பெற்றோர்களின் கவனத்திற்கு..! ஜம்மியத்துல் உலமாவின் அறிக்கை..!!
க.பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுற்றுள்ள நிலையில் அம்மாணவர்களுக்கான சிறந்த வழிகாட்டல்களை வழங்கி அவர்களது நேரத்தை பயனுள்ள முறையில் பயன்படுத்த வைப்பது பெற்றோர்களதும் ஆசிரியர்களதும் துறைசார்ந்தோரதும் கடமையாகும்.
இக்காலப்பிரிவு மாணவர்கள் தமது கல்வி மற்றும் ஏனைய துறைசார்ந்த தீர்மானங்கள் மேற்கொள்ளும் காலப்பிரிவாகும். அவர்களது ஆர்வம், திறமை என்பவற்றிற்கு ஏற்ப சிறந்த முறையில் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான வழிகாட்டல்கள் கட்டாயம் கொடுக்கப்பட வேண்டும். உயர்தரப் பரீட்சைக்கு தகுதி பெறும் மாணவர்களுக்கு அவர்களது துறையை சரியாக தெரிவு செய்து, தொடர்ந்து கற்பதற்கான வழிகாட்டல்களும் ஏனையோருக்கு தகவல் தொழில்நுட்பம், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஈடுபடுவதற்கான வழிகாட்டல்களும் வழங்கப்பட வேண்டும். வெறுமனே வழிகாட்டல்களோடு நின்று விடாது மாணவர்கள் தெரிவு செய்யும் துறையில் தொடர்ந்து செல்வதற்கு நிதி மற்றும் ஏனைய உதவிகளை செய்து கொடுக்கவும் எமது சமூகம் முன்வர வேண்டும்.
இன்று பல மாணவர்கள் க.பொ.த சாதாரண தர பரீட்சையோடு தமது கல்வியை நிறுத்திவிட்டு சிறு தொழில்களில் ஈடுபடும் அபாயகரமான நிலை பரவலாக காணப்படுகிறது. அதேபோன்று மாணவர்கள் தாம் எந்தத் துறையை தேர்ந்தெடுப்பது என்ற தெளிவற்ற நிலை காணப்படுகின்றது. இந்நிலை முற்றாக நீக்கப்பட்டு சிறந்தவொரு சமூகம் உருவாக பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், மஸ்ஜித் நிர்வாகங்கள் என பலதரப்பட்டவர்களும் இணைந்து திட்டமிட்டு செயல்பட வேண்டுமெனவும் ஜம்இய்யாவின் பிரதேசக் கிளைகள் மேற்படி விடயத்தை கவனத்திற் கொண்டு மக்களுக்கு வழிகாட்ட வேண்டுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவரது முயற்சிகளையும் அங்கீகரித்து நல்லருள் புரிவானாக.
அஷ்-ஷைக் எம்.எம். அஹ்மத் முபாறக்
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Post a Comment