Header Ads



அமைச்சர் ரிஷாத் ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்த பின், பரிசு கிடைத்ததா..?

வவுனியா வாழவைத்தகுளம் முஸ்லிம்களின் காணிகளை இராணுவம் அபகரிப்பதை உடனடியாக நிறுத்தவேண்டும் என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினரும் வடக்கு மாகாணசபை உறுப்பினருமான அஸ்மின் அய்யூப் தெரிவித்துள்ளார்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச பிரிவுக்குட்பட்ட வாழவைத்தகுளம் முஸ்லிம் மக்களின் தேவைக்கான காணிகள் இராணுவத்தினரால் நேற்றையதினம் அபகரிக்கப்பட்டது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அறிக்கையில்,

வவுனியா செட்டிகுளம் பிரதேச பிரிவுக்குட்பட்ட வாழவைத்தகுளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் அல் அமான முன்பள்ளி, பொதுநோக்கு மண்டபம், பொது விளையாட்டு மைதானம் போன்ற தேவைகளுக்காக சட்ட ரீதியாக காணி அதிகார சபை மற்றும் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட காணிகளை நேற்றையதினம் இலங்கை இராணுவத்தின் 212வது படைப் பிரிவினர் ஆக்கிரமித்துள்ளதாக அறிகின்றோம்.

இது வடக்கு முஸ்லிம்களின் உரிமைகளுக்கு எதிராக ஆளும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் நடவடிக்கையாகவே அமைந்திருக்கின்றது. அண்மையில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு மகிந்தவை ஆதரிப்பதற்கு முஸ்லிம்கள் பூரண அங்கீகாரம் வழங்கினார்கள் என்ற ஒரு செய்தி ஒருசில ஊடகங்களில் வெளியாகியிருந்தமை அனைவரும் அறிந்த விடயமாகும். இந்நிலையில் நேற்றையதினம் அமைச்சர் ரிஷாத் அவர்கள், ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்து நேரடியாக தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தார். அதற்கான பரிசாகவா இந்த காணி அபகரிப்பு நடந்திருக்கிறது என நான் கேள்வி எழுப்புகிறேன்.

இதனை நிறுத்தி மேற்படிக் காணியிலிருந்து உடனடியாக இராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக குறித்தக் காணி உடனடியாக மீண்டும் அம்மக்களுக்கு கையளிக்கப்பட வேண்டும் என்றும், மக்கள் பிரதிநிதி என்றவகையில் கேட்டுக்கொள்கின்றேன். என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.