Header Ads



உனக்குத்தெரியுமா..? அந்தப் பிஞ்சு நெஞ்சின் இதயத்துடிப்பை...??


பெஷாவரின் ஒரு அன்னையின் வலியான வரிகள் :
"நீ தானே துப்பாக்கி விசையை இழுத்தாய் ? 
உனக்குத்தெரியுமா ? ஆறு வாரமாக அவன் வயது இருக்கையில் அந்தப் பிஞ்சு நெஞ்சின் இதயத்துடிப்பை கேட்டேன் நான்...உலகின் தூய்மையான அற்புதம் அது 
திரையில் ஒரு சிறுதுளி...உயிர் உருவானது 
உயிர்...பிறகு அவனின் மூக்கு...கண்கள்..உருவம் பெற்ற அவனின் கரங்கள் 
தொப்புள் கோடியை எப்படி அவனின் சின்னச்சிறு கைகளால் பற்றுவது என்று அவன் கற்றுக்கொண்டான் 
அவனின் கதகதப்பான பாதுகாப்பு மிகுந்த இருண்ட உலகில் திரும்பி பார்த்தான்.,அவன் நகர்வதை நான் உணர்ந்தேன் 
ஒரு சிறிய உலுக்கல்...வாழ்க்கை மீண்டும் அப்படி இருப்பதே இல்லை. 
அவன் நகர்ந்த ஒவ்வொரு முறையும்...என் கருவறையில் உதைத்த பொழுதும்..தலைகீழாகக் குதித்த பொழுதும்,தும்முகையிலும்,விக்கிய பொழுதும் என் இதயம் ஒரு நொடித்துடிப்பதை நிறுத்திக்கொண்டது 
அவன் மெதுவாக வளர்ந்தான்,என் இரவுகள் ஆர்வத்தால் நிறைந்தன,தூக்கத்தில் திரும்பி அவனை காயப்படுத்தி விட்டால் என்னாகும் என பயந்தேன் 
நான் நாள்முழுக்கக் கவலை பூத்து இருந்தேன்...பெரிதாக ஒலி எழுப்பி அவனைப் பயப்பட வைத்து விட்டேனோ என்று 
நான் நடக்கையில்,என் கைகள் என் கர்ப்பப்பையை அனைத்துக்கொண்டன..வெளியுலகில் இருந்து அவனைப் பாதுகாக்க
அவன் என் தோலின் வழியாக வடிந்த சூரிய பிரகாசத்தை உணர்ந்தான்,என் குரல் அவனை அமைதிப்படுத்தியது,சில கணங்கள் நான் மவுனம் காத்தால் அவன் பயந்து கிளர்ச்சிகள் செய்தான் 
நான் பாடினால் அவன் மென்மையாய் பதில் தந்தான் 
அவனை வெளியே விடும் தருணம் வந்தது 
இந்த இரைச்சலான, கோபக்கார, ஒளிமிகுந்த உலகுக்குள்... 
அவன் தள்ளினான், கதறினான், நான் தள்ளினேன்... அவன் உங்கள் உலகில் நுழைந்தான் 
அவன் பயப்பட்டான் 
அவனின் இருண்ட, ஈரமான, பாதுகாப்பான உலகு போனது என்று... அவன் பயத்தில் கத்தினான் 
அவனை என் இதயத்துக்கு அருகில் வைத்துக்கொண்டேன் 
அமைதி கண்மணியே... அமைதி.. அழாதே 
அம்மா இங்கே இருக்கிறேன்... எப்பொழுதும் உனக்காக 
உன்னைக் காக்க, எல்லா சத்தங்களில் இருந்தும் உன்னைப் பாதுகாக்க, வெளிச்சங்களில் இருந்து 
பகல், இரவு....தாலாட்டி அவனைத் தூங்க வைத்தேன்...அவனை வாழ்நாள் முழுக்கப் பராமரித்தேன்.. 
என் கரங்கள், என் மார்பகங்கள், என் இதயத்துடிப்பு...நீ ...தெரியாத தொப்புள்கொடி 
.. அவன் திரும்பக் கற்றுக்கொண்டான்.. தவழ்ந்தான்... விழுந்தான்... ஐயோ கவனம், என் செல்வமே ! 
அவன் முதலடி எடுத்து வைத்தான். என்னை நோக்கி திரும்பினான், சிரித்தான் 
என் முத்து அவன்
2...3....4....7....12...17....கருப்பைகள் வலியால் துடிக்கின்றன.. 
நீ துப்பாக்கி விசையை அழுத்தினாய் 
பிஞ்சுகள் நிலத்தில் தடுமாறி விழுந்தார்கள் 
ரத்தம் கொப்பளித்தது 
என் கருப்பையில் ரத்தம் கசிகிறது ...17....18....20....23....84... 
கருப்பைகள் ரத்தம் வடிக்கின்றன.. கோபத்தில் கதறுகின்றன 
இஸ்லாம் அறியா கருப்பைகள் அவை... கீதையும் தெரியாது அவற்றுக்கு...எப்பொழுதும் ஹதீஸ் படிக்காதவை அவை...ஏன் இறைவன் தன்னுடைய பிள்ளையை ரத்தம் வடியவிட்டு வாடவிடுகிறான் என்று புரியாதவை அவை....ஆண்டவன் ஒன்றும் அம்மா இல்லையே ? 
எப்பொழுதும் அவன் கருத்தரிக்கவில்லை...தனக்குள் உயிரைத் தாங்கியது இல்லை..இத்தனை பணியைச் செய்தது இல்லை 
பிள்ளையை வளர்க்காமல், மழலையால் பருகப்படும் மார்பகப்பால் கசிகையில் அழுத்தும் பிஞ்சு இதழின் பரவசம் அவனுக்குத் தெரியாது 
நான் ஒரு சாதாரண அன்னை 
நான் மதம் இல்லை 
நான் தேசம் அல்ல 
ரத்தம் வடிகிற கருப்பைக் கொண்ட அம்மா நான் 
என் மகன் காலையில் பள்ளிக்குப் போனான் 
சுத்தமான சீருடை...குளிரின் கடுமையில் இருந்து காக்க கதகதப்பான கம்பளி உடை..மிளிரும் காலணிகள்...சூடான மதிய உணவு அடங்கிய டப்பாக்கள்... 
அவன் வர காத்திருந்தேன் ...பசியோடு...குறும்போடு...என் கரங்களில் மீண்டும் தஞ்சம் புக 
நீ துப்பாக்கி விசையை அழுத்தினாய் 
அது வெறும் ரத்தமல்ல 
என் கனவுகள் ஒரு துணியில் சுற்றப்பட்டுக் கிடக்கின்றன... 
அவை எனக்கு அலாத்-அல்-ஜனாஸா வார்த்தைகளைச் சொல்ல வைக்கின்றன... 
'பிஸ்மில்லா.. 
ஆனால், எனக்கு கேட்பது எல்லாம் வெறுமையான ரத்தம் வடியும் என் கருப்பையின் மவுனக்கதறல் மட்டுமே...
- ஒரு கனக்க வைக்கும் கதறல் இது

No comments

Powered by Blogger.