தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் முன்னோடிகளது பொறுப்புக்கள்..!
அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம்.பளீல் (நளீமி)
தேர்தல் காலங்களில் உலமாக்களும் மற்றும் கல்விமான்களும் தமக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களான குத்பாக்கள்,பயான்கள், சொற்பொழிவுகள், கலந்துரையாடல்கள் என்பவற்றை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி சமூகத்திற்குப் பொருத்தமான வழிகாட்டல்களை வழங்கலாம். இத்தகைய முக்கியமான காலகட்டத்தில் முஸ்லிம் சமூகம் எத்தகைய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்க வேண்டும், தேர்தலில் வாக்களிப்பதன் மிக்கியத்துவம், சிறந்த வேட்பாளருக்கு இருக்க வேண்டிய பண்புகள் போன்ற அம்சங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகத்துக்குத் தெளிவுகளை வழங்குவது சமூகத்தின் வழிகாட்டிகளது பொறுப்பும் கடமையும் காலத்தின் தேவையுமாகும். இது சம்பந்தமான சில ஆலோசனைகள் வருமாறு:
1. தற்காலத்தில் மனித வாழ்வுடன் அரசியலுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பெரும் சம்பந்தம் உள்ளது. நாட்டின் பொருளாதாரம்,கல்வி, தொழில் வாய்ப்பு,மனித சுதந்திரங்கள், இனங்களுக்கிடையிலான உறவுகள் நியமனங்கள் போன்ற அனைத்து துறைகளையும் தீர்மானிக்கும் நிலையில் அரசியல் உள்ளது. இலங்கை மக்களது போக்குகளை தீர்மானிப்பதிலும் மனப்பாங்குகளை உருவாக்குவதிலும் அரசியல்வாதிகள், மீடியாக்காரர்கள்,மதத் தலைவர்கள் ஆகிய மூன்று சாராரும் பிரதான பங்கு வகிப்பதாகக் கூறப்பட்டாலும் முதல் பிரிவினருக்கே அதிக பங்கிருப்பதனால் தான் மற்றைய இரு சாராரும் அந்த முதல் பிரிவினரது போக்கு சம்பதந்தமாக மிகுந்த கரிசனையெடுக்கிறார்கள்.சிலபோது அவர்களில் தங்கியும் இருக்கிறார்கள்.தொடர்புகளை வைத்திருக்கிறார்கள்.எனவே, அரசியல் பற்றி சிந்திப்பதும் நல்ல நிலைப்படுகளை எடுப்பதும் முஸ்லிம்களைப் பொறுத்தவரையிலும் அவசியமானதாகும். ''அல் அம்ரு பில் மஃரூப் வன்னஹி அனில் முன்கர்'' (நன்மையை ஏவி தீமையைத் தடுப்பது) எனும் பணியில் இது அடங்கும்.
2. அரசியலில் ஒரு முஸ்லிம் தனிமனிதனோ முஸ்லிம் சமூகமோ சம்பந்தப்படுவது அனுமதிக்கத்தக்கது மட்டுமல்ல ஒரு கடமையும் இபாதத்துமாகும். இவ்விடயத்த்தின் முக்கியத்துவதை நபிமார்கள் கூட நன்கு புரிந்திருந்தார்கள். நபிமார்களான தாவுத், சுலைமான், மூஸா, இப்ராஹீம், யூசுப்(அலை) போன்றவர்கள் அரசியலில் ஈடுபட்டார்கள். துல்கர்னைன் மாபெரும் ஆட்சியாளராக இருந்தார் என்பதை சூரா கஹ்பில் அல்லாஹ் கூறுகிறான். நபி(ஸல்) அவர்களும் நான்கு கலிபாக்களும் அரசியலில் சம்பந்தப்பட்டிருந்தார்கள். கிலாபா, கலீபா, ஆமில், வலீ, காளீ, ஹிஸ்பா போன்ற பதங்கள் அரசியலுடன் சம்பந்தப்பட்டவையாகும். மேலும் பார்க்க: (12:54), (22:41), (18:83 - 98), (28:4-6)எனவே,அரசியலை துன்யாவுடைய விடயம்,சாக்கடை என்றெல்லாம் கூறி ஒதுக்கிவிடாமல்,அதில் சம்பந்தப்பட்டு அதனை பூங்காவனமாக மாற்றலாம்.
3. நல்லாட்சியையும் சமூக நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவார்கள் என நாம் கருதுபவர்களை ஆட்சியில் அமர்த்தும் நோக்குடன் வாக்களிப்பது மார்க்கக் கடமையாகும் பொருத்தமற்ற ஆட்சியாளர் தெரிவு செய்யப்படலாம் என்ற சூழ்நிலை உருவாகும் பட்சத்தில் தீமையைத் தடுத்து நிறுத்துவதற்காக வாக்களிப்பது கடமை என்பது போலவே பொருத்தமானவருக்கு வாக்களிக்காமல் ஒதுங்கியிருப்பதும் பாவமாகும். வாக்களிப்பது என்பது சாட்சியம் கூறுவதாகும். ''சாட்சியமளிக்க சாட்சியாளர்கள் அழைக்கப்பட்டால் அதற்கு அவர்கள் மறுப்புத் தெரிவிக்க வேண்டாம்”, ”நீங்கள் சாட்சியத்தை மறைக்க வேண்டாம். அதனை யார் மறைக்கிறாரோ அவரது உள்ளம் பாவம் செய்கிறது.” (2:282:283) என அல்லாஹ் கூறுகிறான். யார் மோசமான ஆட்சியாளரை தெரிவு செய்வதற்கு வாக்களிக்கிறாரோ அவர் பொய் சாட்சியம் சொன்ன குற்றத்திற்கு ஆளாகிறார். பொய் சாட்சியம் கூறுவது ''அக்பருல் கபாஇர்''- பெரும்பாவங்களுக்கு மத்தியிலுள்ள பெரும்பாவமாகும் என நபி (ஸல்) கூறியுள்ளார்கள். எனவே, வாக்களிக்காதிருப்பதும் வாக்கை பொருத்தமற்ற வேட்பாளருக்கு வழங்குவதும் சமதரத்திலான பாவங்களாகும். பொய் சாட்சியம் கூறுவது பெரும்பாவமாக இருப்பதுபோலவே சாட்சியத்தை மறைப்பதும் அப்படியே பெரும்பாவமாகும் என இமாம் இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் (2:282:283) வசனங்களுக்கு விளக்கம் தந்துள்ளார்கள்.
4. குறிப்பாக தேர்தல் காலங்களிலும் பொதுவாக எல்லாக் காலங்களிலும் முஸ்லிம்கள் நாவால், உடல் உறுப்புக்களால் வெளியாகும் எந்தக் குற்றச் செயல்களிலும் சம்பந்தப்பட்டு விடக்கூடாது. நாம் விரும்பாத ஒரு வேட்பாளர்கள் பற்றி பொய், அபாண்டம், ஆபாசமான வார்த்தைகள் பேசக்கூடாது. அதேபோல் நாம் ஆதரிக்கும் வேட்பாளர் என்பதற்காக இல்லாத விடயங்களை புகழுவதற்காகப் பயன்படுத்தக்கூடாது. வீணான தர்க்கம், சண்டை சச்சரவு, வன்செயல்கள் என்பன முஃமினின் ஈமானையே பாதித்துவிடும். (லஹ்வு)பராக்காக்கும் காரியங்கள்,(லக்வு)அனாவசியமான காரியங்கள் என்ற குர்ஆனிய பிரயோகங்களை முஸ்லிம்கள் அறிந்திருக்க வேண்டும்.
5. சமூகத்தில் அறிவும் அனுபவமும் சமூக உணர்வும் அல்லாஹ் பற்றிய பயமும் தூரநோக்கும் கொண்ட நிதானமாக சிந்திக்க கூடியவர்களுடன் கலந்தாலோசித்த பின்பே பொருத்தமான வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் நலனில் அக்கறையும் தேசத்தை நல்லாட்சியின் அடிப்படையில் கட்டியெழுப்புவதில் உண்மையான மனப்பூர்வமான வேட்கையும் கொண்ட வேட்பாளருக்கு மட்டுமே வாக்களிக்கப்பட வேண்டும். துவேஷத்தைத் தூண்டுவார் இனங்களை மோத விடுவார், நாட்டை சூறையாடுவார், மக்களது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கமாட்டார் என எம்மால் ஊகிக்க முடியுமான ஒருவரைத் தெரிவு செய்வது பாவமாகும். சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்களது அபிப்பிராயங்களை அறிவதோடு வேட்பாளர்களும் அவர்களது ஆதரவுக் கட்சிகளும் தொலைத்தொடர்பு சாதனங்களில் வெளியிடும் கருத்துக்களையும் முஸ்லிம்கள் உன்னிப்பாக அவதானித்து வர வேண்டும்.
6. ஒரு வேட்பாளர் எனக்கு அறிமுகமானவர். எனவே, அவர் எனக்கு ’கொந்தராத்து’ த் தருவார். ஏற்றிறக்குமதியில் எனக்கு சட்டத்துக்குப் புறம்பாக உதவி செய்வார். எனது தவறுகளை மூடி மறைப்பதோடு அவற்றைக் கண்டுகொள்ளமாட்டார். எனக்கோ அல்லது உறவினர்களுக்கோ தொழில்களும் பதவிகளும் தருவார் போன்ற அற்பமான நோக்கங்களுக்காக நான் அவருக்கு வாக்களித்தால் அது எனது சுயநலமாகவே அமையும். அநீதியின் உச்சமாக அது கருதப்படும். (5:8) (4:135) அப்படியில்லாமல் எனக்கு தனிப்பட்ட ரீதியில் இலாபங்கள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் எனது சமூகத்தையும் நான் வாழும் தேசத்தின் ஒவ்வொரு குடிமகனையும்-அவன் எந்த இனத்தை மதத்தைச் சேர்ந்தவனாக இருப்பினும்- அனைவரையும் சமனாக நடத்தக்கூடிய, பொருளாதார சுபீட்சத்துக்கு வழிவகுக்கக்கூடிய நல்ல மனப்பாங்குள்ள ஒருவர் தான் தெரிவு செய்யப்பட வேண்டும்.
7. தேர்தல் போன்ற நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும் போது அல்லாஹ்விடம் உதவி தேடுவது என்பது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த பிரதானமான சுன்னாவாகும்.பொருத்தமான வேட்பாளருக்கு மட்டுமே வெற்றியைக் கொடுக்குமாறும் பொருத்தமற்றவரைத் தோல்வியைத் தழுவச் செய்யும்படியும் நாம் அல்லாஹ்வை வேண்டிக்கொள்ள வேண்டும்.
8. தேர்தல் முடிந்த பின்னர் நிதானமாக நடந்து கொள்வதும் கடமையாகும். வெற்றி தோல்வி என்பன உலக வாழ்வில் சகஜமாகும். அல்லாஹ் எந்த முடிவைத் தந்தாலும் அதனை திருப்தியோடு ஏற்பதும் பொறுமை காப்பதும் முஸ்லிமின் பண்பாகும். எதிர்பார்த்தது நடந்தால் அல்லாஹ்வைப் புகழ்வோம்! எதிர்பாராதது நடந்தால் பொறுமையாக இருப்போம்.! ''ஒரு முஃமினின் விடயம் ஆச்சரியமானதாகும். சந்தோஷமான விடயம். அவனைத் தொட்டுக்கொண்டால் அவன் (அல்லாஹ்வுக்கு) நன்றி தெரிவிப்பான். அவனைத் துன்பம் பீடித்தால் அவன் பொறுமையாக இருப்பான்'' என நபி(ஸல்) கூறினார்கள். எனவே, தேர்தல் முடிவு எதிர்பாராத விதமாக அமையும் பட்சத்தில் பொறுமை சாதிப்பது அவசியமாகும்.அவ்வாறு பாதகமாக அமைவதை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக.!
9. அந்தவகையில், உலமாக்களும் மற்றும் புத்தி ஜீவிகளும் சமூக ஆர்வலர்களும் மக்களை நற்காரியங்கள் பால் வழிகாட்டுவதோடு குற்றச்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தவிர்க்க வேண்டும். அத்துடன் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை வளர்க்க வேண்டும். இஸ்லாமிய அடிப்படையில் சிந்தித்தால், வாழ்ந்தால் மட்டுமே ஈருலக வெற்றியும் கிட்டும் என்றும் வலியுறுத்த வேண்டும்.
அல்லாஹ் நாட்டுக்கும் சமூகத்துக்கும் ஒளிமயமான எதிர்காலத்தைத் தருவானாக!
Post a Comment