் எண்ணிக் கொண்டு அதனை வைத்தியசாலைக்குக் கொண்டுவந்திருக்கின்றார்கள்.

குழந்தையின் வீட்டில் நடந்த இச்சம்பவங்கள் பற்றிய விபரம் குழந்தையின் தாயிடமும் தந்தையிடமும் இருந்து நான் பெற்றுக் கொண்டவையாகும்.

குழந்தையின் உடலை இரண்டாம் முறை வைத்தியசாலைக்குக் கொண்டுவரும்போது அவசர சிகிச்சை அறையில் வேறோரு வைத்தியர் கடமையில் இருந்திருக்கின்றார். முன்னர் நடந்த விடயங்களை இந்த வைத்தியர் அறிந்திருக்கவில்லை. அவரிடம் குழந்தையின் உடலில் உயிர் இருப்பதாக அதனைக் கொண்டுவந்தவர்கள் சொன்னதனால் அவர் உடனடியாகவே நீரில் மூழ்கி மூர்ச்சையான குழந்தைக்கான சிகிச்சையை ஆரம்பித்திருக்கின்றார். அம்புலன்ஸ்க்கும் தயார் நிலைக்கு வருமாறு கட்டளை பிறப்பித்திருக்கின்றார். குழந்தையின் உடலில் உயிர் இருப்பதாக தாம் எண்ணியதை அந்த வைத்தியரின் செயற்பாடுகள் அவர்களுக்கு உறுதிப்படுத்துவதாக உறவினர்களாகிய அவர்கள் கருதுகின்றார்கள். ஆனால் அந்த வைத்தியரும் தனது பரிசோதனையின் பின்னர் குழந்தை மரணித்த நிலையிலேயே கொண்டுவரப்பட்டதை உறுதிப்படுத்துகின்றார்.

இங்கேதான் பிரச்சினை எழுகின்றது. முன்னர் குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தைக்கு உயிர் இருக்கும்போதே அதன் உயிர் பிரிந்துவிட்டதாகச் சொன்னார்கள் என்றும், வீட்டுக்குக் கொண்டு சென்றபோது அதற்கு உயிர் இருந்தது என்றும், இரண்டாம் முறை கொண்டு வந்தபோதே உயிர் பிரிந்தது என்றும் பெற்றோரும் உறவினர்களும் அயலவர்களும் நம்புகின்றார்கள். ஆனால் முதல் தடவை கொண்டு வரும்போதே குழந்தையின் உடலில் உயிர் இருக்கவில்லை என்று வைத்தியர்கள் கூறுகின்றார்கள். இதுதான் பிரச்சினை.

குழந்தை எவ்வளவு நேரம் நீரில் மூழ்கியிருந்தது என்பதுவும், குழந்தையின் உடலில் இருந்து உயிர் நீருக்குள் மூழ்கியிருந்தபோதா, அல்லது முதல் தடவை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதா, அல்லது இரண்டாவது தடவை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதா பிரிந்தது எப்போது என்பதும், சர்ச்சைக்குரிய பேசு பொருளாக மாறியிருக்கின்றது.

இந்த விடயத்தில் உடல், உயிர் அவை இரண்டினதும் ஒன்றித்த இருப்பு, பிரிவு போன்றவற்றில் நிபுணத்துவம் உள்ளவர்களின் முடிவு தேவைப்படுகின்றது. அது யார்?

வைத்தியர்களா?

பெற்றார், உறவினர், அயலவர்களா?

ஊடகவியலாளர்களா?

அல்லது வேறு யாருமா?

2 comments:

  1. Allah Only Know About This
    But One Thing I Have to Say About Nintavur Hospital Some Nurse and Doctors Have In Hospital Very Careless and Lazy Because I Know In My Experience Same Like Situation That Time I Feel Very Bad But Still There Continuing Please You Have to Thing The Patient are Your Relation. Please Stop This and Give Good Service For The People

    ReplyDelete
  2. நிந்தவூர் வைத்தியசாலையின் வைத்திய சேவைகள் தொடர்பாக மக்கள் நீண்ட காலமாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கின்றனர். இங்கே கடமையாற்றும் வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், ஏனைய ஊழியர்கள் தமது கடமையில் அசமந்த போக்கினை கடைப்பிடிக்கின்றமையே இதற்கு காரணம். இது இந்த வைத்தியசாலையின் நற்பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கு இதுவரையில் எத்தகைய தீர்வுகளும் காணப்படவில்லை...

    இந் நிலையில் நேற்று இடம்பெற்ற இந்த சம்பவம் இதற்கு மேலும் வலுச் சேர்த்துள்ளது. இந்த சம்பவத்தில் வைத்தியர்கள் தவிறிழைக்கா விட்டாலும் (இறைவன் மட்டும் நன்கறிந்தவன்) மக்களின் பார்வையில் இந்த வைத்தியசாலை மீதுள்ள தவறான அபிப்பிராயம் காரணமாக இவரகள் தவறிழைத்து விட்டதாகவே கருதப்படுவர்.

    எனவே எதிர்கலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் பொதுமக்களுக்கும், வைத்தியர்களுக்கும் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் உரிய தீர்வுகள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட வேண்டும்..

    நிந்தவூர் வைத்தியசாலையின் மூலம் சிறந்த வைத்திய சேவையை எதிர்பார்க்கின்றோம் << ZORO>>

    ReplyDelete

Powered by Blogger.