குண்டர்களை பயன்படுத்தியே, அரசாங்கம் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது - மைத்திரி
மக்கள் சக்தியை விடவும் பெரிய சக்தி எதுவும் கிடையாது என ஜனாதிபதி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
உடுநுவரெ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரச அதிகாரம், பண பலம், குண்டர் கூட்டங்களின் அதிகாரம் போன்றவற்றைப் பயன்படுத்தி அரசாங்கம் தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது.
எனினும், இந்த அனைத்து சக்திகளை விடவும் மக்கள் சக்தி வலுவானது என்பது எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி வெளிச்சமாகிவிடும்.
தற்போதைய அரசாங்கம் மாநாயக்க தேரர்கள், அரச அதிகாரிகள், அமைச்சர்கள் கூறும் அறிவுரைகளுக்கு செவி சாய்ப்பதில்லை.
வீட்டில் உள்ள சிறிய இளவரசர் கண்டியில் கார் பந்தயம் வைக்க வேண்டுமென தந்தையிடம் கோரியவுடன், மாநாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்காது கண்டியில் கார் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.
வடக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு அனைவரும் வரவேற்பை வெளியிட்டனர்.
ஆரம்பத்தில் ஒரு கிலோ மீற்றர் அமைப்பதற்கு 44 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டது. இதனை அமைச்சர் டலஸ் அழப்பெரும முன்மொழிந்திருந்தார்.
எனினும் திட்டத்திலிருந்து அமைச்சர் அழப்பெருமவை நீக்கி புதிய திட்டமொன்று உருவாக்கப்பட்டது. அதற்கு அமைய ஒரு கிலோ மீற்றர் அமைக்க 340 மில்லியன் ரூபா செலவாகும் என அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு தரகுப் பணம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது. சட்டம் நிலைநாட்டப்படும் என கூறும் அரசாங்கம் வீதி ஓரங்களில் பாரியளவில் கட் அவுட்களை வைத்துள்ளது.
இப்படி கட்அவுட் வைப்பது சட்டத்தை பாதுகாப்பதாக அமையுமா என மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.
Post a Comment