ஜனாதிபதியை நம்பி ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது, ஹக்கீமின் முடிவுக்காக காத்திருக்கிறோம் - ஹசன் அலி
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் நாம் தொடர்ச்சியாக பல முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும் அரசாங்கம் கதவடைத்து விட்டது. அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரக்தியுடனேயே உள்ளது என தெரிவித்த காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி எம்.பி. பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் எமக்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முடிவு இன்னமும் அறிவிக்கப்படாதுள்ள நிலையில் தமது முடிவு தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்திய நாம் அரசாங்கத்தின் வெற்றியின் பங்குதாரர்களாக உள்ள போதிலும் எமது முயற்சிகள் பல வெற்றி பெறாத நிலையில் உள்ளன. இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் நாம் ஆரம்பத்தில் இருந்தே அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருகின்றோம். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவுக் குழுவில் பேச முயன்ற போது அரசாங்கத்தின் தெரிவுக் குழுவில் இருந்தே எம்மை நீக்கிவிட்டனர். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளில் அரசாங்கத்தின் தீர்வு இல்லை என்பதற்கு சமமான வகையில் எம்மீது அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்து விட்டன. தற்போதும் நாம் அரசாங்கத்தின் மீது விரக்தியிலேயே உள்ளோம். ஜனாதிபதி முஸ்லிம்களின் பிரச்சினைக்கான தீர்வுக் கதவினை மூடிவிட்டார். அவரை நம்பி ஏமாற்றம் மட்டுமே இதுவரையில் மிஞ்சியுள்ளது.
எனினும் பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிகின்றது. அரசாங்கம் தெரிவுக்குழுவிலேயே எம்மை நீக்கிவிட்டுள்ள நிலையில் எமது கொள்கைகள் மற்றும் கருத்துக்கள் மூடப்பட்டு விட்டது. எனினும் பொது எதிரணி அனைத்து கட்சிகளையும் இணைத்து தமது தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதாக குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்க விடயமாக நாம் கருதுகின்றோம்.
பொது எதிரணி தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையிலான நல்லதொரு சமிக்ஞையினை வழங்கியுள்ளது. அதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போதும் அரசாங்கத்தை பாதுகாக்கவோ அவர்களின் வெற்றியினை உறுதிப்படுத்தவோ செயற்படவில்லை. நாம் எப்போதும் எமது மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவே முயற்சித்து வந்துள்ளோம். இப்போதும் கட்சியின் இறுதித் தீர்மானம் கட்சியின் தலைவரினால் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளதாக அவரின் முடிவிற்காக காத்திருக்கின்றோம் எனவும் குறிப்பிட்டார்.
Post a Comment