றிஸாத் பதியுதீன் அவர்களுக்கு..!
M.A முஸ்தபா ஆசிரியர்
ஓட்டமாவடி.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர் என்ற வகையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நமது கட்சியின் நிலைப்பாடு தொடர்பான எனது சந்தேகங்களுக்கு தங்களிடமிருந்து தெளிவான விளக்கத்தினை எதிர்பார்க்கிறேன்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் எமது கட்சி இதுவரை எந்த தீர்மானத்துக்கும் வரவில்லையென்பதும்,இது தொடர்பாக பல்வேறு தரப்பினரதும் அபிப்பிராயங்களை உள்வாங்கி அதற்கிணங்கவே இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளதும் அனைவரும் அறிந்த விடயங்கள்.கட்சியின் தலைவரான நீங்கள் ஒரு அமைச்சராக இருந்தும் கூட இதுவரை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான எந்தவொரு பிரச்சாரக் கூட்டத்திலும் கலந்து கொள்ளாமல் விலகியிருப்பதன் மூலம் இதனை நன்கு உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள்.
ஆனால் கட்சியினதும்,தலைவரினதும் நிலைப்பாடு இவ்வாறு இருக்க, நமது கட்சியின் பிரதித் தலைவரும், பிரதியமைச்சருமான சகோதரர் ஹிஸ்புல்லா அவர்களின் செயற்பாடுகள் கட்சியின் நிலைப்பாட்டுக்கு முற்றிலும் மாற்றமாக அமைந்திருப்பதோடு மட்டுமல்லாமல், கட்சியினதும், உங்களினதும் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருப்பதோடு கட்சி ஆதரவாளர்களிடத்தில் கட்சி பற்றிய அவநம்பிக்கையையும் தோற்றுவித்திருக்கிறது.
சகோதரர் ஹிஸ்புல்லா அவர்கள் கட்சியின் நிலைப்பாட்டை மீறும் வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக தனது முழுமையான பிரச்சாரப்பணிகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார். மட்டக்களப்பு தொகுதிக்கான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் முகவராக நியமிக்கப்பட்டுள்ளதோடு மாத்திரம் அல்ல காத்தான்குடியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் காரியாலயத்தையும் சகோதரர் ஹிஸ்புல்லா திறந்து வைத்துள்ளார்.
காத்தான்குடியிலுள்ள கண்ணியத்துக்குரிய உலமாக்களையும் அழைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்திருக்கிறார்.(காத்தான்குடி உலமாக்கள் அதற்கு மாற்றமான நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்பது வேறு விடயம்).நாளை வெள்ளிக்கிழமை (19.12.2014) ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ள பிரச்சாரக் கூட்டத்துக்கும் ஆட்கள் சேர்த்துக் கொண்டிருக்கிறார்.
கட்சியின் பிரதித் தலைவரின் இவ்வாறான செயற்பாடுகளால் கட்சி ஆதரவாளர்களும், பொதுமக்களும் கட்சியின் மேல் நம்பிக்கையிழந்து போயிருக்கிறார்கள். ஶ்ர முஸ்லிம் காங்கிரஸ்கூட ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரையும் எவ்வித தீர்மானங்களையும் எடுக்காத போதிலும் அதன் முக்கிய உறுப்பினர்கள் அமைச்சர்கள் உட்பட யாரும் இதுவரை எவ்விதமான தேர்தல் பிரச்சாரங்களிலும் ஈடுபடாமல் கட்சியின் முடிவுக்காக காத்திருக்கின்ற ஒரு முன்னுதாரணத்தையும் இங்கு உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இந்நிலையில் கட்சியின் தேசியத் தலைவர் என்ற வகையில் சகோதரர் ஹிஸ்புல்லாவின் கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளை நீங்கள் மறைமுகமாக அங்கீகரிக்கிறீர்களா?
ஆம் என்றால்,
ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு?
இல்லை என்றால்,
கட்சியின் தீர்மானங்களை பகிரங்கமாக மீறியுள்ள சகோதரர் ஹிஸ்புல்லாவுக்கெதிராக தாங்கள் எடுக்கவுள்ள ஒழுக்காற்று நடவடிக்கைகள் என்ன? எப்போது?
எனது இந்த நியாயமான சந்தேகங்களுக்கு தங்களின் பகிரங்கமான விளக்கத்தினை விரைவாக முன்வைப்பதன் மூலம் என்னைப்போன்ற ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் உங்கள் மேல் வைத்துள்ள நம்பிக்கையை தொடர்ந்தும் பாதுகாக்க உதவுமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
This is called "Sri Lanka Makkal Banana Party"
ReplyDelete