Header Ads



அல்லாஹ் நாடியவருக்கே, ஆட்சியும் அதிகாரமும்..!

ஆட்சியதிகாரம், நிர்வாகப் பொறுப்புகள், பதவி பட்டங்கள் என்பன அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட அமானிதங்கள், ஆதலால் அவற்றை உரிய முறையில் நிறைவேற்றுவது அவசியமாகின்றது. அவற்றைத் துஷ்பிரயோகம் செய்த நிலையில் மரணிப்போரின் மறுமை நிலையோ மகா பயங்கரமாகவே இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு எச்சரித்தார்கள்.

நுபுவ்வத்தின் பணியை பூரணமாக நிறைவேற்றி இஸ்லாமிய மார்க்கத்தின் ஒரே ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்த மாநபி(ஸல்) அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டார்கள் என்பதை இங்கு கூறத் தேவையில்லை. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உலகுக்கு உன்னத அரசியல் முன்மாதிரியை ஏற்படுத்திய மேதையாவார்கள். 

உத்தம நபி பெருமானாரின் நேர் வழி வந்த முஸ்லிம்களாகிய நாம் அரசியலை தூரப்படுத்தாமல் எமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக அரசியலை நோக்க வேண்டும். இதற்கான அடித்தளம் பள்ளிவாசல்களிருந்து அமைக்கப்படல் ஆரோக்கியமானதாகும். அரசியலையும் பள்ளிவாசலையும் தூரப்படுத்தும் சின்னத்தனமான சிந்தனைகளிலிருந்து எமது சமூகம் மீள்வதோடு, மார்க்கத்தை பூரணமாக கற்றுக் கொண்ட உலமாப் பெருமக்கள் இது குறித்த தெளிவுகளை மக்கள் முன் வைத்தல் காலத்தின் கட்டாயமாகும்.

தேரவாத அரசியலை இப்போதும் பெரும்பான்மை அரசியல் சக்திகள் பெரிதும் மதித்து போதிய அங்கீகாரமளித்திருப்பதை நாம் காண்கிறோம். அரசியல்வாதிகள் நெறி பிறழுகின்ற போது, அவர்களை தடுத்து நிறுத்தி, வழிப்படுத்தும் தன்மையை பௌத்த தேரவாதம் இன்றளவிலும் செயற்படுத்தி வருகிறது. அரசியல்வாதிகளும் அவர்களின் அறிவுறைகளுக்கு செவி சாய்த்து நடக்கிறார்கள். 

பெரும்பான்மை சமூகத்தின் நாற்பெரும் நிகாயாக்களான- ராமான்ய நிகாயா,அமரபுர நிகாயா, மல்வத்தை-அஸ்கிரிய போன்ற நிகாயாக்களை வெறுமனே ஆசி பெறும் இடங்களாக மாத்திரமன்றி, அரசியல் ஆலோசனைகள் பெறுகிற தலைமைப் பீடங்களாகவும் மதித்து, அரசியல் நகர்வுகளை முன்னெடுக்கின்றனர்.

ஆனால், முஸ்லிம்களாகிய நாம் மனம் போன போக்குக்கு எவ்வித எதிர்கால நலன்களையும் கருத்தில் கொள்ளாது- அரசியல் உரிமையை,வாக்குரிமையை வழங்கி விட்டு  பள்ளிவாசல்களை ஆசி பெறுகிற இடங்களாகவே பயன்படுத்துகிறோம். 

சமூகத்திற்கு இதய சுத்தியுடன் உழைக்க கூடிய நல்ல வேட்பாளர்களை தெரிவு செய்கிற இடமாகவும், வாக்காளர்களை ஒரு வழிப்படுத்துகிற இடமாகவும், இன்னும் அரசியல் சார்ந்து- மக்கள் நன்மை கருதி சிறப்பான ‘மசூறாக்களை’ ஏகமானதாக முடிவு செய்கிற இடமாகவும் பள்ளிவாசல்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்விடயத்தில் பள்ளிவாசல்கள் நிருவாகிகள், தொடர்புபட்ட சன்மார்க்க ஆசான்கள் கரிசனை கொண்டு சம்பந்தப்பட்டவர்களை வழிநடாத்துதல் காலத்தின் தவிர்க்க முடியாத உடனடித் தேவையாகும்.

ஒரு திறன்மிக்க அரசியல்வாதி அரசியலைப்பற்றிய சீரிய சிந்தனை கொண்டிருப்பது அவசியமாகும். அதாவது உலகின் நிகழ்வுகள் மற்றும் உலக நடப்புகள் பற்றிய பார்வையில் அவருக்கு என ஒரு கண்ணோட்டத்தை உருவாக்கி அதன் மூலம் அந்நிகழ்வுகள் மற்றும் நடப்புகளை பார்வையிட வேண்டும். 

அவ்வாறு அவரிடம் தனக்கென ஒரு கண்ணோட்டம்  இல்லாத பட்சத்தில் அடிக்கடி ஏற்படும் முரண்பாடான சூழ்நிலைகளில் பனிமூட்டத்தில் தெளிவில்லாத பார்வை உடையவரை போன்று அவர் குழம்பிப்போவார். அவருடைய குறிக்கோளை  அடையும் ஆற்றலை இழக்கும் நிலைக்கு ஆளாவார். மேலும் அவருடைய அரசியல் நிலை ஒழுங்கற்றதாகவும் மற்றும் முரண்பாடுகள் கொண்டதாகவும் இருக்கும். இதனால் முற்றிலும் பாதிக்கப்படுவது அவரை நம்பியிருக்கும் சமூகமேயாகும்.

இஸ்லாமிய அரசியல் வரலாற்றில் உமர் கத்தாப் (றழி) அவர்களின் பத்து வருட ஆட்சி காலத்தில் பத்து யுகங்களில் கூட சாதிக்க முடியாத சிறப்பம்சங்களை சாதித்து இஸ்லாமிய வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் தனக்கென ஒரு தனி இடத்தைப் பெற்றுக்கொண்டார்கள்.அன்னாரின் ஆட்சி முறை தான் இன்றைய ஜனநாயக பாரம்பரியத்துக்கு வித்திட்டதெனலாம்.

எனவே, அகில உலகத்திற்கும் ஜனநாயகம் எனும் ‘கிலாபத்’ ஆட்சியை நிலை நாட்டிய உமர் (ரழி) அவர்கள் உள்ளிட்ட உன்னத ஆட்சி புரிந்த உத்தம கலீபாக்கள் பலரின் வழி வந்த நாம் எமக்கான நேரிய அரசியல் பாதையை தேர்ந்தெடுத்தல் அவசியமாகும். முஸ்லிம்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்தவர்களாக, நாட்டின் தலைமை மீது நன்றி விசுவாசம் பாராட்ட வேண்டும். சகோதர சமூகத்தாருடன் சக வாழ்வில் ஈடுபட வேண்டும். 

பல்லின மக்கள் வாழும் நாட்டில் ஒரு சிறந்த இஸ்லாமியனின் வாழ்க்கை முறைமையும், பொது அரசியல் குறித்த பார்வையும் பரந்து பட்ட ரீதியில் அமைதல் வேண்டும். பல்லின நாட்டின் அரசியல் கலாசாரத்திற்கு ஈடு கொடுத்து முஸ்லிம்களுக்கு நன்மைகளை பெற்றுத் தரக் கூடியவர்களே, எதிர்வரும் காலங்களில் முஸ்லிம் அரசியல் நீரோட்டத்தில் பயணிக்க தகுதியானவர்கள். மாறி மாறி இனவாதங்களை பேசித் திரிந்து சமூகத்தை உசுப்பேற்றுவது ஆரோக்கியமானதல்ல. அவ்வாறன அரசியல் வாதிகளை நாம் புறக்கணிக்க வேண்டும்.

எனவே,தேசிய ரீதியான தேர்தல்களில் எமது சார்பாய் களமிறங்குகின்ற வேட்பாளர்கள் சமூகம் சார்ந்த கொள்கைகளுடன் - ஆத்மீக உணர்வு நிரம்ப பெற்றவராகவும், சமூகத்திற்கும் இனத்திற்கும் விசுவாசமானவர்களாகவும் இருக்கும் அதே வேளை சகோதர சமூகத்தின் நன்மதிப்பு பெற்றவராகவும் திகழ வேண்டும். சகிப்புத் தன்மையற்ற, பொறாமை மனப்பாங்கு கொண்ட, சமூக அங்கீகாரமில்லாத அரசியல்வாதிகளால் எமது சமூகத்திற்கு ஒரு போதும் விடிவு கிட்டாது என்பதை இத்தருணம் உங்களுக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

முழு உலகுக்கும் நேர்மையான அரசியல் சிந்தனைகளை வழங்கிய வேதத்தையுடைய எம்மால் எமக்குள்ளே ஒரு ஆரோக்கியமான அரசியல் மாற்றத்தை ஏன் ஏற்படுத்த முடியவில்லை? 

ஏற்படுத்தலாம். அதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும். வரட்டு வாதங்களை கை விட வேண்டும். இஸ்லாம் எமக்கு போதிக்காத முரண்பாடுகள் நிறைந்த அரசியல் அணுகுமுறைகளையும், மூர்க்கத்தனமான கொள்கை-கோட்பாடுகளையும் களைந்தெறிந்து எதிர்கால சந்ததியினரின் மகிழ்ச்சிக்காய் இன்றிலிருந்தே எம்மை நாம் தயார்படுத்த முனைய வேண்டும். 

ஒன்றுக்கும் உதவாத தலை கீழான அரசியல் சித்தாந்தம் எம்மிலிருந்து களையப்படுகின்ற போது எமதும் எமது நாளைய பரம்பரையினதும் வாழ்வு மென்மேலும் செழிக்கும் என்பதை உணரும் தருணமிதுவாகும்.

இதைவிடுத்து, எமது அரசியல் தலைமைகள் என அறியப்பட்டவர்களும்-புத்திஜீவிகளும்,சமூக ஆர்வலர்களும் ஹஜ் கோட்டாக்களுக்காகவும்-  ஈச்சம்பழங்களுக்காகவும் இனியும் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதில் சமூகத்திற்கு நன்மையேதும் கிட்டப் போவதில்லை. எமக்கான உலமா சபையும், முஸ்லிம் சமய திணைக்களமும் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்துதல் அவசியமாகும். 

அத்துடன் எமது உலமாப் பெருமக்கள்- மௌலவிமார்கள் வெறுமனே மார்க்க கல்வியை மாத்திரம் மையப்படுத்தி தங்கள் செயற்பாடுகளை நகர்த்தாமல் உலகக் கல்வியின் பாலும்  அக்கறை செலுத்துதல் காலத்தின் கட்டாயமாகும். மேலும், உலமாக்கள் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாடுகளை ஏற்படுத்துவதில் பின் நிற்காமல் என்றும் முன் நிற்க வேண்டும். 

மௌலவிமார்களும் இதர மார்க்க அறிஞர்களும் பள்ளிவாசல்களை மட்டும் சுமக்கும் மானிடப் பிறவிகளல்ல. அவர்கள் முழு சமூகத்தையும் சுமந்தவர்கள். சுமக்க கூடியவர்கள். எனவே, முஸ்லிம்களாகிய நாம் எமது வழிகாட்டிகளாகவும், எமது நல் வழிப்பாதையை செப்பனிடவும் தயார்படுத்தப்பட்டிருக்கும் உலமாப் பெருமக்களை மிகச் சிறப்பான முறையில் கண்ணியப்படுத்தி மதித்தல் அவசியமாகும்.

அந்தவகையில் எல்லோரது கண்ணியத்திற்கும், மதிப்புக்குரியவராகவும் திகழ்ந்த தீர்க்க தரிசனமிக்க சிந்தனைகள் நிறைந்த மாமனிதர் மர்ஹும் நியாஸ் மௌலவி அவர்களை இத்தருணம் நினைவுபடுத்துதல் சாலப் பொருந்துமென எண்ணுகிறேன். நியாஸ் மௌலவி அவர்கள் இந்த நாட்டின் தலைவர் முதற்கொண்டு அரச உயர் அதிகாரிகள், சர்வமத தலைவர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள்,சாதாரண குடிமக்கள் எல்லோரும் மிகவும் நேசித்து மதிக்கின்ற ஒரு உன்னத உலமாவாக திகழ்ந்தார்கள். இது நாம் கடந்த காலங்களில் கண்கூடாக கண்ட உண்மையாகும்.

கடந்த காலங்களில்   எமது முஸ்லிம்கள் கண்ணியப்படுத்தியதை விடவும், மரியாதை செலுத்தியதை விடவும் இந்த நாட்டின் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களாலும், சகோதர சமூகத்தினராலும் மர்ஹும் நியாஸ் மௌலவி அவர்கள் மிகச் சிறப்பான முறையில் கௌரவிக்கப்பட்டதை யாராலுமே மறைக்கவும் மறுக்கவும் முடியாது. 

மர்ஹும் நியாஸ் மௌலவி அவர்கள் சமூகத்திற்கு வழிகாட்டிய ஒரு உன்னத உலமாவாகவும், அரச தரப்பின் நம்பிக்கை பெற்ற ஓர் உன்னத மனிதராகவும் தன்னை நிலை நிறுத்தினார். அவர் தனது சுய தேவைகளுக்காக குடும்பத்திற்காக எதனையும் விட்டுச் செல்லவில்லை. மக்கள் நலன் குறித்தே நியாஸ் மௌலவி சதா சிந்தித்தார். ஆனால்,இன்று மர்ஹும் நியாஸ் மௌலவியின் குடும்ப நிலைமை பற்றி எமது தலைமைகளோ, சமூகமோ சிந்திக்கத் தயாரில்லை.

மேலும், உலமாக்களும் மக்கள் கண்ணியப்படுத்துமளவுக்கு மிகச் சிறப்பான முறையில் நடத்தல் அவசியமாகும். என்னைப் பொறுத்த வரை நான் செய்த ஆய்வுகளில் இருந்து பார்க்கின்ற போது மார்க்க கல்வி பயின்று ‘பெயிலான’ ஒரு மௌலவியையும் நான் சந்திக்கவில்லை. (மார்க்க கல்வியை பூர்த்தி செய்யாமல் அரை குறையில் ஓடி வந்த ‘அரை மௌலவிமாரை’ கண்டிருக்கிறேன்) எல்லோருமே ‘பாஸானவர்களாகவே’ இருக்கின்றார்கள்.

‘பெயில்’ என்றாலும் அவர்கள் ‘பாஸாக்க’ படுகிறார்கள். விரும்பியோ விரும்பாமலோ அவர்களையும் நாம் பின்பற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டு விடுகிறது. இது எமது சமூகத்தின் ஜீரணிக்க முடியாத துரதிஷ்டமாகும்.உலகக் கல்வியில் ‘பெயில்’ என்றால் ‘பெயில்’ தான். ஆனால், மௌலவிமார்களில் ‘பெயிலானவர்கள்’ இல்லை. எனவே, சித்தியடையாத ஒரு சில உலமாக்களாலும்- அவர்களது வழிகாட்டல்களாலும் எமக்கு எதுவித நன்மைகளும் கிடைக்காது. இவ்விடயம் குறித்து முஸ்லிம் சமூகம் ‘சீரியஸாக’ சிந்தித்து தீர்வு காண வேண்டும்.

இஸ்லாமியக் கடமைகள், ஒழுக்கம் மற்றும் பண்பாட்டுப் போதனைகள், நடத்தை சார்ந்த விஷயங்கள் போன்ற துறைகளில் வழி காட்டிய அண்ணல் நபி(ஸல்) அவர்கள், தன்னை ஒரு ஆன்மீகவாதியாக அடையாளப்படுத்திய அதே நேரம் தான் ஒரு முன்மாதிரி மிக்க அரசியல்வாதி என்பதையும் நிரூபித்து விட்டே சென்றிருக்கிறார்கள். தனக்கிருந்த ஆன்மீகப் பலத்தை வைத்து அரசியல் இலாபம் பெற அவர்கள் ஒரு போதும் முற்படவில்லை.

எனவே, முன்மாதிரி மிக்க அரசியல் பலத்தை நாம் எல்லோரும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும். அதற்கு எமக்கு முன் இருக்கிற தடைகள் என்னென்ன என்பதை ஆராய்ந்து, அதன்படி செயற்படல் அவசியமாகும். சந்தேகங்கள் களையப்பட்ட  நடு நிலையான ஒரு அரசியல் பாதையை முஸ்லிம்கள் தேர்ந்தெடுத்து பயணித்தல் மிக முக்கியமானதாகும்.

யாருடன் அரசியலில் கை கோர்ப்பது? எவ்வாறு கை கோர்ப்பது? போன்ற கேள்விகள் எம்மை துளைத்தெடுக்கலாம். இலங்கையைப் பொறுத்தவரை, மேலாதிக்க சிந்தனை கொண்டவர்களாய் இருப்பவர்களில் யாரால் முஸ்லிம்களுக்கு நன்மைகள் அதிகம்? என்கிற கேள்வி ஒன்றின் ஊடாக இலகுவான முடிவொன்றை நாம் பெற்றுக் கொள்ள முடியும். சாதுரியமாக சிந்தித்து செயலாற்ற வேண்டிய ஒரு தீர்வு மாத்திரமே இன்று எமக்கு முன்னால் இருக்கிற ஆகச் சிறந்த தெரிவாகும்.

அந்த வகையில், தீர்க்க தரிசனமாய் சிந்திக்க கூடிய ஒவ்வொருவருக்கும் மஹிந்த ராஜபக்‌ஷ எனும் தெரிவு இலகுவானதும்- நன்மை பயக்க கூடியதுமாகும்.

ஆதலால், முஸ்லிம்கள்  இன்றைய சூழலில் அரசியல் மற்றும் இஸ்லாம் பற்றிய புரிந்துணர்வை கொண்டிருப்பது  மிகவும் அவசியமாகும். உலகின் அரசியல் நிகழ்வுகள் பற்றிய பார்வையில் இஸ்லாம் ஒரு சிறப்பான கண்ணோட்டத்தை வழங்கியிருப்பதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். 

எனவே,  இலங்கை முஸ்லிம்கள் ஆன்மிகப் பலம் கொண்ட ஒரு ஆளுமையுள்ள தலைமையை தங்களுக்கென தேர்ந்தெடுத்தல் அவசியமானதும் அவசரமானதுமாகும். சிறுபான்மையினராகிய நாம் பெரும்பான்மை சமூகத்தினரை அந்நியப்படுத்தாமல் அவர்களுடன் சகஜ உறவை பேணி வலுப்பட்ட சமூக நட்புறவை வெளிப்படுத்துகிற, அதற்கென எமது சமூகத்தை ஊக்கப்படுத்துகிற தலைமைகள் தான் இன்றைய நாட்களில் தேவைப்படுகின்றனர்.அவர்கள் யாரென இனம் காண வேண்டியதன் கடப்பாடு நம் ஒவ்வொருவர் கரங்களிலும் தங்கியிருக்கிறது.

குறுகிய சிந்தனைகளுடனும், குறுகிய நோக்கங்களுடனும், குறுகிய வட்டத்திற்குள்ளிருந்து யோசிக்கும் குறுகிய ஈமான் கொண்டவர்களை நாம் தலைவர்களாக சிம்மாசனங்களில் எற்றி, அழகு பார்த்து, கடைசியில் முஸ்லிம்களுக்கு எஞ்சியது எதுவென்று நாம் சிந்திப்போமா? நிச்சயமாக, ஆற அமர இருந்து சிந்திக்க வேண்டிய தருணமிதுவாகும்.

 உப்புச் சப்பற்ற- சுயநல அரசியல் செய்த, செய்து கொண்டிருக்கிற- ஒரு சில முஸ்லிம் தலைவர்களால் மாற்று இனத்தாரிடமிருந்து எதிர்ப்பலைகளையும், முஸ்லிம் விரோதப் போக்கையும் தவிர நாம் வேறேன்ன பெரிதாக சம்பாதித்திருக்கின்றோம்..?இதனை காலம் கடந்த ஞானமாக முஸ்லிம்கள் சிந்திக்க தலைப்பட்டு விட்டார்கள். இது எமக்கான ஆரோக்கிய அரசியலை நோக்கிய பயணத்தின் ஆரம்பமாகும்.

ஆதலால்,நடந்தவைகள் எல்லாம் அல்லாஹ்வின் ஏற்பாடாகும். நம்மை நாம் செப்பனிட்டுக் கொள்ளவும் படிப்பினை பெறவும், எமது பிழைகளை திருத்திக் கொள்ளவும் அல்லாஹ் வழங்கிய மிகப் பெரிய சந்தர்ப்பமாக இவற்றை நாம் பார்க்க வேண்டும். 

எது எப்படியாயினும், அல்லாஹ் தான் நாடியவனுக்கே- விரும்பியவனுக்கே ஆட்சிப் பொறுப்பை கையளிப்பான். அல்லாஹ்வின் தீர்ப்பை நாம் மனமுவந்து ஏற்றுக் கொள்ள் வேண்டும்.

எனவே, பகைமையுணர்வை மறந்து கசப்புணர்வுகள் நீங்கி நமது சமூகத்தின் நலனிலும் நாட்டின் சுபீட்சத்திலும் அதிக கரிசனை கொண்ட தலைமையிடம் நாட்டை ஒப்படைத்து, வளமான தேசத்தையும் நிலையான நிம்மதியையும் பெற்றுக் கொள்வோம். 

No comments

Powered by Blogger.