Header Ads



''எல்லாவற்றையும் நாம் உங்களுக்கு செய்து தந்துள்ளோம்'' மஹிந்த ராஜபக்ஷ

இந்த முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் எடுக்கும் முடிவு முழு நாட்டுக்குமான முடிவாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

முல்லைத்தீவில் 18-12-2014 இடம்பெற்ற ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

உங்கள் பகுதிக்கு வந்து உங்கள் மத்தியில் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். குறிப்பாக 30 வருட காலமாக நீங்கள் இருளில் மூழ்கியிருந்தீர்கள். இந்த 30 வருட காலத்தில் நீங்கள் பல்வேறு கஷ்ட, துன்பங்களை அனுபவித்தீர்கள். 

உங்களது வாழ்க்கை குறித்தும், உங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை குறித்தும் ஏன் உங்கள் எதிர்கால வாழ்க்கை குறித்தும் உங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இருக்கவில்லை. 

கடந்த ஐந்து வருடங்களில் அந்த நிலைமையை மாற்றி உங்களுக்கு அச்சமில்லாத அமைதியான சூழலை ஏற்பத்திக் கொடுத்துள்ளோம். 

நாங்கள் கடந்த கால இருண்ட யுகத்தை மாற்றி வளமான எதிர்காலத்தை நோக்கி பயணம் செல்ல வேண்டியுள்ளது. வட பகுதியில் 27 வருட காலமாக மாகாணசபை தேர்தல்கள் நடைபெறவில்லை. இந்நிலையில்  அத்தேர்தலை நாமே நடத்தினோம். 

இம் முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நீங்கள் எடுக்கும் முடிவு முழு நாட்டுக்குமான முடிவாகும். நீங்கள் எந்த அரசோடு இருக்கப்போகிறீர்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்த பகுதிகளில் நாம் அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறோம். 

இங்குள்ள வீதிகள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், மின்சாரத் திட்டங்களை பாருங்கள் எல்லாவற்றையும் நாம் உங்களுக்கு செய்துத் தந்துள்ளோம். 

மஹிந்தோய தொழில்நுட்ப ஆய்வு கூடங்களை அமைத்துத் தந்துள்ளோம். இந்த ஆய்வு கூடங்களின் மூலம் நீங்கள் உரிய பயனைப் பெற வேண்டும். தொழில் பயிற்சி நிலையங்களிலும் பயன்பெற வேண்டும். இந்த அரசின் கதவுகள் உங்களுக்காக எப்போதும் திறந்தே இருக்கும். 

அரச சேவையை பொதுச்சேவையாக, பகிரங்க சேவையாக மாற்றினோம். அரச சேவையாளர்களை 3 இலட்சமாக குறைப்பதற்குத்தான் கடந்த கால ஆட்சியாளர்கள் முயன்றார்கள். ஆனால் நாம் அரச சேவையை கௌரவமான சேவையாக மாற்றியமைத்தோம். அரச சேவை என்பது ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்கக்கூடியது. 

கடந்த நவம்பர் மாத வரவு செலவு திட்டத்தில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இளைஞர், யுவதிகளுக்கு புதிதாக தொழில் வாய்ப்புகளை வழங்கவுள்ளேன். அதற்காக தயாராகுமாறு இங்குள்ள இளைஞர், யுவதிகளை நான் கேட்டுக் கொள்கிறேன். பொய்ப்பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம். 

சகல இன மக்களும் கைகோர்த்து முன்னோக்கிச் செல்லக்கூடிய சமுதாயத்தை கட்டி எழுப்பவுள்ளோம். இன ரீதியாக மத ரீதியாக பிரிந்திருந்தால் நாம் ஒருபோதும் முன்னேற மாட்டோம். நாடும் முன்னேற முடியாது. இந்நாட்டை சிலர் பின்னோக்கி கொண்டு செல்ல முனைகிறார்கள். 

ஈரான், லிபியா, பலஸ்தீன், எகிப்து ஆகிய நாடுகளுக்கு நடந்த கதி என்ன? அதற்கு இடமளிக்க முடியாது. மீண்டும் பழைய யுகத்துக்குப்போக நாம் தயாரில்லை. பாகிஸ்தானில் கொடிய மதவாதிகள் சிறுவர், ஆசிரியர்கள், அதிபர் என 168 பேரை மிலேச்சத்தனமாக கொலை செய்துள்ளனர். இதனை கண்டித்த நான், பாகிஸ்தான் பிரதமருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டேன். மீண்டும் அத்தகைய ஒரு நிலைமைக்கு எமது நாட்டில் இடமளிக்க முடியாது.

பிறக்கப்போகும் பிள்ளைக்கும், பிறந்த பிள்ளைக்கும் நல்லதொரு இலங்கையை உருவாக்க வேண்டும். தலைவர்கள் எதுவும் சொல்லுவார்கள். ஆனால் அவர்களது பிள்ளைகள் இங்கில்லை. அவர்கள் கல்வி கற்பதும் வெளிநாடுகளில் தான். எனவே அவர்கள் ஏதேதோ சொல்லிவிட்டுப் போவார்கள். ஆனால் சகல இன மக்களது பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டிய உரிமை எனக்குண்டு. 

எனவே நல்லதொரு உலகத்தை கட்டியெழுப்புவதற்காக நாம் அனைவரும் கைகோர்த்து முன்னோக்கிச் செல்வோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.