மறைந்த முஸ்லிம் தலைவர்களின் ஆளுமையே, அக்கால அரசியல் ஸ்திரத்தன்மைக்கு வித்திட்டது
(சத்தார் எம். ஜாவித்)
இலங்கை வாழ் முஸ்லிம்கள் வன்முறைகளையோ அல்லது மற்றய சமுகங்களை சிறுமைப்படுத்தவோ விரும்பியதில்லை மாறாக ஏனைய சமுகங்களுடன் ஒற்றுமையுடனும் நல்லுறவுடனுமே வாழ விரும்புகின்றனர்.
இதனையே மறைந்த முஸ்லிம் தலைவர்கள் ஏற்படுத்தியிருந்தனர் அதற்குக் காரணம் அவர்களின் தூர நோக்குடனான நல்ல சிந்தனைகளும் அவர்களின் சிறந்த ஆளுமையுமே அக்கால அரசியல் இஸ்திரத் தன்மைக்கு வித்திட்டன இதன் மூலம் அவர்கள் ஆட்சியாளர்களால் மட்டுமல்லாது சகல இன மக்களாலுமே சமுகத்தில் மதிக்கப்பட்டனர் எனலாம்.
ஆனால் அந்த நல்ல விடயங்களை ஒரு சில இனவாத அரசியல் வாதிகள் கொச்சைப்படுத்தும் கைங்கரியங்களையே அன்றும் இன்றும் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு ஒரு சில முஸ்லிம் அரசியல் வாதிகளும் கூட உடந்தையாக இருக்கின்றமையும் வேதனைக்குரிய விடயமாகும். இவ்வாறான செயற்பாடுகளுக்கு தேர்தல்களை ஒரு களமாக பயன்படுத்தி மக்களை திசை திருப்பும் தந்திரோபாயங்களை தற்போதைய தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிலும் கூட காணப்படுகின்றது.
குறிப்பாக மக்கள் மனங்களை மாற்ற ஒவ்வொரு அரசியல்வாதிகளும் தாம்தாம் செய்தவைகளையே பல்லவிகளாக கொட்டி தற்போது மூளைச் சலவை செய்யும் அரசியல் கைங்கரியங்கள் மூலம் அப்பாவி மக்களை தம்பக்கம் இழுக்கும் முயற்சிகளுக்கும் குறைந்தபாடில்லை என்பதனை காணக் கூடியதாகவுள்ளது.
இன உறவிற்கும் நல்லிணக்கத்திற்கும் முன் உதாரணமாக வாழ்ந்து வரும் சமுகமாக முஸ்லிம் சமுகம் கடந்த காலங்களில் இலங்கையின் அரசியல் வரலாற்றில் தடம் பதித்துள்ளதை வரலாற்று சான்றுகள் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. குறிப்பாக காலஞ் சென்ற ஏ.சி.எஸ். ஹமீட், எம்.எச்.எம்.அஷ்ரப், கலாநிதி பதியுதீன் மஹ்மூத் போன்றோர் இனவாதத்திற்கு மத்தியிலும் பெரும்பான்மை மக்களுடன் இரண்டறக் கலந்து முஸ்லிம் மக்களை நல்வழி நடத்தினார்களே தவிர அரசியலுக்கு விலைபோகும் வகையில் அவர்கள் ஒருபோதும் தமது அரசியலை கொண்டு சென்றவர்கள் அல்லர் என்பதும் அவர்களின் கடந்த கால அரசியல் நடவடிக்கைளில் இருந்து அறியலாம்.
இவ்வாறு பெரும்பான்மைக்கு நம்பிக்கையானவர்களாக சிறுபான்மை சமுகம் என்ற வகையில் முஸ்லிம் சமுகம் இருந்திருந்தாலும் வரலாற்றில் பல விடயங்களில் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமுகமாகவே தமது வாழ் வியலை கொண்டு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் இருந்து வருகின்றனர்.
முஸ்லிம் சமுகம் இலங்கையில் சிறுபான்மைச் சமுகங்களாக இருந்தாலும் சர்வதேச அரங்கில் ஏனைய சமுகங்களை விட பெரும்பான்மையாகத்தான் அடையாளப் படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் சர்வதேச மட்டத்தில் இலங்கையின் சிங்கள பௌத்தர்கள் சிறுபான்மையினராக கணிக்கப்பட்டுள்ளதே உண்மை. இவ்வாறானதொரு நிலையில் இலங்கையில் முஸ்லிம் சமுகம் கடந்த காலங்களில் பெரும்பான்மை இனவாதிகளால் வஞ்சிக்கப்பட்டு வந்த நிலைமைகளும் அதிகமானளவு காணப்படுகின்றன.
பல்லின சமுகங்கள் வாழும் இலங்கையில் ஒரு சமுகத்தை ஒடுக்கியோ அல்லது அழித்தோ இன்னொரு சமுகம் வாழ முடியாது அதிலும் இலங்கையைப் பொருத்தவரை இங்குள்ள சிறுபான்மைச் சமுகங்களை அனுசரித்தே செல்ல வேண்டும் அதிலும் முஸ்லிம் மக்கள் முக்கியமானவர்கள் ஏனென்றால் இலங்கைக்கு பல வழிகளிலும் பாரியளவு உதவி செய்யும் நாடுகளாக காணப்படுகின்றன. ஆனால் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது இனவாதிகள் கொலைகள் புரிந்துள்ளமை, சொத்துக்களை அழித்தமை உட்பட பல்வேறுபட்ட அநியாயங்களைச் செய்துள்ளனர் இவ்வாறான நிலையிலும் முஸ்லிம்கள் முஸ்லிம் நாடுகளுக்கு காட்டிக் கொடுத்ததில்லை.
காரணம் இந்த நாட்டு மக்கள் என்ற காரணத்தினால் அதனைச் செய்ய வில்லை மாறாக ஒன்றாகவே வாழ வேண்டும் என்ற கொள்கைகளிலேயே முஸ்லிம் சமுகங்கள் இருந்து வருகின்றனர். ஆனால் தேர்தல் காலங்களில் தாராளமாகவே முஸ்லிம் சமுகம் ஏமாற்றப்பட்ட துர்ப்பாக்கிய நிலையில் உள்ளனர்.
தேர்தல் வந்தவுடன் கடந்த காலங்களைப்போல் தேர்தல் வியாபாரங்கள் மூலம் மக்கள் மனங்களில் மாற்றங்களை மேற்கொண்ட காலம் தற்போது மாற்றமடைந்து மக்கள் சுயமாக சிந்தித்துள்ள நிலைமைகள் இனி மக்களை ஏமாற்ற முடியாத சந்தர்ப்பம்கள் தற்போது அவர்கள் தமது கைங்கரியங்களை மேற்கொள்ள முடியாத நிலைமைகள் தோற்றம் பெற்றுள்ளமையை கள நிலவரங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன.
இவ்வாறான நிலையில் தற்போது ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்களை ஒரு சில அரசியல் வாதிகள் அரசை ஆதரித்து முஸ்லிம்கள் வாக்களிக்க வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் அதிகமான முஸ்லிம் மக்கள் எதிரணிக்குரிய சாயலை கொண்டுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
இதற்குக் காரணம் ஒட்டு மொத்தமான முஸ்லிம் சமுகத்தின் எதிரிகளான பொதுபல சேனா உள்ளிட்ட சில இனவாதக் குழுக்கள் ஜனாதிபதி மஹிந்தவை ஆதரிப்பதன் காரணமாக முஸ்லிம்களின் எதிர் காலத்தை சிந்தித்து எதிரிகளுடன் இணைவது எவ்வாறு சாத்தியமாகும் என்ற நிலைமைகள் முஸ்லிம்களின் கனிசமான ஆதரவு எதிரணிக்கு தாவுவதற்கு வழி வகுத்து விட்டது எனலாம்.
அந்நியர் ஆட்சியில் இருந்து அரசுடன் இருந்த முஸ்லிம் அரசியல் தலைமைகள் எல்லோருமே சிங்கள மன்னர்களுக்கும், அரசியல் தலைமைகளுக்கும் விசுவாசமுள்ள தலைமைகளாகவே காணப்பட்டனர் ஆனால் இன்று பெரும்பான்மை அரசியல் தலைமைகளுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்களும், ஏனைய ஒரு சில அரசியல் வாதிகளும் விலை போனவர்களாக காணப்படுகின்றனர்.
இவ்வாறு விலைபோன அரசியல் வாதிகளால் ஆளுங்கட்சிகளுக்கு தமது ஆதரவுகளை வழங்கி இருந்த காலங்களில் மக்களுக்கு தம்மால் ஒன்றும் செய்து கொடுக்காத நிலையில் எதிர் காலத்திலும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியாத நிலைமையை உணர்ந்த மக்கள் தற்போது மாற்றத்தை நோக்கிய நகர்வுகளையும் காணக் கூடியதாகவுள்ளது.
குறிப்பாக இன்று பெரும்பான்மைக் கட்சியினருக்கிடையில் மக்களுக்குச் சேவை செய்ய முடியவில்லை என்ற காரணத்திற்காக அரச தரப்பில் இருந்து எதிர் கட்சிகளுக்கு மாறிக் கொள்ளும் நிலைமைகளும் எதிர்க் கட்சிகளில் ஆளுந்தரப்பிற்கும் ஒரு தொகையினர் மாறும் விடயம் நாளாந்தம் அதிகரித்த வன்னமேயுள்ளன.
மேற்படி நிலைமைகளுக்கு காரணமானவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்கள் மக்களின் நலன்களில் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லாது தமது சுகபோகங்களுக்கு அடிபணிந்தவர்களாக செயற்பட்டு வந்தமை மக்கள் மனங்களில் அரசியல் வாதிகளை விட்டு விலகும் துர்ப்பாக்கிய நிலைக்கு வழி வகுத்துவிட்டது.
எதிர் காலத்தில் முஸ்லிம் அரசியல் வாதிகள் அரசியல் நடத்த வேண்டுமானால் அவர்களின் மன நிலைமைகளை மாற்றி மக்கள் மனங்களுக்கும் அவர்களின் விருப்பு, வெறுப்புக்களுக்கு அமைவாக அரசியல் நடாத்தும் உறுதியான உத்தரவாதங்கள் வழங்கப்படும் பட்சத்தில் அதனைப்பற்றி மக்கள் சிந்திக்கும் ஒரு காலமாக மாறியுள்ளது.
எது எவ்வாறாக இருந்தாலும் ஒட்டு மொத்தமாக சிறுபான்மை மக்கள் தற்போது ஒரு முடிவிற்கு வந்துள்ளார்கள் என்ற விடயம் தற்போது சமுகத்தின் உள்ளார்ந்த விடயங்களில் இருந்து அறியக் கூடியதாகவுள்ளது.
எனவே தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அதனுடன் இணையும் முஸ்லிம் தலைமைகள் எதிர் காலத்தில் முஸ்லிம் சமுகம் மறைந்த முஸ்லிம் தலைவர்களின் வழி காட்டல்கள் மற்றும் கொள்கைகளுக்கு அமைவாக முஸ்லிம் சமுகத்தை வாழ்வதற்கு வழி சமைக்க வேண்டும் என்பதே அனைவரதும் எதிர் பார்ப்பாகும்.
Post a Comment