பழமையான நீர் பூமிக்கடியில் கண்டுப்பிடிப்பு
நிலத்துக்கு கீழே மிகவும் ஆழத்தில் உள்ள பாறை இடுக்குகளில் காணப்படுகின்ற உலகின் மிகப் பழமையான தண்ணீர், நாம் ஏற்கனவே நினைத்ததை விட மிகவும் அதிகமான அளவுகளில் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூமிக்கடியில் பல கிலோமீட்டர்கள் ஆழத்தில் 100 கோடி ஆண்டுகள் கணக்கில் பழமையான இப்படியான தண்ணீர் காணப்படுகிறது. 11 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் என்ற அளவில் இந்த பழைய தண்ணீர் இருக்கலாம் என ஆய்வாளர்கள் தற்போது கணித்துள்ளனர். பூமிக்கடியில் கிலோமீட்டர்கள் ஆழத்தில் இந்த தண்ணீர் இருந்தும், தண்ணீருக்கும் பாறைகளுக்கு இடையிலான நடக்கின்ற ரசாயன மாற்றங்களால் ஹைட்ரஜன் வாயு உருவாவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹைட்ரஜன் என்பது சில வகை நுண்ணுயிர்களின் உணவு ஆதாரமாக இருக்கிறது.
எனவே இவ்வளவு ஆழமான இடங்களிலும், உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியம் இருப்பதை இது சுட்டிக்காட்டுகிறது. பழைய தண்ணீர் பற்றி ஆய்வு செய்துள்ள விஞ்ஞானிகளில் ஒருவரான ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கிறிஸ் பல்லென்டின் பழைய தண்ணீர் பற்றி பிபிசியிடம் விளக்கினார். இந்த தண்ணீர் மிகவும் அதிகமான உப்புத்தன்மை கொண்டுள்ளது என்றும் அதில் யாரும் விழுந்தால் சாவுக் கடலைப் போல மிதப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பூமிக்கு அடியில் கிட்டத்தட்ட இரண்டரை கிலோமீட்டர்கள் ஆழத்தில் கண்டெடுக்கப்பட்ட தண்ணீர் 250 கோடி ஆண்டுகள் பழமையானது என ஆய்வுகள் காட்டியுள்ளன. இதுவரையில் பூமியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மிகப் பழமையான தண்ணீர் இதுதான்.
Post a Comment