Header Ads



'முஸ்லிம் கட்சிகள்' சரியான நேரத்தில் பிழையான முடிவு

-கே.கான்-

ஜனாதிபதித் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் கட்சித் தாவல்களும் பேரம் பேசல்களும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டு போகிறது. இம்முறை புதிய ஜனாதிபதியை தீர்மானிக்கின்ற சக்தியாக சிறுபான்மையினர் காணப்படுகின்றனர். இதில் சிறுபான்மைக் கட்சிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் பிரதான பங்குதாரர்களாக உள்ளனர். அதனால்தான் இரு பிரதான வேட்பாளர்களும் இவ்விரு கட்சிகளுக்கும் தொடர்ச்சியான அழைப்பு விடுக்கின்றனர்.

இவ்விருவரில் யாரை ஆதரிப்பது என்பதில் இரு கட்சிகளும் இதுவரையில் சரியான தீர்வெடுக்காத ஒரு நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாற்றத்திற்கான அழைப்பினை பகிரங்கமாக விடுக்கின்ற அதேவேளை, தமிழ் மக்கள் பட்ட இன்னல்களுக்கு தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தினை தமிழ் மக்களை சந்தித்து காய்நகர்த்தி வருகின்றமை ஊடகங்கள் வாயிலாக அறியக்கிடைக்கின்றது.

இச்சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கூடுவதும் கலைவதும் வாக்குவாதப்படுவதும் இறுதியில் முடிவுகள் எட்டப்படாத நிலையில் கலைந்து செல்வதுமான செய்திகள் அண்மைக்காலமாக பத்திரிகைகளை அலங்கரிக்கின்ற அதேவேளை, கட்சித் தொண்டர்களையும் அபிமானிகளையும் ஆத்திரமூட்டுகின்ற விடயமாகவும் மாறியுள்ளது. இது முஸ்லிம் காங்கிரஸின் முதுகெலும்பில்லாத தன்மையைக் காட்டுகின்றது.

தேர்தல் வியாபாரத்தில் டொலர்கள் பரிமாறப்படுவதும் பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைபோவதும் ஆசியாவின் ஆச்சரியமான நாட்டில் புதிய விடயமல்ல. ஆனால் இதில் வரலாற்றில் இடம்பிடித்த கட்சியாக மு. காங்கிரஸ் சாதனை படைத்துள்ளது. அவ்வாறு கட்சித் தாவியவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக முதலைக் கண்ணீருடன் தனது பிரதேச அபிவிருத்தி பற்றிப் பேசுவது இன்று நேற்றுள்ள கதையல்ல. மறைந்த தலைவர் அஷ்ரப் காலத்திலிருந்து வருகின்ற ஒரு மரபாகும்.

வாழையடி வாழையாக நடந்துவரும் இந் நிகழ்வுதான் இன்று கட்சிக்குள் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. இதனை நன்கு உணர்ந்து கொண்ட தலைமைப்பீடம் கட்சித் தாவலை தடைசெய்யும் முகமாக உலமாக்கள் முன்னிலையில் பாராளுமன்ற, மாகாண, நகர, பிரதேச சபை உறுப்பினர்களிடம் சத்தியப்பிரமாணம் எடுத்துக் கொண்டது மாத்திரமல்லால் யாரும் யாரையும் தனிப்பட்டமுறையில் சந்திப்பதும் பேட்டிகொடுப்பதும் தவிர்க்கப்பட வேண்டும் என கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இதனை மீறியும் கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியை கருவறுக்கின்ற நிலை இல்லாமல் இல்லை. இவர்களுக்கான பதிலை வாக்காளப் பெருமக்கள் சரியான நேரத்தில் சரியான முடிவை வழங்குவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிம் காங்கிரஸின் நிலை இவ்வாறு இருக்க ஆளும் கட்சியில் முடிசூடா மன்னர்களாக வலம் வரும் ஏனைய முஸ்லிம் தலைமைகள் அரசியல் சாணக்கியம் பற்றிப் பேசுகின்றனர். அற்ப சுகபோக வாழ்கைக்காக நான் முந்தி நீ முந்தி என போட்டி போட்டுக் கொண்டு முட்டிபோட்டு ஜனாதிபதி துதிபாடும் படலத்தில் ஊது குழலாக நகர்வலம் வருகின்றனர். இதுதான் இவர்களது சாணக்கியம். இவர்கள் பாராளுமன்றத் தேர்தல் மிக விரைவில் வரும் என்பதை மறந்துவிட்டார்கள் போல.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எப்பவும் போல தனது ஆதரவாளர்களை கூட்டி நடனமாடிவிட்டு ஜனாதிபதியிடம் சென்று கை கூப்புவது ஒன்றும் புதிய விடயமல்ல அதைத்தான் இம்முறையும் செய்திருக்கிறார்கள். தனக்கு நெருக்கமானவர்களை மட்டும் அழைத்து மஹிந்த துதி பாடிவிட்டு நாம் யாரை ஆதரிப்பது என வினவிவிட்டு மஹிந்தவுக்கு ஆதரவானவர்கள் கையை உயர்த்துங்கள் என தனது கையையும் உயர்த்திக் கொண்டார். அங்கிருந்தவர்கள் மன்னர் எவ்வழியே அவ்வழியே நாமும் என ஆமா சாமி போட்டனர்.

அதிலும் சுவாரஷ்யமான விடயம் சினிமாக்களில் வருவது போன்று ஒரு நாள் முதல்வர் அல்லது மந்திரி என்ற பாணியில் ஒரு குறுகிய கால பாராளுமன்ற உறுப்புரிமையை தனது கட்சியைச் சார்ந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அமீர் அலிக்கு பெற்றுக் கொடுத்திருப்பதுதான். கல்குடா மக்கள் விரும்பாத போதும் ஒரு சிறுபிள்ளைத்தனமான செயல் என்பதை அறிந்தும் அமீர் அலி  பதவியை ஏற்றிருப்பது தலைமை விசுவாசமா? அல்லது பொக்கட் சாணக்கியமா? என அவருக்கு வாக்களித்த மக்கள் வெறுப்புக்குள்ளாகியுள்ளனர்.

மறுபக்கத்தில் தேசிய (பிரதேச) காங்கிரஸின் தலைவர் எப்போதும் அமைதி காக்கும் அற்புத மனிதர். எத்தனை பள்ளிகள் உடைக்கப்பட்டாலும் முஸ்லிம்களின் உரிமை மறுக்கப்பட்டாலும் உயிர்கள் காவுகொள்ளப்பட்டாலும் சொத்துகள் சேதமாக்கப்பட்டாலும் தனது முடிவில் எந்த மாற்றமும் மேற்கொள்ளமாட்டார். காரணம் தானும் ஒரு குட்டி குடும்ப ஆதிக்கத்தின் குறுந்தலைவரல்லவா?  அதனால் மக்கள் நலனை விட குடும்ப நலனே மேலானது என நினைப்பதில் தவறில்லை.

அரசில் இருக்கும் ஏனைய முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப்  பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை என்பதால் நேரடியாக விடயத்துக்கு வருவோம். இவர்கள் அனைவரும் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்துபவர்கள் என்பதை மக்கள் நன்கு விளங்கி வைத்துள்ளார்கள் என்பதை மறந்துவிட்டார்கள். ஆனால் மக்கள் இவர்களை விட அரசியல் சாணக்கியம் மிக்கவர்களாக உள்ளார்கள். இவர்கள் கூட்டிக் கழித்துப் பார்ப்பதற்கு முன்னர் இவர்கள் அடையப்போகும் வரப்பிரசாதத்தை மக்கள் எடைபோட்டுவிட்டனர்.

அரசியல் தலைமைகளது இந்நடவடிக்கைகளைப் பார்க்கும் போது மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப்பின் வார்த்தை நினைவுக்கு வருகிறது. "சரியான நேரத்தில் எடுக்கின்ற பிழையான முடிவும் பிழையான நேரத்தில் எடுக்கின்ற சரியான முடிவும் கட்சியையும் சமூகத்தையும் பிழையாக வழிநடத்திவிடும்'. உண்மையில் இவ்வாசகத்துக்கு உரித்தான மு.கா. ஏனைய முஸ்லிம் தலைமைகளும் இதனைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.

இன்று அரசில் இருக்கக்கூடிய சிங்களத் தலைவர்கள் அரசாங்கத்தின் ஊழல், மோசடி, அடக்கு முறை, இன விரோதப்போக்கு என்பவற்றை சுட்டிக்காட்டி அரசாங்கத்திலிருந்து வெளியேறி பொது எதிரணியில் ஒன்றிணைந்து ஆட்சிமாற்றம் வேண்டி நிற்கின்றபோது, முஸ்லிம் கடும் போக்கு, பள்ளிகள் உடைப்பு, முஸ்லிம் பெண்கள் பர்தா விடயம், முஸ்லிம் வர்த்தகம் சூறையாடப்படல், முஸ்லிம் தனியார் சட்டம் கேள்விக்கு உட்படுதல், வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் கருத்தில் கொள்ளப்படாமை, முஸ்லிம்களின் இருப்புக்கு அச்சுறுத்தல், உயிர்ச் சேதம், ஏன் அல் குர்ஆனையே கேவலப்படுத்துகின்ற பொதுபலசேனா போன்ற அமைப்புகளை அரவணைத்து ஊக்கமும் சக்தியும் கொடுக்கின்ற அரசாங்கத்தை தொடர்ந்தும் ஆதரிக்கிறார்கள் என்றால் முஸ்லிம் தலைமைகளிடத்தில் எங்கோ கோளாறு இருக்கின்றது என்றுதானே அர்த்தம். 

இன்று இலங்கையிலுள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற இன, மத, பேதத்திற்கு அப்பால் அனைத்து மக்களும் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றவேளையில் முஸ்லிம் தலைமைகள் மட்டும் அரசியல் சாணக்கியம் பற்றிப் பேசுவது எந்தவகையில் நியாயமானது? இவர்கள் யாரை ஏமாற்றப் பார்க்கிறார்கள்? இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள்? ஆனால் இம்முறை மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

No comments

Powered by Blogger.