Header Ads



ஆட்சி முறை மாற்றத்திற்காக நமது வாக்குகளை வழங்குவோம்..!

நாட்டின் ஏழாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவிருக்கிறது. பிரதான வேட்பாளர்களாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி சார்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பொது எதிரணி சார்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும் போட்டியிடுகின்றனர்.

இத்தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 23 மற்றும் 24ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கிறது. அரசாங்க ஊழியர் என்ற வகையில் நீங்களும் உங்களது பெறுமதிமிக்க வாக்கை இந்நாட்களில் அளிக்கவிருக்கிறீர்கள். எவருக்கு வாக்களிப்பது என்பதைத் தீர்மானிப்பது உங்கள் உரிமை என்கின்ற போதிலும் அதனை சமூகப் பொறுப்போடும் தேசத்தின் நலன்களை மையப்படுத்தியும் மேற்கொள்ளவேண்டும். அந்தவகையில் வாக்களிப்பதற்கு முன்பதாக மனதில் கொள்ள வேண்டிய சில விடயங்களை நினைவுபடுத்துவது பொருத்தம் எனக் கருதுகிறோம்.

நீங்கள் வாக்களிக்கவுள்ள இந்தத் தேர்தலானது நமது பிரதேச நலன்களை மாத்திரம் மையப்படுத்திய தேர்தல் அல்ல. மாறாக முழு தேசத்தினையும் அடுத்த ஆறு வருடங்களுக்கு தலைமை தாங்கி வழிநடாத்தக் கூடிய அரசியல் தலைமையினையும் அரசாங்கத்தினையும் தெரிவு செய்வதற்கான தேர்தல் ஆகும். அந்தவகையில் இந்தத் தேர்தலிலும் மூன்றாவது தடவையாக போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷவின் கடந்த 10 வருட ஆட்சிக் காலத்தை ஒருமுறை மீட்டிப் பார்ப்பது பொருத்தமாகும்.

மஹிந்த ராஜபக்ஷ தனது ஆட்சிக் காலத்தினுள் போரை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும் அதன்பிற்பாடு நாட்டை வெற்றிப் பாதையில் வழிநடாத்துவதில் தோல்வி கண்டுவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். போருக்குப் பிற்பாடு நாட்டில் சமாதானம் தளைத்தோங்கும், மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை நீண்ட நாள் நீடிக்கவில்லை. மாறாக அதிகார துஷ்பிரயோகம், அடக்குமுறை, ஊழல் மோசடிகள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, அரச நிர்வாக ஒழுங்கீனம், சிறுபான்மையினருக்கு எதிரான மத கலாசார விரோத நடவடிக்கைகள், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணாது இழுத்தடிப்பது, விலைவாசி உயர்வு, குடும்ப ஆட்சி, வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கம், முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்புணர்வும் வன்முறையும் கலந்த நடவடிக்கைகள், தீவிர பௌத்த கடும்போக்கு 
சக்திகளை ஊக்குவிக்கும் போக்கு என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள்தான் இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் தலைவிரித்தாடின.

கடந்த இரண்டரை வருட காலப்பகுதியில் சிறுபான்மை மதங்கள் சில பௌத்த கடும்போக்கு சக்திகளால் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்கு எதிராக மாத்திரம் 350 சம்பவங்கள் இக் காலப்பகுதியில் பதிவாகின. குறிப்பாக சுமார் 25க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன. கிராண்ட்பாஸ், மஹியங்கனை மற்றும் ராஜகிரிய பள்ளிவாசல்கள் நிரந்தரமாகவே மூடப்பட்டன. 400 வருடங்கள் பழைமை வாய்ந்த கருமலையூற்று பள்ளிவாசல் முற்றாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக அளுத்கம நகரில் திட்டமிட்டு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்களும் வீடுகளும் கொள்ளையிடப்பட்டு எரித்துச் சாம்பராக்கப்பட்டன.

வேறு எந்தவொரு அரசாங்கங்களின் ஆட்சிக் காலத்திலும் இந்த நாட்டு முஸ்லிம்கள் இவ்வாறானதொரு அடக்குமுறைக்கு முகங்கொடுத்ததில்லை. இந்த வன்முறைகளுக்குக் காரணமான சக்திகளுக்கு எதிராக எந்தவித நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் எடுக்கவில்லை. மாறாக அவர்களைப் பாதுகாத்து ஊட்டி வளர்த்தது. இன்றும் அந்த தீய சக்திகளில் அரசாங்கத்தின் பாதுகாப்பிலேயே வலம் வந்து கொண்டிருக்கின்றன.

அதேபோன்றுதான் இந்த அரசாங்கத்தின் ஆட்சியில்தான் நாட்டின் ஸ்திரத்தன்மை சீர்குலைந்து அரச நிர்வாகம் சீர்கெட்டது. திறமையும் தகுதியும் வாய்ந்தவர்கள் ஒரங்கட்டப்பட்டனர். தகுதியற்றவர்கள் உயர்பதவிகளில் நியமிக்கப்பட்டதன் காரணமாக அரச ஊழியர்களால் தமது செயற்பாடுகளை ஒழுங்குற முன்னெடுக்க முடியாமல் போனது. அரசாங்க நிறுவனங்களில் பணிபுரியும் கணிசமான ஊழியர்கள் அடிமைகள் போன்றே நடத்தப்பட்டனர். ஒரு சந்தர்ப்பத்தில் அரச சார்பு அரசியல்வாதி ஒருவரால் ஆசிரியை ஒருவர் முட்டுக்காலில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார், மற்றொரு சந்தர்ப்பத்தில் சமுர்த்தி அதிகாரி ஒருவர் மரத்தில் கட்டி வைக்கப்பட்டார். இந்த நாட்டை பயங்கரவாதத்திடமிருந்து மீட்கப் போராடிய இராணுவத்தினர் மேசன்களாகவும் தச்சன்களாகவும் அரசியல்வாதிகளினதும் அடிமைகளாக மாற்றப்பட்டதும் இந்த ஆட்சியில்தான்.

அதேபான்று இந்த அரசாங்கத்தின் தூர நோக்கற்ற பொருளாதாரக் கொள்கையாலும் நினைத்தவாறான விலை அதிகரிப்புகளாலும் அதிகம் பாதிப்புக்குள்ளானதும் அரச ஊழியர்கள்தான். மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட வருமானத்தைக் கொண்ட அரச ஊழியர்கள் அன்றாட வாழ்க்கையை கொண்டு நடத்தவே திண்டாடிக் கெண்டிருக்கையில் ஆட்சியில் இருந்தவர்களோ மக்களின் பணத்தைச் சூறையாடி சொகுசு வாழ்க்கை நடத்துகின்றனர். அபிவிருத்தி என்ற பெயரில் கோடிக் கணக்கான ரூபாய்களை கொள்ளையடிக்கின்றனர்.

அரசாங்க ஊழியர்கள் தமது சம்பளத்தை அதிகரிக்குமாறு பல தடவைகள் போராட்டங்களை நடத்திய போதிலும் அதனை இந்த அரசு கண்டுகொள்ளவே இல்லை. தேர்தல் காலங்களில் மாத்திரம் சம்பளத்தை அதிகரிப்பதாக வாக்குறுதியளித்தார்களே தவிர பின்னர் அது பற்றி வாய்திறப்பதேயில்லை. சம்பளத்தை அதிகரிக்க அரசாங்கத்திடம் போதிய பணம் இல்லை என காரணம் காட்டுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. உதாரணத்திற்கு பெற்றோலிய பொருட்கள் விற்பனை மூலமாக அரசாங்கம் வருடமொன்றுக்கு 28,000 கோடி ரூபாவை மேலதிக வருமானமாகப் பெறுகிறது. அரசாங்க ஊழியர்கள் கோரும் 10;இ000 ரூபாய் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு இந்தத் தொகையில் அரைவாசிக்கும் குறைவான தொகையே (12 கோடி) போதுமானதாகும். இருந்தாலும் அரசாங்கம் அதனைச் செய்ய விரும்பவில்லை. ஆனால் மக்களிடமிருந்து அறவிடப்படும் இப்பாரிய தொகை வருமானம் அரசியல்வாதிகளால் சுரண்டப்பட்டது மாத்திரமன்றி வீண்விரயமாகவும் மாற்றப்பட்டன.

யுத்த காலத்தில் அரசாங்கம் பாதுகாப்புக்காக வருடாந்தம் 10 ஆயிரம் கோடி ரூபாவினையே ஒதுக்கியது. ஆனால் போர் முடிவுக்கு வந்த பிற்பாடு அத் தொகை 25 ஆயிரம் கோடி ரூபாவாக அதிகரித்துள்ளது. ஆனாலும் மக்களின் அத்தியவசிய துறைகளான சுகாதாரத் துறைக்கு வழமைபோன்று 10.000 கோடி ரூபாவும் கல்வித் துறைக் 3,900 கோடி ரூபாவும் மாத்திரமே ஒதுக்கப்பட்டன. கல்விக்கான இந்த ஒதுக்கீட்டை 2மூ இருந்து 6மூ அதிகரிக்குமாறு பல்வேறு கல்விசார் தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்திய போதிலும் அவர்களை தண்ணீர் பீய்ச்சியடித்துத் துரத்தினார்களே தவிர கோரிக்கைகளுக்கு காது கொடுக்கவில்லை. இந்த நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் அரச ஊழியர்களின் பிள்ளைகளுக்கு ஒழுங்கான கல்வியையோ சலுகைகளையோ கொடுக்க முன்வரவில்லை.

ஜனாதிபதியின் தனிப்பட்ட செலவுக்கு வருடாந்தம் 1,000 கோடி ரூபாவை செலவிடும் இந்த அரசு. 400 கோடி ரூபாவினை ஒதுக்கி இருதய சிகிச்சைப் பிரிவைமேம்படுத்தி வருடாந்தம் 4000 உயிர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால்தான் இந்த நாட்டு மக்கள் அனைவரும் மாற்றம் ஒன்று வேண்டும் எனச் சிந்திக்கத் தலைப்பட்டுள்ளார்கள். சிறுபான்மையினர் மட்டுமன்றி பெரும்பான்மையினரும் கூட இந்த மாற்றத்திற்காக அணிதிரளத் தொடங்கியிருக்கிறார்கள். எனவேதான் இந்த மாற்றத்திற்கான பயணத்தில் பொது எதிரணியுடன் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் கைகோர்த்துள்ளது.

அவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு தனது ஆதரவை வழங்க முன்வந்துள்ளது. அந்த வகையில்தான் அரசாங்க ஊழியர்களாகிய நீங்களும் மாற்றத்திற்கான இந்த பயணத்தில் கைகோர்க்க வேண்டும் என நாம் அழைப்பு விடுக்கிறோம். இந்த மாற்றத்திற்கு செயல்வடிவம் கொடுக்க முன்வந்திருக்கும் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிப்பதன் மூலம் மாற்றத்திற்கான நமது பங்களிப்பையும் வழங்க முன்வர வேண்டும்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நிலவிய மேற்சொன்ன முறைகேடுகளை அகற்றி சிறப்பானதும் மக்கள் நலன்சார்ந்ததுமான திட்டங்களை நடைமுறைப்படுத்த அவர் முன்வந்திருக்கிறார். தான் ஆட்சிக்கு வந்த முதல் 100 நாட்களுக்குள் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்கவுள்ளதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கிறார். மோட்டார் சைக்கிள் வழங்கும்போது அசாதரணத்திற்குள்ளான அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூபா 3,500 மாதாந்த மேலதிக கொடுப்பனவு வழங்கவும் அவர் உறுதியளித்திருக்கிறார் என்பதையும் இங்கு நினைவூட்ட விரும்புகிறோம்.

அந்தவகையில் இந்த நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கப் போகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் முதன் முதலில் வாக்களிக்கின்ற வாய்ப்பை நீங்களே பெற்றிருக்கிறீர்கள். ஆக, உங்கள் பெறுமதிமிக்க வாக்கினை அளிப்பதன் மூலம் மாற்றத்தை தொடக்கி வைக்கப் போகிறீர்கள். தபால் மூல வாக்களிப்புக்குரிய 23ஆம் 24ஆம் திகதிகளிpல் உரிய வேளைக்குச் சென்று உங்கள் பெறுமதிமிக்க வாக்குகளை பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் 'அன்னம்' சின்னத்திற்கு அளிப்பதன் மூலம் இந்த மாற்றத்திற்கான போராட்டத்தில் உங்கள் பெறுமதிமிக்க பங்களிப்பை வழங்குவீர்கள் என எதிர்பார்க்கிறோம்.

நன்றி

இவ்வண்ணம்,

நல்லாட்சிக்கான தேசிய முன்னணி.

No comments

Powered by Blogger.