Header Ads



இஸ்லாம் ஏன் பயங்கரவாதத்தோடு முடிச்சு போடப்படுகிறது...?

(Quranmalar)

இஸ்லாம் என்றால் கீழ்படிதல் என்றும் அமைதி என்றும் பொருள் உண்டு. இறைவனுக்கு கீழ்படிவதோடு பூமியில் நன்மைகளை ஏவுதலும் தீமைகளைத் தடுத்தலும் இம்மார்க்கத்தை ஏற்றோருக்கு கடமையாக வலியுறுத்துகிறது இஸ்லாம். அப்போதுதான் பூமியில் தர்மத்தை நிலைநாட்ட முடியும்.

மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் இறைவன்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;. (திருக்குர்ஆன் 3:110)

தர்மத்தை நிலை நாட்டும் பணியில் நல்லோர்கள் ஈடுபடும்போது அது அதர்மத்தை முதலீடாக வைத்து மக்களை ஏய்த்துப் பிழைக்கும் தீயோரால் முழுமூச்சாக எதிர்க்கப்படும் என்பதை நாமறிவோம்.. அவர்களால்  அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்க முடியாது. ஏனெனில் தர்மம் வளர்ந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று விடுவார்கள். மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டால் பிறகு தங்களின் மோசடித் தொழிலும் சுரண்டல் வியாபாரங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் எனபதையும் தங்களின் ஏகாதிபத்தியம் ஆட்டம் காணும் என்பதையும் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் அக்கொடியோர்கள்.

தர்மம் பரவும்போது என்ன நடக்கும்?

மக்கள் ஏக இறைவனை மட்டுமே தங்களுடைய வணக்கத்திற்கு உரியவனாக ஏற்றுக் கொள்வார்கள். அந்த இறைவனின் கட்டளைகளுக்கு உட்பட்டு பூமியில் நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் பாடுபடுவார்கள்.. பூமியில் மானிட சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டவும் கலகங்களும் குழப்பங்களும் அற்ற அமைதிமிக்க வாழ்வை நிலைநிறுத்தவும் தன்னலம் கருதாது ஈடுபடுவார்கள். இம்முயற்சியில் தங்கள் உயிர்களையும் அர்ப்பணிக்கத் தயங்க மாட்டார்கள்.

தர்மம் பூமியில் நிலைநாட்டப் பட்டால்...

o  அங்கு இனம் மொழி, நிறம் இவற்றின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் மறைந்து மனித சகோதரத்துவம் நிலைபெறும். இழந்து போன மனித உரிமைகள் மீட்டுக் கொடுக்கப்படும்.

o  கொலை, கொள்ளை, திருட்டு, மோசடி, இலஞ்சம், ஊழல், சூதாட்டங்கள் பதுக்கல். கலப்படம் போன்றவை ஒழியும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இனி யாரும் பிழைப்பு நடத்த முடியாது.

o  மது, போதை, விபச்சாரம், கள்ளக்காதல்கள், பெண்ணடிமைத்தனம்  போன்றவை ஒழியும். ஒழுக்கம் நிறைந்த குடும்ப வாழ்வும் ஆரோக்கியமான மற்றும் அமைதியான சமூக வாழ்வுமுறையும் அங்கு உடலேடுக்கும்.

o  கடவுளின் பெயரால் பாமரர்களைச் சுரண்டும் இடைத்தரகர்கள் ஒழிவார்கள். செலவற்ற எளிமையான இறைவழிபாட்டு முறை அமுலுக்கு வரும். மூடநம்பிக்கைகள் முற்றிலும் ஒழியும்.

o  இடைத்தரகர்களும் நாடாள்வோரும் இணைந்து கடவுளின் பெயராலோ அல்லது மூடநம்பிக்கைகளின் பெயராலோ மக்களை கொள்ளையடிப்பதும் நாட்டு வளங்களை அபகரிப்பதும் வீண்விரயம் செய்வதும் நிற்கும். அவை ஆக்கபூர்வமான வழிகளில் செலவிடப்படும்.

o  வல்லரசு நாடுகள் தங்கள் இராணுவ வல்லமையைக் காட்டி நலிந்த நாடுகளின் வளங்களைக் கொள்ளை அடித்து அவர்களை அடிமைகளாக நடத்தும் கொடுமை முற்றுப்பெறும். அரசு பயங்கரவாத அராஜகங்கள் அழிந்துவிடும்.

o  இன்னும் அணுஆயுதம் அறிவியல், ஊடகங்கள் இவற்றின் மேன்மையை பயன்படுத்தி நலிந்த நாடுகளிக்கிடையே போர் மூட்டுவதும் உலகின் இயற்கை வளங்களில் நஞ்சூட்டி கொள்ளைகள் அடிப்பதும் இன்னும் இதுபோன்ற பல கொடுமைகள் முடிவுக்கு வரும்.

இப்போது நீங்களே கூறுங்கள், தர்மத்தை  நிலைநாட்ட யாரேனும் பாடுபட்டால் அதை கொடுங்கோலர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா? அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் இதை முழுமூச்சாக எதிர்ப்பார்கள். எப்படியெல்லாம் முடியுமோ அனைத்து வழிகளையும் தந்திரங்களையும் உபயோகித்து தர்மம் வளர்வதை முடக்கிப்போடும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.

அதுதான் இன்று நடந்துகொண்டு இருக்கிறது.

உலக அளவில் பார்க்கும்போது அமெரிக்காவுக்கும் G-8 நாடுகளுக்கும் ஆயுத விற்பனைதான் முக்கியமான வருமானம் ஈட்டும் வியாபாரம். உலகிலேயே அதிநவீன தொழில்நுட்பம் வாய்ந்த விமானங்கள், ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள். அணுவாயுதங்கள் மற்றும்  இன்னபிற இராணுவத் தளவாடங்கள்  இவர்களின் கைவசம் இருப்பதால்தான் உலகநாடுகள் அனைத்தையும் இவர்களால் அச்சுறுத்தி தங்களின் அடிமைகளாக அடக்கிவைக்க முடிகிறது. உதாரணமாக மத்திய கிழக்கில் எண்ணைவள நாடுகளான சௌதி அராபியா, குவைத், துபாய், கத்தர், போன்ற நாடுகள் இவர்களால் நியமிக்கப்பட்ட கைப்பாவை அரசர்களால் ஆளப்படுகின்றன.

ஆயுதங்களை  உலக சந்தையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதற்காக சிறு சிறு நாடுகளுக்கு இடையே பகைமையை மூட்டி ஒருவர்க்கொருவர் அடித்துக் கொள்ள வைப்பார்கள். அல்லது நாடுகளுக்குள்ளேயே சிறுசிறு குழுக்களைத் தூண்டி அரசுகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டுவார்கள். ஆயிரக் கணக்கில் அல்லது இலட்சக்கணக்கில் மனித உயிர்கள் மாய்வது இவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. தங்கள் வருமானமும் ஆதிக்கமும் தடைபெறக் கூடாது. இது ஒன்றுதான் இவர்களின் இலட்சியம். இந்த இலட்சியத்தை அடைவதற்காக ஒருபுறம் இராணுவ அடக்குமுறைகளையும் மறுபுறம் தங்கள் கைவசம் உள்ள பத்திரிகை, டிவி, ரேடியோ போன்ற ஊடகங்களையும் தந்திரமான முறையில் கையாள்கிறார்கள்.

இவர்களின் கைப்பாவை அரசுகளுக்கு எதிராக மனித உரிமைகள் கோரி புரட்சி செய்பவர்கள் உலகுக்கு முன் தீவிரவாதிகளாகவும் பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். இவர்கள் தங்கள் ஆதிக்கத்திற்குள் கொண்டுவர நினைக்கும் நாடுகளுக்குள் கிளர்ச்சியாளர்களை உருவாக்கி அவர்களை உலகுக்கு முன் புரட்சியாளர்களாகவும் விடுதலைப் போராளிகளாகவும் சித்தரிக்கிறார்கள். அப்படிப்பட்ட நாடுகளில் கிளர்ச்சியாளர்களுக்கு இராணுவ பலமளித்து அந்நாடுகளைக் கைப்பற்றி கிளர்ச்சியாளர்களின் தலைவரை தங்கள் கைப்பாவை அரசராக அல்லது அதிபராக நியமிப்பார்கள். (சமீபத்திய உதாரணங்கள் : ஈராக், ஆப்கானிஸ்தான்)

அதிநவீன இராணுவத் தளவாடங்களே இவர்களது முக்கிய விற்பனைப் பொருள். அவற்றை உலக நாடுகளில் விற்க வேண்டுமானால் அவ்வாயுதங்களின் செயல்திறனை உலகுக்கு முன் காட்டியாக வேண்டும். அதற்காக சிறு நாடுகளுக்கிடையே இவர்கள் மூட்டிவிடும் போர்களுக்குப் புறம்பாக ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு இடையே குறைந்தபட்சம் ஒருமுறை பெரிய அளவிலான போரை எப்படியாவது நிகழ்த்துகிறார்கள். உலகெங்கும் ஊடகங்கள் மூலமாக மக்களை மூளைச்சலவை செய்து அதை நியாயப் படுத்தவும் செய்வார்கள். மக்கள் அதைப் பார்த்க்கிறார்கள். இப்படி அப்பாவி மக்களின் இரத்தத்தை ஆறாக ஒட்டி அதன்மீது ஆயுதக் கண்காட்சி நடத்துவது இவர்களது வாடிக்கை! இக்கண்காட்சியை தவறாது நடத்துவதன் மூலம் இவர்களுக்கு இரண்டு நேட்டங்கள்: ஒன்று ஆயுத விற்பனை. மற்றது உலக நாடுகளை பயமுறுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.

இப்போது கூறுங்கள், யார் பயங்கரவாதிகள்? இவர்களா?  இல்லை சொந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு தங்களது நாட்டை மீட்பதற்காகப் போராடுபவர்கள்களா? அல்லது தங்களது மனைவி மக்களையும் உற்றார் உறவினர்களையும் இவர்களின் சூழ்ச்சிகளினால் பறிகொடுத்துவிட்டு தங்கள் உரிமைகளை மீட்பதற்காக போராட்டங்கள் நடத்துபவர்களா? அல்லது தங்களது நாடுகளில் இவர்களின் கைப்பாவை அதிபர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்து நாட்டையும் நாட்டின் வளங்களையும் காப்பாற்றுவதற்காக முனைபவர்களா?

ஆனால் என்ன நடக்கிறது? இன்று ஊடகங்களின் ஆதிக்க பலத்தினால் உலகளாவிய முறையில்  கொடுங்கோலர்கள் சமாதானப் பிரியர்களாகவும் இழந்த உரிமைகளையும் உடமைகளையும் மீட்பதற்காகவும் சமாதானத்தை நிலைநாட்டவும் போராடுபவர்கள் பயங்கர வாதிகளாகவும் சித்தரிக்கப் படுகிறார்கள்.

No comments

Powered by Blogger.