Header Ads



எம்மீது வீண்பழி சுமத்துவோர், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் - ரிசாத் பதியுதீன்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து எமது கட்சி இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை என சுட்டிக் காட்டியுள்ள அ.இ.ம.கா தேசியத் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீன், நாம் உத்தியோகபூர்வமாக முடிவுகளை அறிவிக்கும் வரை கட்சி தொடர்பில் வரும் செய்திகளை நம்பவேண்டாம் என்றும் மக்களிடம் பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் தலைவர் ரிசாத் பதியுதீன் இன்று ஞாயிறு நன்பகல் வேளை விடுத்துள்ள அறிக்கை வருமாறு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இதுவரை எந்த முடிவுக்கும் வரவில்லை இதைவிடுத்து அபாண்டமான முறையில் சிலர் தத்தமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக சில பொய்யான செய்திகைள பரப்பி விடுகின்றனர்.

அரச தரப்பினர் தமக்கு சார்பான அரச ஊடகங்களிலும் மேலும் சிலர் இணையத்தளங்களிலும் இவ்வாறாக அ.இ.ம.கா தொடர்பில் பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு பரப்பப்படும் பொய்ச் செய்திகளை உண்மையென நம்பிக்கொள்ளும் எமது முஸ்லிம் சமுகத்தில் உள்ள சிலர் என்மீதும் அ.இ.ம.கா மீதும் அபாண்டமானதும் அருவருக்கத்தக்கதுமான கருத்துக்களை பதிவிடுவது மிகவும் வேதனைக்கும் கண்டனத்திற்குரியதுமாகும். அப்படிப்பட்டவர்களிடம் நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.அதாவது அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்பதாகும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்த சமுகத்திற்கு துரோகம் இழைக்கக் கூடிய அல்லது சமுகத்தை நற்றாற்றில் விட்டுச் செல்கின்ற எந்தவொரு செயற்பாட்டையோ அல்லது தீர்மானத்தையோ இதுகாலவரை எடுத்தது கிடையாது என்பதை பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நாடுபூராகவும் உள்ள   கட்சிப்போராளிகளிடமும் உலமாக்கள் மற்றும் சமுகத்தில் உள்ள கல்வி மான்களிடமும் கருத்துக்களை கேட்ட வண்ணமே உள்ளோம். இன்று கூட புத்தளம் மற்றும் ஏனைய பகுதி மக்களை எமது கட்சி சந்தித்து கலந்துரையாடவுள்ளது. அத்தோடு நாடு பூராகமுள்ள கட்சியின் மக்கள் பிரதிநிதிகளையும் இறுதியாக சந்தித்து அவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்பே கட்சி ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரும்.

இவ்வாறு அ.இ.ம.கா வின் நிலைப்பாடு இருக்கத்தக்கநிலையில் கட்சிக்கு எதிரான சிலர் தமது அரசியல் இலாபங்களுக்காக என்னையும்  கட்சியையும் மக்கள் மத்தியில் தவறாக எடுத்துக் காட்டி வீன்பழிகளை எம்மீது சுமத்திக் கொண்டிருக்கின்றனர்.

எனவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளது. அதனை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது. அதன் பிற்பாடே கட்சியின் முடிவு அறிவிக்கப்படும் என்பதை கூறிக் கொள்வதோடு எம் மீது வீண்பழிகைளை சுமத்துவோர் அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு மீண்டும் கேட்டுக் கொள்வதாகவும் தலைவர் ரிசாத் பதியுதீன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்

1 comment:

Powered by Blogger.