ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பகிரங்கக் கடிதம்
புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்
(பிரதம ஆசிரியர் - 'வார உரைகல்'
இன்றைய தினம் நீங்கள் எமது காத்தான்குடி நகருக்கு வருகை தருவதையறிந்து இந்நகரத்தின் மக்களாகிய நாங்கள் மிக்க மகிழ்ச்சியுடன் உங்களை வரவேற்கின்றோம்!
இவ்வாறுதான் நீங்கள் உங்களது இரண்டாவது ஜனாதிபதிப் பதவிக்காகப் போட்டியிட்ட வேளையிலும் 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை எமதூருக்கு வருகை தந்தீர்கள். அவ்வாறு வந்த நீங்கள் எமது புதிய காத்தான்குடியில் புலிகளால் ஒரு போதும் எங்களைத் தாக்க முடியாத வகையில் ஜெரூஸலேம் நகரிலுள்ள புனித மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலின் வடிவத்தில் ஒரு பாரிய பள்ளிவாசலை அமைத்துத் தருவதாக இந்த ஊர் மக்கள் முன்னிலையில் பகிரங்கமாக உறுதிமொழி அளித்து அப்பள்ளிவாசலுக்கான மும்மொழிகளிலுமான நினைவுக் கற்களையும் நாட்டி வைத்தீர்கள்.
தேசியப் பத்திரிகைகளிலும், இலத்திரணியல் ஊடகங்களிலும் ஜனாதிபதி நிதியிலிருந்து இப்பள்ளிவாசலை முஸ்லிம் மக்களுக்காக காத்தான்குடியில் நிறுவிக் கொடுக்கவுள்ளதாகவும் அப்போது நீங்கள் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களின் வாக்குகளையும், ஆதரவுகளையும் பெற்றுக் கொண்டீர்கள்.
ஆனால் அவ்வாறு நீங்கள் வந்து நினைவுக் கற்களை நாட்டி, பகிரங்கமாக வாக்குறுதியளித்து, தேசிய மட்டத்தில் பிரச்சாரப்படுத்தி, ஜனாதிபதித் தேர்தலிலும் 19 இலட்சம் அதிகப்படியான அமோக வாக்குகளால் வென்று நான்காண்டுகள் இந்த நாட்டின் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாக ஆட்சி செய்து முடித்துள்ள நிலையில் இன்று மீண்டும் எமதூருக்கு உங்களின் மூன்றாவது தவணைக் காலத்திற்காக இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே ஆணை கேட்டு எமதூருக்கு வருகின்றீர்கள். மீண்டும் நாம் வரவேற்கின்றோம்!
இந்த, நான்காண்டு காலத்திலும் நீங்கள் வாக்குறுதியளித்த, நீங்கள் நினைவுக்கல் நாட்டி வைத்த, எமது பள்ளிவாசல் கட்டி முடிக்கப்படவில்லை என்பதோடு, கடந்த நான்காண்டு காலத்திலும் பள்ளிவாசலாக வக்பு செய்யப்படாத தனியார் காணியில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள இடமொன்றில்தான் எமது மக்கள் இறைவழிபாட்டினை மேற்கொண்டும் வருகின்றனர்.
அண்மையில் நீங்கள் 'இலங்கை முஸ்லிம்கள் அனைவரையும் புனித மக்காவுக்கு அனுப்பி ஹஜ் கடமையைச் செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன்' என்று கூறியதற்கமைய, அதனைக் கணக்கிட்ட ஆய்வாளர்கள் இலங்கை முஸ்லிம்களின் எண்ணிகை;கையின்படி அந்த வாக்குறுதியை நீங்கள் நிறைவேற்றி முடிப்பதற்கு இன்னும் 300 வருடங்கள் இந்த நாட்டின் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என்ற அறிக்கைகளை ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர்.
இதுபோலவேதான், எமது புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலைக் கட்டி முடிப்பதற்காகவும் இன்னும் எத்தனை பதவிக்காலத்திற்கு நாங்கள் உங்களுக்கு எமது ஆணைகளைத் தர வேண்டி இருக்குமோ? எனத் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றோம்.
எங்களுரில் இதற்கு முன்னர் இதனைவிடப் பெரிய பள்ளிவாசல்களை எல்லாம் எமது முஸ்லிம் சமூகத்தின் தனவந்தர்கள், பொதுமக்களின் ஆதரவுடனும் பங்களிப்புக்களுடனும் எமது முன்னோர் இந்நகரில் கட்டியுள்ளனர். இப்போதும்கூட நீங்கள் நினைவுக் கல் நாட்டி ஆரம்பித்து வைத்து நான்காண்டுகளாக அரைகுறையாகக் காட்சி தந்து கொண்டிருக்கின்ற புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப்பள்ளிவாசலுக்குப் பின்னர் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்ட எமதூரின் பிரதான வீதியிலுள்ள அஸ்ஸெய்யிது ஜெயின் மௌலானா பள்ளிவாசல், தனது அடித்தள நிர்மானத்திலிருந்து மீண்டெழுந்து தற்போது அதன் இரண்டாம் தளத்துப் பணிகளை ஆரம்பித்துள்ளது.
எனவே, எமது மக்களின் கவனத்திற்கு உங்களால் வழங்கப்பட்ட இரண்டு பகிரங்கமான வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் நிலுவையாக இருப்பதை இத்தருணத்தில் சுட்டிக்காட்டுவதற்கு இவ்வூரின் நலவுரிமைகளில் கடந்த பத்தாண்டுகளாக் கவனத்தைச் செலுத்திவரும் ஊடகம் என்ற வகையில் நாம் தங்களின் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம்.
முதலாவது: தங்களின் முதலாவது ஜனாதிபதி பதவிக்காலத்துக்கான வேட்பாளராக 2005ம் ஆண்டில் இந்த ஊருக்கு நீங்கள் முதன்முதலாக வருகை தந்தபோது, உங்களின் தேர்தல் முகவராகவும், உங்களின் அரசாங்கத்தின் பிரதியமைச்சராகவும் இருந்து இன்று உங்களை வரவேற்கும் எமது சகோதரர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்கள் அன்று மிகக் கடுமையாக உங்களின் வருகையை எதிர்த்துச் செயற்பட்ட போதிலும் நீங்கள் மிகத் துணிச்சலுடன் எமதூருக்கு வந்து காத்தான்குடி மத்திய கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற உங்களின் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து நீங்கள் தெரிவித்த மேலதிக முஸ்லிம் பிரதேச செயலாளர் பிரிவு எனும் வாக்குறுதி இன்னமும் தங்களால் நிறைவேற்றப்படவில்லை என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.
இரண்டாவது: நீங்கள் 2010.01.10ம் திகதியன்று நினைவுக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்த மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் வடிவிலான எமது புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மானப் பணிகளின் இன்னமும் பூர்த்தியாக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இந்நிலைமையுடன், கிழக்காசியாவிலேயே குறுகிய நிலப்பரப்பில் கூடுதலான மக்களைக் கொண்டுள்ள எமது காத்தான்குடிப் பிரதேசத்தில் தினமும் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை எடுத்துச் சென்று கொட்டுவதற்காக இந்த மட்டக்களப்பு மாவட்டத்தில் குறைந்த பட்சம் இரண்டு ஏக்கர் புறம்போக்குக் காணி தானும் தங்களது இரண்டு தவணைக்கால ஆட்சியின்போதும் எமது மக்களுக்கு வழங்கப்படாத நிலையில் நாங்களே வீட்டுக்கு வீடு 500 ரூபா வீதம் பணம் கொடுத்து எமது நெருக்கடிமிக்க இந்த ஊருக்குள் ஒரு காணியை வாங்கி எமது தேவையை நறைவேற்றிக் கொண்டுள்ளோம் என்பதையும் இத்தருணத்தில் மிகப் பெருமையுடன் உங்களுக்குச் சொல்லிக் கொள்கின்றோம்.
இந்நிலையில், எமது திண்மக்கழிவுப் பிரச்சினைக்குக்கூட தங்களின் ஆட்சிக்காலங்களில் சதவீதத் தீர்வினையும் காண முடியாமல் எங்களுக்குள்ளும், நீதிமன்றங்களிலுமாகச் சச்சரவுப்பட்டுக் கொண்டிருக்கும் நாம் தங்களின் மூன்றாவது பதவிக்காலத்திற்கும் இன்னுமொருமுறை உங்களுக்கு வாக்களித்து எதனைப் பெற்றுக் கொள்ளப் போகின்றோம் என்பது குறித்தே இன்றளவும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்குத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் முக்கியமாக, எமது நகரின் வடக்கு மற்றும் தெற்கு எல்லைகளைத்தானும் இன்னமும் தங்களின் அரசாங்கமானது எல்லை நிர்ணயம் செய்து எமது மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்;வு காணாமல் வெறுமனே காலத்தைக் கடத்தி வந்துள்ளது என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
மாத்திரமன்றி, எமது நகரின் பிரதான வீதி மற்றும் கடற்கரை வீதி என்ற இரு வீதிகளையும் தவிர ஏனைய அனைத்து வீதிகளும் எமது மக்களின் போக்குவரத்திற்கு லாயக்கற்ற வகையில் பள்ளமும் வெள்ளமுமாகவே தங்களின் இரண்டு பதவிக்காலத்திலும் தொடர்ந்தேர்ச்சையாக இருந்து வருவதையும் நாம் உங்களின் கவனத்திற்கு முன்வைப்பதோடு, இவ்வூரில் கொங்றீட் வீதிகளாக இடப்பட்டுள்ள சகல வீதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதும், வடிகான்கள் எதுவும் உரிய முறையில் பாதுகாப்பு மூடிகள் இடப்படாமலும், தண்ணீர் வடிந்தோடாத வகையிலுமே நிர்மாணிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.
எனவே, நீங்கள் பதவியிலிருந்த இரண்டு தவணைக் காலத்திலும் பல்லாயிரம் கோடி ரூபாய்களைச் செலவிட்டு எமது பிரதேசத்திற்கு அபிவிருத்திகளைச் செய்திருப்பதாக அடிக்கடி ஊடகங்கள் வாயிலாக போலி அறிக்கைகள் விடுவிக்கப்படுகின்ற போதிலும், உண்மையில் எமது காத்தான்குடிப் பிரதேசத்தில் அவ்வாறு மக்கள் பயன்படும் அளவுக்கு உங்களது அரசாங்கம் ஒதுக்கிய நிதிகள் முறையாகச் செயற்படுத்தப்படவில்லை என்பதை மிக இறுக்கமாகவும், உருக்கமாகவும் இப்பிரதேசத்தின் தனித்துவமான பத்திரிகை என்ற வகையில் நாம் தெரிவிப்பதோடு, இதனை நிரூபிப்பதற்கும் இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், வெளியீட்டாளனுமாகிய நான் எந்த வேளையிலும் தயாராகவே இருக்கின்றேன்.
எனவே, எமது பிரதேசத்திற்கு தாங்கள் ஜனாதிபதி வேட்பாளராகவும், ஜனாதிபதியாகவும் வருகை தருகின்ற வேளையில், பத்திரிகை மூலம் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டப்படும் இவ்விடயங்களில் உண்மை இல்லாமல் இருக்காது என்றளவுக்கான உண்மையையாவது நீங்கள் உணர்ந்து கொள்ளாது எமது நகரை விட்டுச் செல்ல மாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு மக்கள் சார்பான இப்பகிரங்க மடலை நிறைவு செய்கின்றேன்.
Post a Comment